நான் உனக்கு சொந்தம். நீ எனக்கு சொந்தம்.
ஊரே நமக்கு சொந்தம்.
நீயும் நானும் ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி ஒற்றுமையாக நமது எதிர்காலத்தை எண்ணி கற்பனைக் கோட்டையில் மிதந்து வருகின்றோம். நமது எதிர் காலக் கனவுகள் எல்லாம் நிறைவேறுமா?
எனது பெற்றோர் என்ன சொல்வார்கள் நமது காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவார்களா அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பார்களா என்ற எண்ணத்தில் இவ்வாறான கேள்விகளைக் கேட்கலாம் அல்லது எனது குடும்பத்தின் அந்தஸ்து அதாவது எனது குடும்பம் எவ்வாறான குடும்பம் ஏழைக்குடும்பமா, நடுத்தரக் குடும்பமா அல்லது பணக்காரக் குடும்பமா என்ற எண்ணத்தில் கூட இந்த கேள்வியினைக் கேட்டிருப்பீர்கள்.
இல்லை. அவ்வாறு இல்லை. நான் இப்போது படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருக்கின்றேன். எந்த வேலை கிடைக்குமோ எங்கு கிடைக்குமோ என்பது தெரியவில்லை. எனக்கு வேலை கிடைக்க கால தாமதமானாலோ அல்லது கிடைக்கப் போகும் வேலையில் வரப்போகும் சம்பளம் குறைவாக இருந்தாலோ நான் உன்னை இழக்க நேரிடுமோ என்ற பயம் கலந்த கவலை வந்து விட்டது. எங்கே உன்னை என்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்று பயமாக இருக்கின்றது.
இதோ பாருங்கள் நான் தமிழ் நாட்டில் பிறந்ததற்காக பெருமைப் படுகின்றேன். இந்த பெருமை இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் ஏன் உலகில் எங்கு பிறந்திருந்தாலும் கிடைக்காது.
எப்படி?
நான் எங்கு சென்றாலும் அல்லது இதே ஊரில் என்னைப் பற்றி யாரேனும் தெரிந்து கொள்ள முற்படும் போது என்னிடம் கேட்கும் கேள்வி. உனது சொந்த ஊர் எது என்பது தான். நான் எனது ஊரைச் சொல்லும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் ஒண்டுவதற்கு ஓலைக் குடிசை கூட இல்லாத என்னிடம் சொந்த ஊர் எது என்று கேட்டு நான் ஒரு ஊரையே (மாநகராட்சி அந்தஸ்து பெற்ற ஒரு ஊரையே) எனக்குச் சொந்தம் என்று சொல்லும் போது எவ்வளவு சந்தோஷம். இந்த சந்தோஷம் வேறு மொழியில் கிடைக்குமா? வேறு மாநிலத்தில் கிடைக்குமா? வெளி நாட்டில் கிடைக்குமா. தமிழ் நாட்டில் பிறந்த தமிழர்களுக்குத் தான் ஒரு ஊரையே சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் உரிமை இருக்கின்றது. சந்தோஷம் கிடைக்கின்றது. பெருமைப்பட முடிகின்றது.
நான் எனது வேலை தேடும் நிலையினையும் வேலை கிடைக்கும் சமயம் சம்பளம் எவ்வளவு கிடைக்கும் எனத் தெரியாமல் நான் பயந்தபோது புத்தி சாதுர்யமான பதிலால் உனது குடும்ப நிலையிலை மறைமுகமாக தெரிவித்து நான் உனக்குத் தான் சொந்தம் நீ எனக்குத் தான் சொந்தம் என்பதனை சொல்லாமல் சொல்லி விட்டாய். ஒரு ஊரே உனக்குச் சொந்தமாக இருக்கும் போது நான் ஏன் அந்தஸ்து காரணமாக பிரிந்து விடுவோம் என பயப்பட வேண்டும். நான் உனக்கு சொந்தம். நீ எனக்கு சொந்தம். நாம் பிறந்த ஊர் நாம் வாழும் ஊர் எல்லாம் நமக்குச் சொந்தம்.