வீடு கட்டும் பணிகள்.
என்னவள் மற்றும் என்னவளின் இரண்டாவது மருமகளின் வளர்ப்புத் தாயார் ஆகியோரிடம் நீண்ட நேரம் உரையாடி விட்டு வந்த பின்னர் சுமார் ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் என்னவள் இல்லத்திற்குச் சென்றேன்.
ஆரம்ப காலத்தில் என்னவள் மாத்திரம் தனியே இருப்பாள். இரண்டாவது மகன் திருமணத்திற்குப் பின்னர் அவளது மருமகளும் கூட இருப்பாள். இருந்தாலும் மனம் விட்டுப் பேச முடிந்தது.
தற்போது நான் சென்ற சமயம் என்னவளும் என்னவளின் மருமகளும் என்னவளின் மருமகளின் வளர்ப்புத் தாயாரும் ஆக மொத்தம் மூன்று பேர் இருந்தார்கள். எனக்கு வரவேற்பு மிகவும் பலமாக இருந்தது.
சென்றவுடன் அவர்களின் விருந்தினர் என்னிடம் பேச ஆரம்பித்தார். நீங்கள் சென்ற முறை இங்கு வந்த சமயம் என்னுடைய தனிமைச் சோகங்களுக்கான ஆலோசனை சொல்லும் சமயம் இந்தப் பெண்ணை தத்து எடுத்து இருந்தால் வரக்கூடிய அவளது கணவனை வீட்டோட மாப்பிள்ளையாக வைத்து இருக்கலாம் என்று சொன்னீர்கள். அது மட்டும் இல்லாமல் கரு உருவாவதற்கு முன்னர் திருப்பதி சென்று வழி பட்டு வரச் சொன்னீர்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் திருப்பதி சென்று நீங்கள் சொன்னபடி வழிபட்டு வந்தோம்.
திருப்பதி சென்று வழிபட்டு வந்த 15 நாட்களுக்குள் வீடு கட்டுவதற்கு ஒரு நல்ல மனை கிடைத்தது. அதனை இந்த குடும்பத்தார் கொள்முதல் செய்து தற்போது வீடு கட்டி வருகின்றார்கள். நீங்கள் சொன்னது போல இவளை தத்து எடுக்காத காரணத்தால் நான் இவளது கணவரை வீட்டோட மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள முடியாமல் போனதால் நான் இந்த வீட்டிற்கு வீட்டோட சம்மந்தியாக வந்து விட்டேன்.
எனக்கு வயதாகி விட்டது என்பதால் கீழ்தளத்தில் எனக்கும் இவளது மாமியாருக்கும் ஒதுக்கி விடுமாறும் முதல் தளத்தில் எனது வளர்ப்புப் பெண்ணும் அவள் குடும்பத்தினரும் தங்குவது எனவும் அதற்கு மேல் உள்ள தளத்தினை காலியாகவே வைத்து எனது உறவினர்கள் மற்றும் இவர்களது உறவினர்கள் வரும் சமயம் தங்க வைப்பது எனவும் முடிவு செய்து விட்டோம்.
ஒரு சிறு திருத்தம். நீங்கள் வந்தால் உங்களை தரைத்தளத்தில் எங்களுடன் தான் தங்க வைப்போம். உங்களிடம் நிறைய பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் உங்களுக்கு மாடியில் தங்க இடம் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். இவர்களிடம் உள்ள பணத்திற்கு மேல் எவ்வளவு செலவானாலும் நான் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டேன். ஆனால் ஒத்தியாக அல்ல. திரும்ப கொடுக்க வேண்டாத அன்பளிப்பாக என்று சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு மிக்க சந்தோஷம்.
நான் பெரிய பங்களாவில் தனியாக இருந்து யார் துணையும் இல்லாமல் தனியே சமைத்து தனியே சாப்பிட்டு தனியே பொழுதினைக் கழித்து தனியே உறங்கி காலத்தைக் கழித்து வந்தேன். தற்போது இவர்களுடன் இருப்பதால் என்னை உண்மையிலேயே சுகவாசியாக்கி விட்டார்கள். நான் தனியே இருக்கும் போது காலையில் இது சமைக்க வேண்டும். மதியம் இது சமைக்க வேண்டும் இரவு இது சமைக்க வேண்டும் என திட்டமிட்டு எனக்குத் தெரிந்த வரை சமைப்பேன். நான் சமைப்பது சரியான ருசியுடன் இருக்காது எனவே நான் சமைப்பது எனக்கே பிடிக்காது. ஆனால் இங்கு என்னிடம் எதுவும் கேட்காமல் வேளா வேளைக்கு வித விதமாக சமைத்து ருசியாக உண்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது. இவ்வளவு ருசியாக எப்படி சமைக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு இவர்கள் ஒரு வீடியோ காசெட்டை போட்டு காண்பித்தார்கள். அந்த வீடியோவில் சமையல் தொகுப்பாளினியாக வருவது உங்களுடன் பணியாற்றியவர் என்பதனைக் கேட்டும் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டும் நான் வியந்து போனேன். எனவே நான் வீட்டோட சம்மந்தியாக சொகுசாக இருக்க ஆலோசனை கொடுத்து உதவியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி என்று சொன்னார்கள்.
அதனைக் கேட்ட என்னவளுக்கு உள் மனதில் என்னை விட்டு பிரிகின்ற மாதிரியான ஒரு எண்ணம். காரணம் நம் இருவரைத் தவிர மூன்றாமவர் ஒருவர் இருக்கும் போது நாம் நம் இஷ்டத்திற்குப் பேசி கடந்த காலங்கள் போல் இருக்க முடியாது.
அப்போது என்னவளைப் பார்த்தேன். உடனே அவள் நாங்கள் 10 லட்சம் போதும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் வீட்டினை கட்டி முடித்து விடலாம் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவர்கள் கேட்க மறுத்து விட்டார்கள். அத்துடன் நான் பணம் கொடுக்கும் விபரத்தினை என்னுடைய குடும்பத்தார் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் என்னுடைய வசதிக்காக பெரிய வீடாக நீங்கள் கட்டப் போவதால் அதனால் ஏற்படப் போகும் அதிகப்படியான செலவுத் தொகையினை நீங்கள் எனக்காகக் கடன் வாங்கக் கூடாது என் வளர்ப்புப் பெண் கஷ்டப்படக் கூடாது என்று சொன்ன காரணத்தால் நாங்கள் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டோம் என்று சொன்னாள்.
என்னவள் தன் பேச்சினைத் தொடரும் போது பெரிய மகன் தனது மாமனார் வாங்கிக் கொடுத்த இடத்தில் வீடு கட்டி இருக்கின்றான். சிறிய மகன் தான் வாங்கிய இடத்தில் தன் மனைவி குடும்பத்தார் செய்யும் பண உதவியினைக் கொண்டு சிறிய வீட்டிற்குப் பதிலாக பெரிய வீடாகக் கட்டிக் குடியேறப் போகின்றான் என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது என்று சொன்னாள். எல்லாவற்றிற்கும் காரணம் உங்களது அறிவுறைகள் தான் என்றாள்.
வீடு கட்டும் பணி எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்று கேட்டேன். வாஸ்து நாளன்று பூமி பூஜை போட்டு அதன் பின்னர் அஸ்திவாரம் போட ஆரம்பித்து இது வரையில் தரைத்தளம் வரை முடித்து இருக்கின்றோம். இனிமேல் முதல் தளம் அடுத்து இரண்டாம் தளம் மொட்டை மாடி கட்டி முடிந்தவுடன் தண்ணீர் வசதி மற்றும் மின்சார வயரிங் வேலைகள் முடிய இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம் என பையன் சொன்னான் என்று தெரிவித்தாள்.
அப்போது என்னவளின் மருமகள் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். ஏதேனும் விசேஷம் உண்டா என்று கேட்டேன். தற்போது மூன்று மாதம் என்று வெட்கத்துடன் சொன்னாள். மீண்டும் ஒரு முறை அதிகார தோரணையுடன் இன்று மதிய உணவு இங்கு தான் சாப்பிட வேண்டும் அது வரை எங்கும் செல்லக் கூடாது என்று கட்டளையிட்டாள். அப்போது கொஞ்சம் சாந்தமாகப் பேசலாமே என்று என்னவள் கேட்க இப்படிப் பேசாவிட்டால் இவர் உங்கள் பேச்சை மீறி சென்று விடுவார் என்று சொன்னாள். அவளது வளர்ப்புத் தாய்க்கு ஒரே ஆச்சர்யம். இதுவரையில் இவள் இவ்வளவு உரிமையுடன் யாரிடமும் பேசிப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள்.
அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதியினைக் கூறி அந்த நாளில் வளைகாப்பு நடத்தலாம் என்று இருக்கின்றோம் கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நான் வழக்கம் போல் கட்டாயம் கலந்து கொள்வேன் என்று சொல்லி விட்டேன்.
அப்போது அவளது மகன் வந்தான். என்னிடம் வீடு கட்டும் விவரத்தினைச் சொல்லி அநேகமாக ஏப்ரல் மாதத்தில் வீடு கட்டி முடிந்து விடும் என்று சொல்லி கிரஹப்பிரவேசம் எப்போது செய்யலாம் என்று கேட்டான். அதற்கு நான் வைகாசியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் அல்லது ஆவணி மாதத்தில் வளர்பிறையில் சுப முகூர்த்த நாள் பார்த்து நால்வருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில் குடியேறலாம் என்று தெரிவித்தேன்.
அதே நேரம் இவளுக்கு எத்தனை மாதம் என்று ஜோதிடரிடம் தெரிவித்து கர்ப்பமாக இருக்கும் சமயம் வீடு கிரஹப் பிரவேசம் செய்யலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள் 6 மாதம் கர்ப்பம் என்றால் கிரஹப்பிரவேசம் செய்யக்கூடாது என்று சொல்வார்கள்.
காரணம் கிரஹப்பிரவேசத்தின் போது யாகம் செய்யும் சமயம் கீழே அமர்ந்து எழுந்திருப்பது சிரமமாக இருக்கும். இதற்கு முக்கியமான இன்னொரு காரணம் கிரஹப் பிரவேசத்திற்கான ஹோமத்தில் அமரும் தம்பதியர் ஹோமத்தின் போது வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தில் உள்ள புனித நீரை புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து தளங்களிலும் சென்று மாவிலை கொண்டு தெளிக்க வேண்டும். எனவே 6 மாதத்திற்கு மேல் கர்ப்பமாக உள்ள பெண்கள் படியேறிச் செல்ல சிரமப்படுவார்கள் என்பது தான் உண்மையான காரணம்.
ஜோதிடர் கூடாது என்று சொல்வாரேயானால் குழந்தை பிறந்த பின்னர் கிரஹப் பிரவேசம் செய்யலாம் என்று சொன்னேன்.
அப்போது அவளது மகன் இங்கு இன்னும் எத்தனை நாள் தங்கி இருப்பீர்கள் என்று கேட்டான். அதற்கு நான் நாளை காலையில் இங்குள்ள ஒரு அலுவலகத்தில் வேலை முடிந்த பின்னர் மாலையில் சொந்த ஊருக்கு புறப்படுவேன் என்று சொன்னேன்.
அந்த நேரத்தில் மதிய உணவு தயாராகி விட்டபடியாலும் என்னவளுடன் தனியாக மனம் விட்டுப் பேசக் கூடய சந்தர்ப்பம் கிடைக்காததாலும் அவர்களின் கோரிக்கையினை ஏற்று மதிய சாப்பாடு சாப்பிட்டவுடன் அங்கிருந்து புறப்படுவது என தீர்மானித்தேன்.
கைக்கு எட்டியது வாய்க்குக் எட்டவில்லை என்பது போல நான் அவளைச் சந்திக்கச் சென்ற சமயம் அவள் வீட்டில் இருந்தும் அவள் தனியாக என்னுடன் மனம் விட்டுப் பேச முடியாத நிலை நம் இருவருக்கும் ஏற்பட்டது. காரணம் அவர்களின் விருந்தினர் முன்னிலையில் பேசுவதற்கு ஒரு சில வரையறைகள் கட்டுப்பாடுகள்.
மதிய உணவு அனைவரும் உட்கொண்டோம்.
தவளை தன் வாயால் கெடும் என்பது போல நானே ஒரு ஆலோசனை சொல்லி அது நமது உறவு நிலை நெருக்கத்துக்கு பாதகமாக அமைந்த படியால் பிரிய மனமில்லாது பேசவும் முடியாமல் வருத்தத்துடன் நான் அவளது இல்லத்திலிருந்து புறப்பட்ட சமயம் அவள் முகத்தில் பெருத்த சோகத்துடன் கலந்த ஏமாற்றம்.
எனக்கு உள்ளுர ஒரு பயம் தொற்றிக் கொண்டது. இப்போதே என்னவளுடன் தனியாக மனம் விட்டுப் பேச முடியவில்லை இன்னும் இவளது மருமகளின் வளர்ப்புத் தாயார் இங்கு வந்து இவர்களுடன் நிரந்தரமாக தரைத் தளத்திலேயே தங்கி விட்டால் நம் இருவருடைய நிலை என்னவாக இருக்கும்? நான் அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்தாலும் நம்மால் முன்னைப் போல சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க முடியுமா?
எனக்கும் அவளுக்கும் மூன்று ஆண்டுகள் வித்தியாசம். என்னுடைய 17-வது வயதில் அவளுக்கு வயது 14. அவள் பூப்பெய்து ஒரு சில நாட்களே ஆகியிருந்தன. அப்போது தான் நாம் இருவரும் முதன் முதலாகச் சந்தித்தோம். சந்தித்த முதல் நாளே அவளிடம் என் மனதை பறி கொடுத்து விட்டேன். அவளுக்கும் அதே நிலை. இரண்டு மூன்று நாட்களிலேயே எனக்கும் அவளுக்கும் கருத்து ஒற்றுமை உண்டாகி விட்டது. என்னுடைய விருப்பத்தினை அவளிடம் கூறி அவளும் அதனை ஒப்புக் கொண்டு அப்போது முதல் ஐந்து வருடங்கள் ஒரே காம்பவுண்டில் ஒரே ஊரில் இருந்து மிகவும் நெருக்கமாகக் காதலித்தோம்.
அவளை இல்லற வாழ்க்கையில் அடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இருவரும் கோவில்கள் அனைத்திலும் வழிபாடு செய்து மிக நெருக்கமாக இருந்தோம். நாம் இருவரும் எப்படியெல்லாம் திட்டமிட்டுக் கனவு கண்டோமோ அப்படியெல்லாம் நடந்து எனக்கு வெளியூரில் அரசாங்க வேலை கிடைத்து விட்டது.
ஆனால் இல்லறத்தில் இணைய முடியாத நிலையிலும் நமது நெருக்கம் குறையாமல் கலாச்சாரக் கைதிகளாக அவ்வப் போது சந்தித்து நமது அன்பு குறையாமல் இருக்கின்றது என்பது எனக்கும் அவளுக்கும் ஆண்டவனால் கொடுக்கப் பட்ட வரம்.
எனக்கும் அவளுக்கும் பேரன் பேத்திகள் கிடைத்த பின்னரும் கூட நம்மிடையே உள்ள அன்பு நெருக்கம் மற்றும் காதல் குறையவில்லை. ஆனால் தற்போது நான் இரண்டு முறையே சந்தித்த ஒரு நபர் அவளுடன் கூடவே தங்குவதற்கு முதல் முறை சந்தித்த போது நானே அறிவுரை வழங்கி அந்த அறிவுறை நமது உறவின் விரிசலுக்கு காரணமாக அமைகின்றது என்பது போன்ற எண்ணம் எனக்கு உருவாகி விட்டது. காரணம் நான் அவளிடம் பேசச் சென்ற போது அவளைப் பேச விடாமல் அவளது உறவினர் பேசியது தான்.
புதிதாக கட்டப் போகும் வீட்டின் தரைத்தளத்தில் என்னவளுடன் சேர்ந்து அவர்கள் இருக்க முடிவு செய்து விட்ட காரணத்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் நம் இருவருக்கும் முன்பு போல மனம் விட்டுப் பேச முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. நான் அவளைப் பார்க்கச் செல்லும் சமயம் அவளது உறவினர் வேறு எங்காவது சென்றிருந்தால் மட்டுமே எனக்கு அவளுடன் தனியாக முன்பு போல சந்தோஷமாகப் பேசி நம் இருவரது சுக துக்கங்களைப் பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
இதனை விட இக்கட்டான நிலை அவளுக்கு. ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ள முடியவில்லை.
வழக்கம் போல் புறப்படும் சமயம் அவள் சோகமானாள். ஆனால் வெளிக் காட்ட முடியவில்லை. என்னவளின் மருமகள் நிலைமையை புரிந்து கொண்டு தனது மாமியாரை அழைத்துச் சென்றதைக் கண்ட எனக்கு இரண்டு உள்ளங்கள் என் பிரிவுக்காக வருந்துதற்கு நான் காரணமாகி விட்டேன் என்னும் எண்ணம் எனக்கு மட்டுமல்ல நம் இருவருக்கும் கவலையைத் தந்தது என்பதை மறுக்க முடியாது.