மீண்டும் ஒரு சந்தோஷம்.
வெளி நாடுகளில் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்பவர்களின் பெற்றோர் ஏக்கம்
சென்ற முறை நான் என்னவள் வீட்டிற்குச் சென்ற சமயம் அவளுடன் மனம் விட்டு சரளமாகப் பேச முடியவில்லை என்னும் ஏக்கத்துடன் திரும்பிய படியால் மீண்டும் ஒரு முறை என்னவளைச் சந்திக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் ஆறு மாதங்கள் கழித்து அவளது வீட்டிற்குச் சென்றேன். பழைய வீட்டில் தான் இருந்தார்கள். புது வீடு கட்டி முடிந்து விட்டது ஆனால் இன்னமும் குடியேறவில்லை.
நான் வீட்டில் நுழையும் சமயம் என்னவளும் மருமகளின் வளர்ப்புத் தாயாரும் மட்டுமே இருந்தார்கள். விசாரித்தமைக்கு மருமகளை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சேர்த்துள்ளோம். இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் பிறந்து விடும் என்று சொல்கின்றார்கள் என்று தெரிவித்தார்கள்.
என்னவள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள். அந்த சமயம் அவளது மருமகளின் வளர்ப்புத் தாயார் சமையல் முடியும் வரையில் நான் உங்களுடன் பேசலாமா என்று கேட்டார். அதில் என்ன தயக்கம் நான் அதற்குத் தானே வந்திருக்கின்றேன் என்று சொன்னேன்.
அப்போது சமையலறையில் இருந்த என்னவளை அழைத்து என்னருகில் நிற்கச் சொல்லி திடீரென நம் இருவர் காலிலும் விழுந்து விட்டார்கள். நமக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒவ்வொரு பெண்ணிற்கும் தலைப்பிரசவம் தாயார் வீட்டில் தான் நடக்கும். நான் என்னுடைய வளர்ப்புப் பெண்ணின் முதல் பிரசவத்தை காஞ்சிபுரத்தில் உள்ள என்னுடைய வீட்டில் வைத்துக் கொள்ள ஆசைப் பட்டேன். ஆனால் என்னுடைய பிள்ளைகள் அவளது தந்தை நம்முடைய வீட்டில் வேலை பார்க்கும் சமயம் அகால மரணமடைந்த ஒரே காரணத்தால் தான் நாங்கள் கருணை அடிப்படையில் நமது சொந்த செலவில் திருமணம் செய்ய சம்மதித்தோம். நமக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவு முறையும் கிடையாது என்று சொல்லி என்னை அழ வைத்து விட்டார்கள்.
உங்களை நான் முதன் முறையாக சந்தித்த சமயம் எனது பிள்ளைகளின் உண்மையான மன நிலையினை தெளிவான முறையில் எடுத்துச் சொன்னீர்கள். என் பிள்ளைகள் என்னுடைய ஆசைகளை நிறைவேற்ற மறுத்து விட்டார்கள். மனித மனங்களைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. மனித நேயமும் அவர்களுக்கு இல்லை
காசு பணம் என்றும் சொத்து சுகம் என்றும் ஆசைப் பட்டு உண்மையான அன்பினை இழக்கின்றார்கள். எனவே நான் இனிமேல் இங்கு இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு எனது வீட்டிற்கான பூட்டிற்கு ஐந்து சாவிகள் தயார் செய்து வெளி நாடுகளில் வசிக்கும் என்னுடைய நான்கு மகன்களுக்கும் தபால் மூலம் நான்கு சாவிகளை அனுப்பி விட்டேன். என்னிடம் ஒரு சாவியினை வைத்துக் கொண்டேன்.
எனது மருமகள்கள் கர்ப்பமாக இருக்கும் சமயம் ஒரு பேரன் பேத்தியைக் கூட இந்தியாவில் பெற்றெடுக்கவில்லை. காரணம் கேட்டால் இந்தியாவிற்கு வந்து குழந்தை பெற்றுக் கொண்டு வெளி நாடு செல்வோமேயானால் அந்த நாட்டின் குடியுரிமை குழந்தைகளுக்குக் கிடைக்காது என்று சொல்லி மருமகள்களின் பெற்றோர்களை வெளி நாடுகளுக்கு வரவழைத்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். என்னையோ என் கணவரையோ ஒரு மகன் கூட ஒரு முறை கூட தங்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம் அழைக்கவில்லை. இதனால் நமது பேரன் பேத்திகளை பிறந்தவுடன் கண்ணால் காணும் பாக்கியம் நம் இருவருக்கும் கிடைக்கவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார்கள்.
நான்கு மகன்களுக்கும் பேரன் பேத்திகள் இருந்தும் ஒரு குழந்தையைக் கூட பிறந்தவுடன் என் கரங்களில் எடுத்துப் பார்த்ததில்லை எனவே நான் முதன் முதலாக என்னிடம் வளர்ந்த பெண்ணின் குழந்தையை என் கைகளில் ஏந்தும் பாக்கியத்தினைப் பெற்றுள்ளேன் என்று சொன்னார்கள். அந்த பாக்கியத்தினை ஏற்படுத்தி தந்தமையாலும் நீங்கள் இவர்கள் மூலம் எனக்கு அறிமுகமான படியாலும் தான் நான் உங்கள் இருவர் காலிலும் விழுந்தேன். என்னை விட வயது குறைந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை.
ஏனெனில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல் உள்ளதை உள்ளபடி எதனையும் மறைக்காமல் எதுவும் சொல்லத் தயங்காமல் என் குடும்ப உறுப்பினர்களின் உண்மையான மன நிலை பற்றியும் மேற்கொண்டு நான் என்ன செய்தால் கடைசி காலத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்பது பற்றியும் நீங்கள் சொன்ன அறிவுறை எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது என்று சொன்னார்கள்.
இந்த நேரத்தில் சாப்பாடு தயாராகி விட்டது. அப்போது என்னவள் சாப்பாட்டு கேரியருடன் மருத்துவ மனை செல்லத் தயாரானாள். அதற்கு இரண்டாவது மருமகளின் தாயார் நீங்கள் இங்கேயே இருந்து இவரிடம் பேசி விட்டு இவருக்கு மதிய உணவு பரிமாறிவிட்டு நீங்களும் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் முதலில் மருத்துவமனை சென்று நானும் அவளும் சாப்பிட்டு முடிக்கின்றோம் என்று சொல்லி புறப்பட்டார்கள்.
மீண்டும் ஒருமுறை என்னவளுடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டு போய் விட்டால் இவர்கள் என்னுடன் தங்கி இருக்கப் போகின்றார்கள். எனவே நம்மால் இனிமேல் முன்பு போல மனம் விட்டுப் பேச முடியாது என்று மிகவும் கவலையாக இருக்கின்றது என்று கண்ணீர் விட்டாள்.
அதற்கு நான் உன்னுடைய திருமணத்திற்குப் பின்னர் என்னைப் பிரிந்து நீ மேலும் கவலைப்படக் கூடாது என்பதற்காகவே இங்கு பணியாற்றி வந்த சமயம் மாதா மாதம் உன்னை தவறாமல் சந்தித்தேன். உன்னைச் சந்திக்க வரும் சமயம் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி நாம் இருவரும் சந்தித்தவுடன் எல்லையில்லாத ஆனந்தமாக மாறி நான் திரும்பும் சமயம் நம் இருவருக்கும் துக்கத்தைக் கொடுத்தது என்பது மறக்க முடியாத உண்மை. அந்த துக்கம் மறுமுறை நாம் இருவரும் சந்திக்கும் வரையில் இருந்து கொண்டே தான் இருக்கும். என் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நான் உன்னை விட்டு சற்று தொலைவில் இருப்பது என்னும் எண்ணத்துடன் உன்னையும் கலந்தாலோசித்த பின்னர் தான் என்னுடைய விருப்பத்திற்கு மாறாக வெளியூருக்கு மாற்றிலில் செல்வதென முடிவெடுத்தேன். இருந்தாலும் வருடத்தில் இரண்டு மூன்று முறை சந்தித்தாலும் மனம் விட்டுப் பேச முடிந்தது. மன நிம்மதி கிடைத்தது.
நாம் இருவரும் ஆரம்ப காலத்தில் பேசிக் கொண்டபடி கலாச்சாரக் கைதிகளாக இருந்தாலும் உன்னுடைய வீட்டில் இது வரை நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து விசேஷங்களிலும் நீயும் நானும் கலந்தாலோசித்து தான் முடிவெடுத்து வருகின்றோம். திருமணம் ஆவதற்கு முன்னர் உனக்கு தீபாவளிக்கு எடுத்த ஆடைகளை தீபாவளிக்குப் பின்னர் உன்னைச் சந்தித்த போது கொடுத்து சந்தோஷப் படுத்திலிருந்து ஆரம்பித்து முதல் குழந்தைக்குப் பெயர் தேர்வு செய்வது இரண்டாவது மகனுக்கு வீடு கட்டி குடியேறுவது மற்றும் பேரன் அல்லது பேத்தி பிறக்கும் சமயம் இங்கு இருப்பது என்பது எப்படியோ எனக்கு வாடிக்கை ஆகி விட்டது எந்த ஒரு சுப காரியத்திலும் என்னுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் நீ முடிவு எடுத்துக் கொண்டு வர முடிகின்றது.
உனது இரண்டாவது மருமகளுக்கு நாம் இருவரும் உயிருக்கு உயிராகப் பழகி நெருங்கிய காதலர்களாக இருந்தோம் என்னும் விஷயம் தெரிந்திருந்தும் உனது மனம் புண்படக்கூடாது என்னும் வகையில் அவள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு வருகின்றாள். தற்போது அவளது வளர்ப்புத் தாயார் நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பதாலும் காசு பணம் இருந்தும் நிம்மதி கிடைக்காததாலும் உங்களுடன் தங்க ஆசைப் படுகின்றார்கள்.
அவர்களுக்கும் ஒரு பெருந்தன்மை உள்ளது. எப்படி எனில் நீண்ட நாட்கள் கழித்து நான் வந்திருப்பதால் உன்னிடம் நான் பேச முடியாமல் நாம் இருவரும் கவலைப்பட்டு ஏங்கக் கூடாது என்பதனை மனதில் வைத்து நான் மட்டும் சென்று வருகின்றேன் என்று சொல்லி அவர்கள் மட்டும் மருத்துவமனை சென்றுள்ளார்கள் என்று பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் பேசினாள். என்ன விஷயம் என்று கேட்டேன்.
நீங்கள் வந்துள்ள விவரம் சொல்லியிருக்கின்றார்கள். எனவே எனது மருமகள் உங்களையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று சொல்லியிருக்கின்றாள். அவளது வளர்ப்புத் தாயார் காரணம் கேட்டதற்கு அவர் வந்து என்னைப் பார்த்தால் என் வயிற்றில் இருக்கும் குழந்தை அவரைப் பார்க்க அவர் திரும்ப செல்வதற்குள் வெளியே வந்து விடும் என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கின்றாள். எனவே நாம் இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டு உணவு பரிமாறட்டுமா என்று கேட்டாள். நானும் சரியென்று சொல்லிவிட்டு மதிய உணவினை இருவரும் சாப்பிட்டவுடன் மருத்துவ மனை புறப் பட்டோம்.
முதல் முறையாக நானும் அவளும் ஆட்டோவில் அமர்ந்து செல்லும் சமயம் இது போன்று நாம் இருவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்து செல்வது நமது திருமண ஊர்வலமாக இருந்திருந்தால் நான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு நமது ஆரம்ப கால காதல் ஞாபகத்திற்கு வந்தது.
ஆண்களுக்கு அரும்பு மீசை முளைக்கும் சமயம் 18 வயதை வாலிப வயது என்பார்கள். பெண்களுக்குப் பருவமடைந்த பின்னர் கன்னிப் பருவம் என்பார்கள். ஆனால் எனக்கு 18 வயது ஆரம்பிக்கும் முன்னர் இவளது 14வது வயதில் பருவமடைந்த ஒரு வாரத்தில் என்னைச் சந்தித்து முன்பின் அறிமுகமில்லாத நாம் இருவரும் முதலாவதாகப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவரை ஒருவர் உடனே புரிந்து கொண்டு பருவமடைந்த 15 நாட்களில் நாம் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது வேறு யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம். உண்மையைச் சொல்லப் போனால் நாம் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கும் சமயம் நம்மில் ஒருவர் கூட மேஜர் கிடையாது.
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பது போல நம் இருவருக்கும் வயதாகி பேரன் பேத்திகள் வந்த போதிலும் நமது இளமைக் காலங்கள் இன்று வரை பசுமையாவே இருக்கின்றன. திருமணத்திற்குத் துடிக்கின்றன.
நாம் இருவரும் மருத்துவமனை சென்ற பின்னர் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த சமயம் ஒரு மணி நேரம் கழித்து அவளது மருமகள் குடிப்பதற்கு என்ன இருக்கின்றது என்று கேட்டாள். பழச்சாறு மற்றும் பால் மற்றும் காப்பி இருக்கின்றது என்று சொன்னார்கள். உடனே அவளது மருமகள் எனக்கு காப்பி வேண்டும் என்று சொல்ல அவளது வளர்ப்புத் தாயார் காப்பி கொடுத்தார்கள்.
அவள் பெற்றுக் கொள்ளும் முன்னர் எனக்கு நீங்கள் இருவரும் பகிர்ந்து பருகி விட்டு மூன்றாவது பங்கினை கொடுக்க வேண்டும் என்று சொன்னாள். என்னால் மறுக்க முடியவில்லை. நானும் அவளும் அவளது மருமகளும் ஒரே டம்ளர் காப்பியினை பகிர்ந்து குடித்தோம் மிகவும் சந்தோஷமாக.
அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளது வளர்ப்புத் தாயார் என்னவென்று தெரியாமல் எங்களது ஒற்றுமையையும் வித்தியாசமான செயலையும் கண்டு திகைத்து நின்றார்கள்.
ஹோமத்தின் போது அக்னியில் விநாயகர் உருவம்
இரண்டு மணி நேரத்தில் பெண் குழந்தை பிறந்த சேதி சொன்னார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கும் அவளுக்கும் தனிமை கிடைத்தமையால் மீண்டும் ஒரு முறை சந்தோஷமாக அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னவளின் மருமகளின் வளர்ப்புத் தாயாருக்கு எல்லையில்லாத ஆனந்தம். ஏனெனில் இதுவரையில் தமது பேரன் பேத்திகள் பிறந்தவுடன் தமது கரங்களில் வைத்துப் பார்த்ததேயில்லை. அந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் தற்போது கிடைக்கப் போகின்றது.
அதன் பின்னர் பிறந்த குழந்தையை கொண்டு வந்து காட்டினார்கள். நான் மருத்துவரிடம் குழந்தையை என்னவளது மருமகளின் வளர்ப்புத் தாயாரிடம் கொடுக்குமாறு கூற அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அப்போது என் வளர்ப்பு மகள் நீங்கள் வந்திருப்பது தெரிந்தவுடன் உடனே என்னை வந்து அவரைப் பார்க்கச் சொல்லுங்கள். அவர் வந்து என்னைப் பார்த்தால் என் வயிற்றில் உள்ள குழந்தை அவரைப் பார்க்க உடனே வெளியே வந்து விடும் என்று சொன்னவாறே நடந்து விட்டது.
இதிலிருந்து அவள் எங்கள் எல்லோரிடமும் செலுத்தும் அன்பினைக் காட்டிலும் அதிகமான அன்பு செலுத்தி உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றாள் என்பது எனக்குத் தெரிகின்றது என்று சொன்னார்கள்.
அவர்கள் கைகளில் குழந்தை இருக்கும் சமயம் நானும் என்னவளும் சேர்ந்து குழந்தையின் இரண்டு கன்னங்களிலும் ஒரே நேரத்தில் முத்தமிட்டோம். அதனைக் கண்ட அவர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள்
அதன் பின்னர் அவள் குழந்தையைப் பெற்றுக் கொண்டு என்னிடம் கொடுத்தாள். நான் மறுபடியும் ஒரு முறை குழந்தையை அரவணைத்து முத்தமிட்டு அவர்களிடம் கொடுத்தேன்.
குழந்தையை அருகே உள்ள தொட்டிலில் படுக்க வைத்தார்கள். நான் அருகில் உள்ள கடைக்குச் சென்று பிறந்துள்ள குழந்தைக்கு புத்தாடைகள் வாங்கி வந்து கொடுத்தேன்.
அப்போது என்னவள் எனக்கு முதல் மகள் பிறந்திருக்கும் போது கொடுத்தது போலவே இருக்கின்றதே என்று மிகவும் சந்தோஷப் பட்டாள்.
என்னவளின் இரண்டாவது மகன் வந்ததும் என்னைப் பார்த்து சந்தோஷப் பட்டதுடன் நமது வீட்டில் எந்த ஒரு நல்லவைகளும் நீங்கள் வராமல் நடக்காது என்பதனை மீண்டும் நிரூபணம் ஆக்கி விட்டீர்கள் என்று சொன்னதைக் கேட்டு அவள் மனைவியின் வளர்ப்புத் தாயார் ஆச்சர்யப்பட்டாள்.
அந்த நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கி விட்டபடியால் நான் அவர்களிடமிருந்து விடைபெற வேண்டியதாயிற்று.
என்னவளுக்கு பேத்தி கிடைத்து விட்டாள் என்ற சந்தோஷம் ஒரு புறம். நான் புறப்படுகின்றேன் என்னும் சோகம் மறுபுறம்.
நான் அனைவரிடத்திலும் விடைபெற்று விட்டு திரும்பிய சமயம் என்னவள் தனது மருமகளுக்கு மயக்கம் தெளியும் வரை இருந்து பின்னர் செல்லலாமே என்று கேட்டுக் கொண்டாள்.
உனது மருமகள் ஆசைப்பட்ட படி நான் உன் மருமகளைப் பார்த்தேன். அவள் குழந்தை என்னைப் பார்த்து விட்டது அது போதும் என்றவாறு விடை பெற்றேன். அவளுக்கு மீண்டும் சோகம் கவ்விக் கொண்டது. எனக்கு மட்டும் ஆனந்தமா என்ன? எனக்கும் அதே நிலை தான்.