முதலாவது வழிபாடு
நாம் இருவரும் சந்தித்த பின்னர் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி காதலர்களான பின் வந்த அவளது முதலாவது பிறந்த நாளன்று நானும் அவளும் கோயிலுக்குச் சென்றோம்.கோயிலுக்குள் செல்லுமுன்னர் நான் அவளுக்கு முதன் முதலாக மலர் வாங்கிக் கொடுத்தேன்.
பின்னர் சாமிக்கு அர்ச்சனை செய்யும் பொருட்டு அர்ச்சனைப் பொருட்களுடன் சாமிக்கு மாலைகள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றோம்.
முருகன் வள்ளியை மணமுடிக்க யானை வடிவில் சென்று வள்ளியை பயமுறுத்தி வள்ளியை முருகனுடன் சேர்த்து மணமுடித்து வைத்த முழு முதற்கடவுளான விநாயகரிடம் எங்களையும் சேர்த்து வைக்குமாறு இருவரும் வேண்டிக் கொண்டு, விநாயகரின் துணையுடன் வள்ளியை மணமுடித்த முருகனிடம் வள்ளியை காதலித்து எப்படி வள்ளியின் கரம் பிடித்தாயோ அதே போல எங்களையும் வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வைக்குமாறு வேண்டிக்கொண்டு வழிபட்ட பின்னர் அம்மன் குடிகொண்டிருக்கும் சன்னதிக்குச் சென்றோம்.
அவள் தன் கரங்களில் பிடித்துக்கொண்டிருந்த அர்ச்சனைத் தட்டினை அர்ச்சகரிடம் கொடுத்தவுடன் அர்ச்சகர் கோத்திரம், பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லுங்க எனக் கூற அவள் உடனே அவளது கோத்திரம் மற்றும் பெயரினைக்கூறி எனது பெயரினையும் என் வாயால் சொல்ல வைத்து ராசி நட்சத்திரங்களைக் கூறாமல் சாமி பெயருக்கு அர்ச்சனை என்றாள்.
அர்ச்சகர் நம் இருவரது கோத்திரங்களையும் பெயர்களையும் கூறி பின்னர் சாமி நட்சத்திரத்தினைக் கூறி அர்ச்சனை செய்து வந்து அர்ச்சனைத் தட்டினையும் அம்மன் கழுத்தில் அணிவித்த மலர் கொத்தினையும் குங்குமத்தினையும் கொடுத்தார்.
நான் பிறந்த நாள் பரிசாக கொடுத்த தங்க ஆலிலை கிருஷ்ணன் டாலருக்கு பூஜை செய்து அர்ச்சகர் கொடுத்த சமயம் பிரசாதங்களை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு அந்த சன்னதியிலேயே அந்த டாலரை அணிந்து கொண்டாள். பின்னர் நாம் இருவரும் சாமி சன்னதிக்கு செல்ல ஆரம்பித்தோம்.
அம்மன் சன்னதியிலிருந்து சாமி சன்னதிக்குச் செல்லும் சமயம் வருகின்ற பிற கடவுள்களையும் வழிபட்டு சென்றோம்.
சாமி சன்னதியில் அர்ச்னைத் தட்டினை கொடுத்தவுடன் அர்ச்சகர் கோத்திரம், பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லுங்க எனக் கூற அவள் உடனே அவளது கோத்திரத்தினையும் பெயரினையும் என் கோத்திரத்தினையும் பெயரினையும் சொல்லி சாமியின் ராசி நட்சத்திரத்திற்கு அர்ச்சனை என்றாள். அர்ச்சகர் அர்ச்சனை செய்த பின்னர் மலர் மற்றும் விபூதியினை அர்ச்சனைத் தட்டுடன் கொடுத்தார்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவளுடன் சேர்ந்து பிற கடவுள்களையும் வழிபட்டு குளக்கரையில் சற்று நேரம் அமர்ந்தோம்.
உனது பிறந்த நாளுக்கு அர்ச்சனை செய்யும் போது உனது பெயர் இராசி நட்சத்திரம் ஆகியவற்றை சொல்லாமல் சாமி இராசி நட்சத்திரம் என்று கூறியதன் காரணத்தை தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆவலாக இருக்கின்றது என்றேன்.
நான் முதன் முதலாக உங்களைப் பார்த்த போது எனது மனதினைப் பறிகொடுத்து விட்டேன். பின்னர் நாம் இருவரும் ஒருவருக் கொருவர் அன்பினைப் பறிமாறிக் கொண்டு தற்போது இணை பிரியாத காதலர்களாக இருக்கின்றோம். நம் இருவருக்கும் மனப்பொருத்தம் நன்றாக இருக்கின்றது.
உங்கள் மனம் புண்படும்படி நான் எப்போதும் நடந்து கொள்ள மாட்டேன். அதே போல நீங்களும் என் மனது புண்படும்படி எப்போதும் நடந்து கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அதேசமயம் நான் எனது இராசி மற்றும் நட்சத்திரத்தினை கோயில் அர்ச்சகரிடம் சொல்லி நீங்களும் உங்களது இராசி மற்றும் நட்சத்திரத்தினைச் சொல்லி அர்ச்சகர் இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது. இந்த நட்சத்திரக் காரர்களால் இந்த உறவுகளுக்கு ஆபத்து போன்று அபசகுனமான வார்த்தைகளை நாம் முதன் முதலாக கோயிலுக்குச் சென்று எனது பிறந்த நாளன்று வழிபடும் சமயம் அந்த அர்ச்சகர் சொல்வாரேயானால் எனது மனது மிகவும் கவலைப்படும். அதே சமயம் நீங்கள் அதையெல்லாம் நம்ப வேண்டாம் எனக்கூறி என்னை எவ்வளவுதான் சமாதானப்படுத்த முயன்றாலும் எனது மனக்கவலை என்னுள் இருந்து என்னை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். எனவே தான் சொல்லவில்லை.
இவ்வாறு நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயம் அருகிலிருந்த ஒலிபெருக்கியிலிருந்து வந்த புரட்சித் தலைவர் படப் பாட்டு எங்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
என்ன வந்தாலும் எது நடந்தாலும்
இணைந்திருப்பேன் நான் உன்னுடனே
துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும்
தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே.
பின்னர் கோயிலிலிருந்து வெளியே வந்து அருகிலிருந்த சிற்றுண்டி விடுதியில் சாப்பிட்டு பிறந்த நாளை கொண்டாடி மிக்க சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.
எங்களது முதலாவது வழிபாடு இப்போதும் பசுமையாக இளமையாக இருக்கின்றது.