அரண்மனையில் தனிமை
கடல் கடந்த நாடுகளில் வாழ்வோரின் பெற்றோர் நிலை
இருவரும் சேர்ந்து என்னை வரவேற்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அவள் பேசுவதற்கு முன்னதாக அவளது மருமகள் என்னிடம் பேச ஆரம்பித்தாள். நீங்கள் வருவதற்கு முன்னர் ஒரே ஒரு முறை தகவல் தெரிவித்து விட்டு வர முடியுமா என்று கேட்டாள். அதற்கு நான் அலுவலக வேலையாகவோ அல்லது வேறு ஏதேனும் அவசர வேலையாகவோ திடீரென்று புறப்பட்டு வரும் சமயம் உங்கள் வீட்டிற்கு வருவதனால் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வர முடியவதில்லை.
அதுவும் தவிர பலமுறை இந்த ஊருக்கு நான் வந்தாலும் சில தடவைகளில் மட்டும் தான் என்னால் இங்கு வர முடிகின்றது. பல முறை இங்கு வராமலேயே ஊருக்குத் திரும்பி விடுவேன். முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு வருவது என்பது என்னால் முடியாத காரியம் ஏனெனில் என் உத்தியோகம் அப்படி என்று சொன்னேன். வேண்டுமானால் மேலும் ஒன்றிரண்டு நாட்கள் அதிகமாக இந்த ஊரில் தங்க முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்றேன்.
அதற்கு அவளது மருமகள் இன்று மதியம் இங்கேயே மதிய உணவு உட்கொண்ட பின்னர் என்னுடைய அம்மாவை வரவைக்கின்றேன். முன்பின் அறிமுகமில்லாத அவர்கள் உங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கின்றது என்றாள்.
அதன் பின்னர் என்னவளிடம் என்ன விவரம் என்று கேட்க நான் சொல்கின்றேன். மாலை வரையில் இங்கு இருக்க முடியுமா என்று மட்டும் தற்போது என் மருமகளிடம் சொல்லி விடுங்கள் என்று கேட்டாள். நானும் சரியென்று ஒப்புக்கொண்டேன். உடனே அவளது மருமகள் அவளது அம்மாவிற்குப் போன் செய்து உடனடியாக புறப்பட்டு வருமாறு தகவல் தெரிவித்தாள். அதன்பின்னர் அவளது மருமகள் எனக்காக சிறப்பு உணவு தயாரிக்கப் போவதாகக் கூறி சமையலறைக்குள் சென்று விட்டாள்.
சற்று நேரத்தில் அவளது மருமகள் ஒரு பெரிய டம்ளரிலும் ஒரு சிறிய டம்ளரிலும் காப்பி கொண்டு வந்து என்னிடம் பெரிய டம்ளரைக் கொடுத்தாள். நான் உனது மாமியாருக்கு இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவள் நீங்கள் எப்படியும் பாதி கொடுக்கப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும் எப்படியெனில் சென்ற முறை தாங்கள் பாதி குடித்து விட்டு மீதியை என் மாமியார் அருந்தும் சமயம் பார்த்து விட்டேன். அதனால் தான் பெரிய டம்ளர் என்றாள். அப்போது நான் என்னவளைப் பார்த்த போது நமது விஷயம் அவளுக்கு தெரிந்து விட்ட படியால் எதனையும் மறைக்க முடியவில்லை. அதன்பின்னர் என்னிடம் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டாள். என்னால் என் அன்பு மருமகளிடம் எதனையும் மறைக்க முடியவில்லை. மறைக்க விருப்பமும் இல்லை. எனக்கு எப்படி தாய் தந்தை இல்லையோ அது போல அவளுக்கும் தாய் தந்தை கிடையாது. அது தான் நம்மிடையே உள்ள ஒற்றுமை என்று சொன்னாள். நானும் அவளும் காப்பி குடித்த பின்னர் பேச ஆரம்பித்தோம்.
என் மருமகளுக்கு தாயார் கிடையாது. தந்தை ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்து வந்தார். அவரும் திடீரென மாரடைப்பு வந்து காலமாகிவிட்ட படியால் தந்தை வேலை செய்த வீட்டிலேயே தங்கி படித்து முடித்த பின்னர் அவர்களே என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என் மருமகள் வளர்ப்புப் பெண்ணாக வளர்ந்த வீட்டில் நிறைய சொத்துக்கள் இருக்கின்றது ஆனால் உண்மையான அன்பு, அரவணைப்பு, பாசம் ஏதும் இல்லாமல் குடும்பத் தலைவி மட்டும் தனியே இருந்து வருகின்றார்கள் என்று சொன்னாள்.
அந்த நேரத்தில் நான் அருகில் இருக்கும் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்று வந்து விடுகின்றேன் என்று சொன்னதற்கு அவளது மருமகள் நீங்கள் எங்கும் செல்லக் கூடாது. ஏனெனில் எங்காவது போய் வந்த பின்னர் அவர்கள் வீட்டில் சாப்பிட்டேன் என்று சொல்வீர்கள் எனவே நீங்கள் இன்று இரவு வரை இங்கு தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டாள். உடனே என்னவள் பார்த்தீர்களா உங்களுக்கு எங்கள் வீட்டில் வரவேற்பு பல மடங்கு பலமாகி விட்டது என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
ஆமாம் அவளது மகள் என்னை பிறந்தது முதல் பாபா பாபா என்று தான் அழைக்கின்றாள். முதல் மருமகள் தனது காதல் திருமணத்தை நடத்தியமைக்காக என்னை அன்புடன் குடும்பத்தில் உள்ள உறுப்பினர் போல கவனிக்கின்றாள். இரண்டுக்கும் மேலாக இந்த மருமகளது இரட்டிப்பு அன்பு, பன்மடங்கு பாசம் சற்று அதிகார தோரணை மற்றும் கண்டிப்புடன்.
இதுவரையில் நான் அவளது மருமகள் குடும்பம் பற்றி எதுவும் கேட்டதில்லை. அவளது பெற்றோர் யார் எந்த ஊர் என்னும் விவரம் எதுவும் கேட்கவில்லை.
அப்போது கார் சத்தம் கேட்டது. உடனே என்னவளும் அவளது மருமகளும் வேகமாகச் சென்று வந்தவரை வரவேற்றார்கள். அப்போது அவர் வந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் நான் எப்போது வந்து திரும்ப அழைக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது நான் திரும்ப செல்லும் சமயம் வேறு ஒரு கார் பிடித்துக் கொள்கின்றேன். காத்திருக்க வேண்டாம் என்று வந்த டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
மீண்டும் ஒரு முறை வந்தவருடன் சேர்த்து எனக்கும் காப்பி வந்தது. அப்போது மாத்திரம் நான்கு பேர் தனித்தனி டம்ளர்களில் காப்பி குடித்தோம்.
அதன் பின்னர் வந்தவர் பேச ஆரம்பித்தார்.
உங்களுக்கு காப்பி கொடுத்து பிரியமுடன் தற்போது கவனித்து வரும் பெண் என் வளர்ப்பில் உருவானவள். நான் இவளைப் பெற்றெடுத்த தாய் அல்ல. அவளது தாயார் அவள் 6-ம் வகுப்பில் படிக்கும் சமயம் காலமாகி விட்டார்.
இந்தப் பெண்ணின் தந்தை எங்கள் வீட்டில் பணியாற்றி வந்தார். தாயார் இல்லாத காரணத்தால் இவளை என்னுடைய வீட்டிலேயே தங்கி படிக்குமாறும் இவளது தந்தையையும் எங்களுடன் தங்குமாறும் கேட்டுக் கொண்டேன். இவளும் இவளது தந்தையும் இருப்பதற்கு ஒரு தனி அறை ஒதுக்கீடு செய்து அங்கு இருப்பார்கள். எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று வந்தாள்.
இந்தப் பெண்ணின் தந்தை திடீரென மாரடைப்பு வந்து இறந்து விட்டார். அப்போது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இவளைப் பார்ப்பது எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. இவள் தந்தையை இழந்து வருத்தப்படும் அதே சமயம் இந்த சின்ன வயதில் இவளுக்கு எந்த உறவுகளும் இல்லாமல் இருக்கின்றாளே என்று இவளது நிலைமையினை நினைத்து இவளை விட நான் அதிகமாக வருத்தப்படுவேன்.
இந்த நிலையில் இவளை எனது வளர்ப்பு மகளாக தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்கு எனது மகன்கள் ஆதரவு தெரிவித்தாலும் அவர்களுக்கு வந்த மனைவிகள் அதாவது எனது மருமகள்கள் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே என் வீட்டிலேயே தங்கி கல்லூரிப் படிப்பு முடியும் வரை நானே பார்த்துக் கொண்டேன்.
அதன் பின்னர் திருமண ஏற்பாடுகள் செய்து என் கண் குளிர பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் மழை வெள்ளம் போன்றவை ஏற்பட்டதாலும் வேறு காரணங்களாலும் மாற்று தேதி குறித்து மிகவும் சிக்கனமாக திருமணம் நடத்த வேண்டியதாயிற்று. இந்த விவரங்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளுக்குப் பதிலாக வேறு நாளில் நடந்தேறியது என்பது மட்டும் தான் எனக்கு தெரியுமே தவிர வேறு விபரங்கள் எதுவும் எனக்கு சொல்லவில்லை என்று தெரிவித்தேன்.
திருமணத்திற்குப் பின்னர் நீங்கள் இந்த வீட்டிற்கு வந்து சென்றதனையும் உங்களுடைய அறிவுறைகளின் படி இந்த குடும்பம் நடந்து கொள்வதையும் என்னுடைய வளர்ப்புப் பெண் கூறியதால் நான் உங்களிடம் நிறையப் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனால் தான் இன்று என்னை அவசர அவசரமாக இவள் அழைத்து நான் உங்களிடம் சில ஆலோசனைகள் கேட்பதற்காக வந்து இருக்கின்றேன் என்று சொன்னார்கள்.
நானும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு என்னிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் சொல்வதை பொறுமையாகக் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்.
இதற்கு இடையில் அவளது மருமகள் அவளது கணவரிடம் அதாவது என்னவளின் இரண்டாவது மகனிடம் சொல்லி என் அம்மா வந்து இருக்கின்றார்கள் உடனே புறப்பட்டு வாருங்கள் எனக் கூற அவனும் வந்து விட்டான். அவன் வந்தவுடன் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சாவகாசமாக உட்கார்ந்து பேசலாம் என்று கூற அனைவரும் சாப்பிட்டு முடித்தோம்.
அதன் பின்னர் அனைவரும் அமர்ந்து பேசும் சமயம் என்னவளின் இரண்டாவது மருமகள் அழைப்பின் பேரில் வந்தவர் பேச ஆரம்பித்தார்.
என் கணவர் பழைய பர்மா நாட்டிலிருந்து மரங்கள் வரவழைத்து விற்பனை செய்து வந்தார். எனக்கு நான்கு மகன்கள். பெண் குழந்தை கிடையாது. நான்கு பேரும் நன்றாகப் படிப்பவர்கள். எனவே எனது கணவர் அவர்களை தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்தார்.
கொடைக்கானல் மற்றும் ஊட்டியிலுள்ள தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைத்த காரணத்தாலோ என்னவோ அவர்களுக்கு வெளிநாட்டு மோகம் தலை தூக்கி விட்டது. படித்து முடிந்தவுடன் முதல் மகன் அமெரிக்கா சென்று விட்டான். இரண்டாவது மகன் லண்டன் சென்று விட்டான். மூன்றாவது மகன் சிங்கப்பூர் சென்று விட்டான். நான்காவது மகன் துபாய் சென்று விட்டான். அச்சமயம் தமது குழந்தைகள் நல்ல வேலைக்குச் சென்று விட்டதால் இனிமேல் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று வணிகத்தை நிறுத்தி விட்டு சுகவாசியாக இருந்தார்.
எனக்குப் பிறந்த பிள்ளைகள் இந்தியாவில் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கி படித்தார்கள். படித்து முடித்தவுடன் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார்கள். நான் அதிக நேரம் கூடவே இருந்து பேசிக்கொண்டிருந்தது இந்தப் பெண்ணிடம் மட்டுமே என்று அவர் சொல்லும் சமயம் அவரது கண்களில் நீர் வழிந்தது.
திடீரென என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாது போகவே தமது மகன்கள் அனைவரையும் ஒரு சேரப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அனைவருக்கும் வருமாறு அழைப்பு விடுத்தோம். ஒருவர் கூட வரவில்லை.
திடீரென ஒரு நாள் காலையில் எழுந்து பார்க்கும் போது அவரது உயிர் பிரிந்து இருந்தது. உடனடியாக அனைவரையும் அழைத்தும் சிங்கப்பூரில் உள்ள ஒரு மகன் தான் வந்து கொள்ளி வைத்தான். அவன் கூட 16 நாட்கள் காரியம் முடியும் வரை இருக்க முடியாது என்று சொல்லி விட்டு நான்காவது நாளே புறப்பட்டு விட்டான். என் கணவர் தமது புதல்வர்களை கடைசி காலத்தில் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டும் அவரால் யாரையும் காண முடியாத ஏக்கத்துடன் அவரது உயிர் பிரிந்தது.
அதன் பின்னர் இவளை தத்து எடுக்க முடிவு செய்ததற்கு அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. இவளை வளர்ப்பு மகளாக எடுக்க முடியாமல் வளர்ப்புப் பெண்ணாக மட்டும் வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்தேன்.
எனக்குள்ள ஒரே கவலை என்னுடைய மரணத்தின் போதாவது என்னுடைய மகன்கள் அனைவரும் ஒன்று கூடி எனக்கு காரியம் செய்வார்களா என்பது தான் என்று வருந்தினாள்.
நான் மட்டும் இங்கு தனியாக இருப்பதற்கு பிடிக்கவில்லை. எனவே என்னையும் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று நான் எனது பிள்ளைகளிடம் கேட்டு விட்டேன்.
அதற்கு அவர்கள் நாங்கள் இந்தியா வந்தால் தங்குவதற்கு ஒரு இருப்பிடம் வேண்டும். அதனைப் பாதுகாக்க நீங்கள் இங்கு தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். வேண்டுமானால் வருடத்தில் 15 நாட்களோ அல்லது ஒரு சில மாதங்களோ அங்கு வந்து எங்களுடன் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றார்கள். ஆக மொத்தத்தில் நான் என் கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்திற்கு எஜமானியாக இல்லாமல் வாட்ச்மேன் என்னும் அந்தஸ்த்தில் தான் இருந்து வருகின்றேன்.
நான் தனிமையில் இருப்பதால் நான் அகால மரணம் அடைந்தாலோ அல்லது என்னை யாராவது கொலை செய்தாலோ கூட அந்த விவரம் உடனே வெளியில் தெரியாது என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.
திருமணம் போன்ற விசேஷங்களில் புதுமணத் தம்பதிகளுடன் குரூப் போட்டோ எடுக்கும் சமயம் சில குடும்பத்தினர் 10 பேர் அல்லது 15 பேர் என நின்று கேமராவிற்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பார்கள். ஆனால் அயல் நாடுகளுக்குப் பிளளைகளை அனுப்பி வைத்த குடும்பத்தினர் முழுக் குடும்பமும் இல்லையே என்னும் வருத்தத்துடன் இருப்பார்கள். அவர்கள் முதத்தில் மாத்திரம் உண்மையான சந்தோஷம் இருக்காது.
நான் அவர்களிடம் கேட்டதிலிருந்து அவர்கள் அரண்மனை போன்ற பெரிய வீட்டில் கார் பங்களா வசதியுடன் தனிமையாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டேன்.
அதன் பின்னர் நான் என்னவளின் சம்மதத்துடன் அவளது சம்மந்தியுடன் பேச ஆரம்பித்தேன்.
இராமாயணத்தில் ராமன் லெட்சுமணன் சத்ருக்னன் பரதன் ஆகிய நான்கு மகன்களுக்கும் தந்தை தசரதச் சக்ரவர்த்தி. மூன்று மனைவிகளும் உண்டு.
தசரதச் சக்ரவர்த்தி தாம் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் வேட்டையாடச் சென்ற போது தண்ணீர் குடிப்பது போல ஓசை கேட்ட படியால் யானை தான் தண்ணீர் குடிக்கின்றது என்று நினைத்து தன்னுடைய அம்பினைச் செலுத்துகிறார். ஆனால் சிரவணன் என்னும் சிறுவன் குவளையில் தனது கண்கள் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோருக்காக சரயு நதிக் கரையில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தான். குவளையில் தண்ணீர் நிரப்பும் ஒலியினை யானை தண்ணீர் அருந்துவதாக எண்ணி அம்பு எய்திய காரணத்தினால் சிரவணன் உடலில் அம்பு பாய்ந்து இறக்கும் தருவாயில் என்னுடைய கண் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர் தண்ணீருக்காக தாகத்துடன் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி தண்ணீர் கொடுத்து தாகம் தீர்க்குமாறு கேட்டு உயிர் விடுகின்றான். சிரவணன் கேட்டுக் கொண்டபடி தசரதன் அவனது பெற்றோருக்கு குவளையில் நீர் கொண்டு சென்ற சமயம் கண் தெரியாத வயது முதிர்ந்தவர்கள் “நாங்கள் இருவரும் எங்கள் ஒரே மகனை இழந்து எப்படி என்ன செய்வதென்று அறியாமல் எங்கள் கடைசிக் காலத்தில் தவிக்கின்றோமோ அதே போல நீ ஒரு அரசனாக இருந்தாலும் உனது உயிர் பிரியும் சமயம் உன்னுடைய புத்திரர்கள் உன்னை விட்டுப் பிரிந்து புத்திர சோகத்தில் இருப்பாய்” என்று சபித்து விடுவதோடு மட்டுமல்லாமல் தங்களது மகன் சிரவணனை எரிக்கும் அந்த சிதையிலேயே விழுந்து உயிர் விடுகின்றனர்.
தசரதன் சிறு பிள்ளையாக இருக்கும் போது சிரவணனின் கண் தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர் கொடுத்த சாபத்தால் ஒரு சாம்ராஜ்யத்திற்கு சக்ரவர்த்தியாக இருந்தும் நான்கு புதல்வர்கள் இருந்தும் சாகும் தருவாயில் இராமன் பிரிந்த புத்திர சோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.
ஜாதகங்களில் வம்சாவழி ஜாதகம் என்று உண்டு. மாதவி வம்சாவழி ஜாதகம் உள்ளோருக்கு இரண்டாம் தாரமாகத் தான் வாழ்க்கைத் துணை அமையும். இராமன் வம்சாவழி ஜாதகம் உள்ளோர் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் ஏக பத்தினி விரதத்துடன் இருப்பார்கள். கிருஷ்ணன் வம்சாவழி ஜாதகம் படைத்தோர் கோபிகாஸ்திரிகளுடன் விளையாட்டாக எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். சீதை வழி ஜாதக அமைப்பு கொண்டோர் கணவர் எங்கு சென்றாலும் கூடவே சென்று வாழ ஆசைப்படுவார்கள். அது போன்ற காரணங்களால் தான் கடவுள்களின் ஜாதகத்தினை பூஜை அறையில் வைக்கின்றோம்.
உங்கள் கணவரது ஜாதகம் தசரதர் வம்சாவழி ஜாதகம் எனவே தான் கடைசி காலத்தில் புத்திர சோகத்தால் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.
என்னுடைய அனுமானத்தின் படி உங்களது புத்திரர்கள் வெளி நாடுகளில் வேலை செய்து எவ்வளவு சம்பாதித்தாலும் இந்தப் பெண்ணை தத்து எடுத்து வளர்ப்பு மகளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வதிலிருந்து அவர்கள் உங்கள் மீது காட்டும் அக்கரையினை விட பூர்வீக சொத்தின் மீது தான் அதிக ஆசை வைத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. ஏனெனில் இந்தப் பெண்ணை தத்து எடுத்தால் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அது தான் உண்மை.
இந்தப் பெண்ணை தத்து எடுத்து இருந்தால் திருமணம் செய்து வைத்து வீட்டோட மாப்பிள்ளையாக இவளது கணவரையும் சேர்த்து உங்களுடன் தங்க வைத்து இருப்பீர்களேயானால் இந்தப் பெண்ணின் தந்தை இருந்த இடத்தில் இந்தப் பெண்ணின் கணவர் தங்குவதால் ஒரு ஆண் துணையும் அந்த வீட்டில் கிடைத்து இருக்கும். பாது காப்பாகவும் இருந்திருக்க முடியும்.
இந்த நிலையில் உங்களுக்கு மன நிம்மதியும் நல்ல கவனிப்பும் தேவை. எனவே நீங்கள் உங்களது மகன்கள் மீது அக்கறை செலுத்துவதை விட இவள் மீது அக்கரை செலுத்தி இவளுக்கு அருகிலேயே இருப்பது நல்லது.
இவர்கள் புதிதாக வீடு கட்டப் போகின்றார்கள். உங்களுடைய பெயரில் ஒரு வீட்டினை சொந்தமாக வாங்கும் அளவிற்கு பணம் உங்கள் கைவசம் இருந்தால் அந்த பணத்தைக் கொண்டு அந்த வீட்டிற்கு அருகிலேயே இன்னொரு வீட்டினை வாங்கி அந்த இடத்தில் குடிவந்து இருந்தால் உங்களுக்கு நல்ல கவனிப்பு கிடைக்கும். உங்களது பிள்ளைகள் விருப்பப்பட்டால் அந்த வீட்டினை இவளுக்குக் கொடுக்கலாம் அல்லது உங்கள் உயிர் பிரிந்த பின்னர் பிள்ளைகள் எடுத்துக் கொள்ளட்டும். அந்த விவரம் உங்களுக்குத் தெரியப் போவது இல்லை.
இதற்கு அடுத்த படியாக உங்களிடம் கொஞ்சம் தான் பணம் இருக்கின்றது எனில் ஒரு வீட்டினை ஒத்திக்குப் பிடித்து இவர்கள் அருகில் இருக்கலாம்.
அதுவும் இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட தொகையினை புதிதாக வீடு வாங்கப் போகும் இவர்களிடம் கொடுத்து ஒத்திப் பணமாக வைத்துக் கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்டு இவர்கள் கட்டும் வீட்டின் ஒரு பகுதியில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம்.
உங்களுடைய மகன்கள் மாதாமாதம் பணம் அனுப்பி அதனை எப்படி செலவு செய்தீர்கள் என்று கேட்கும் நிலையில் உங்கள் மகன்களின் மன நிலை இருக்குமானால் நீங்கள் இவர்கள் கட்டி குடியேறப் போகும் ஒரு அறைக்கு வாடகையாக கொடுத்து நீங்கள் எப்போதெல்லாம் பிரியப் படுகின்றீர்களோ அப்போதெல்லாம் வந்து இவர்கள் அருகில் இருந்து விடலாம். அடிக்கடி இருவரும் விருந்துகள் வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம்.
நீங்கள் உங்கள் மகன்களுக்கு அருகில் கடைசி காலத்தில் இருக்க வேண்டும் என்பதனை மறந்து விட்டு கடைசி காலம் வரையில் நீங்கள் தத்து எடுத்து வளர்க்க ஆசைப்பட்ட இந்தப் பெண்ணுக்கு அருகிலேயே இருப்பது நல்லது என்பது என்னுடைய ஆலோசனை.
இந்த குடும்பத்தினர் எனக்கு வேண்டியவர்கள் என்பதால் இவ்வாறான யோசனை நான் கொடுக்கின்றேன் என்று தயவு செய்து தவறுதலாக எண்ணி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
உங்களது தற்போதைய நிலை அரண்மனைத் தனிமை. அதாவது அரண்மனை போன்ற வீடு இருந்தும் தனியாக வாழ வேண்டிய அவல நிலை.
தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் கூட உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர மாட்டார்கள். அவர்களுக்கு எப்போது விடுமுறை கிடைக்கின்றதோ அல்லது அவரவரது மாமனார் சொந்தங்களில் எப்போது விசேஷங்கள் வருகின்றதோ அப்போது அவரவர் இஷ்டப்படி வந்து தங்கி விட்டு இந்த ஊரில் மாசு அதிகமாக உள்ளது, சுத்தமாக இல்லை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது, சீதோஷ்ன நிலை ஒத்துக் கொள்ளவில்லை என்று ஏதேனும் ஒரு சாக்கு சொல்லி உடனே திரும்பி விடுவார்கள். இதனால் கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாக அனைவரும் ஒன்று கூடவே முடியாது என்று சொன்னேன்.
அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. உடனே அவர் தமது சம்மந்தி அதாவது என்னவளிடம் நான் 5 லட்சம் அல்லது 10 லட்சம் கொடுக்கின்றேன். தயவு செய்து எனக்கு இவர் சொன்னது போல ஒரு அறையினையோ அல்லது ஒரு போர்ஷனையோ ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். உடனே மூவரும் சேர்ந்து ஒப்புக் கொண்டனர்.
அதன் பின்னர் நான் நாளை காலையில் இங்கிருந்து புறப்படுகின்றேன் நீங்கள் மூவரும் சேர்ந்து இவரையும் என்னுடன் அழைத்து வாருங்கள் என் வீட்டில் எனக்குத் துணையாக இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஓரிரு வார காலம் தங்கியிருந்து விட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பி விடலாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு என்னவளின் மகன் நான் அலுவலகத்தில் லீவு போட முடியாது எனவே நான் ஞாயிற்றுக் கிழமையன்று வருகின்றேன். நாம் அனைவரும் ஒன்றாக புறப்படலாம் என்று சொன்னான். அதற்கு அவர்கள் நான் எப்போதும் தனிமையில் இருக்கின்றேன் எனவே தான் அனைவரும் வந்து என்னுடன் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதன்படி என்னவளும் அவளது மருமகளும் மாத்திரம் அவருடன் செல்வது என்று தீர்மானித்தார்கள். என்னையும் அழைத்த காரணத்தால் வீடு எங்கே இருக்கின்றது என்று கேட்டதற்கு காஞ்சிபுரம் என்று சொன்னவுடன் தான் எனக்கு அந்த விவரமும் தெரிய வந்தது.
நான் அவர்களிடம் விடைபெறும் சமயம் அந்த குடும்பத்தார் அனைவரும் மனமில்லாது வழியனுப்பி வைத்தார்கள். என்னவளின் நிலையும் எனது நிலையும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாதபடி உள்ளத்தில் அழுகை உதட்டினில் சிரிப்பு.