சொந்த வீடு வாங்கும் பாக்கியம் பெற செய்ய வேண்டிய வழிபாடுகள்
எனது தேவதையின் மகன் திருமண பத்திரிக்கையினை கொடுத்து அழைக்க எனது வீட்டிற்கு வந்த சமயம் நான் எனது உறவினர் இல்ல திருமணத்திற்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். எனது குடும்பத்தார் கல்யாண மண்டபத்திலேயே இருந்தனர். மாலை மற்றும் இரவு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் தான் வீடு திரும்புவார்கள்.
அவளது மகன் எனது வீட்டு விலாசத்தினை கையில் வைத்துக் கொண்டு தேடிக் கொண்டிருந்தான். நான் சரியாக அந்த நேரத்தில் எனது வீட்டிற்கு திரும்பி அவனை எனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று திருமண பத்திரிக்கை பெற்றுக் கொண்டு சுவீட் காரம் கொடுத்து பின்னர் குளிர் பானம் கொடுத்தேன். ஆர்வமுடன் என்னை கட்டாயம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். நானும் சரியென்றேன்.
எனது குடும்பத்தாரை இதுவரையில் அவன் பார்த்திராத காரணத்தால் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். எனது குடும்பத்தாரை காண முடியாதது அவனுக்கு ஏக்கம். அவன் என் குடும்பத்தார் கண்ணில் படாதது எனக்கு சந்தோஷம்.
வழக்கம் போல் ஏற்கனவே நம்மிடையே உள்ள புரிதலின்படி திருமண பத்திரிக்கையில் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் 4 மாதங்கள் கழித்து அவளது வீட்டிற்குச் சென்றேன்.
நான் சென்ற சமயம் அவளும் அவளது மருமகளும் இருந்தார்கள். அப்போது அவள் தனது மருமகளிடம் என்னை அறிமுகப்படுத்தி விட்டு எனக்கு பானம் கொண்டு வருமாறு கூறினாள். அவளது மருமகள் சமையலறைக்குச் சென்றவுடன் என்னிடம் திருமணம் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
என்னுடைய மகனுடைய திருமண நாளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக திடீர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமண மண்டபங்கள் அனைத்திலும், வீடுகளில் வெள்ளம் புகுந்தோர் தங்க வைக்கப்பட்டமையால் அன்றைய தினம் திருமணம் நடத்த முடியவில்லை. எனவே அதற்குப் பின்னர் மீண்டும் ஒரு தேதி குறித்து திருமணப் பத்திரிக்கை மீண்டும் அச்சடிக்காமல் மிகவும் முக்கியமானவர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு திருமண நிகழ்ச்சி எளிதாக முடிக்கப்பட்டது என்று சொல்லி எனது முதல் மகளை இரயில் பயணத்தின் போது நடுவழியில் உள்ள ஊரில் ஈன்றெடுத்தேன். அதே போல இவனது கல்யாணத்தை சற்றும் எதிர்பாராத படி வேறு வழியில் சிக்கனமாக நடத்த வேண்டியதாயிற்று என்று கண் கலங்கினாள்.
அவளது மருமகள் இரண்டு டம்ளர்களில் காப்பி கொண்டு வந்தாள். அதற்கு அவள் அவருக்கு ஒரு டம்ளர் கொடுத்து விட்டு நீ ஒரு டம்ளர் காப்பி குடித்து விடு எனக்கு வேண்டாம் என்று சொன்னாள். அவளும் சரியென்று சொல்லி உள்ளே சென்ற சமயம் நானும் அவளும் வழக்கம் போல் அவள் மருமகளுக்குத் தெரியாமல் பாதி பாதி குடித்தோம்.
சற்று நேரத்தில் அவளது மகன் உள்ளே நுழைந்தான். அவனும் தன் பங்கிற்கு திருமண களேபரங்கள் பற்றி தெரிவித்தான். நான் கொண்டு சென்று இருந்த திருமண பரிசுப் பொருளினை புது மணத் தம்பதியினரிடம் கொடுத்தேன். அவள் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ளச் சொன்னாள். அதற்கு அவளது மகன் நீயும் கூட இவருடன் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வாதம் செய் என்று சொன்னவுடன் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர்களை ஆசீர்வதித்தோம் வாழ்க்கையில் முதன்முறையாக நாம் இருவரும் சேர்ந்து.
அதன் பின்னர் அவள் தனது மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து என்னிடம் வீடு வாங்குவது பற்றி ஆலோசனை கேட்க ஆரம்பித்தாள்.
சொந்த வீட்டினை விற்று வந்த பணத்தினை இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்குக் கொடுத்தேன். அதனைக் கொண்டு பெரிய மகன் தனது மாமனார் கொடுத்த இடத்தில் வீடு கட்டிக்கொண்டு போய் விட்டான்.
இவனிடம் உள்ள பணத்தை வைத்துக்கொண்டு சிறிய பட்ஜெட்டில் வீடு வாங்கலாம் என்று முயற்சிக்கின்றோம் ஆனால் முடியவில்லை.
சென்ற முறை சென்றது போல ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் சென்று காட்டினோம் என்று கூறிவிட்டு ஜோதிடர் என்ன சொன்னார் என்பதனை நீ சொல் என்று தனது பையனிடம் சொன்னாள்.
அதற்கு அவன் ஒவ்வொருவருடைய ஜனன காலத்தில் லக்னத்திலிருந்து நான்காம் வீட்டைக்கொண்டு அவருக்கு வீடு மனை வாங்கும் யோகம் பற்றி அறியலாம் எனவும் 4ம் வீட்டில் எத்தனை சுப கிரகங்கள் அமைந்தாலும் 4ம் வீட்டை எத்தனை சுப கிரகங்கள் பார்வை செய்தாலும் 4ம் அதிபதியுடன் எத்தனை சுபகிரகங்களின் சேர்க்கை இருந்தாலும் அத்தனை வீடு மற்றும் மனை வாங்கும் யோகங்களானது அமையும் என்று ஜோதிடர் கூறினார் எனவும் தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருப்பதால் வீடு அமையும் யோகம் சற்று தள்ளிப்போகும் என்றும் தெரிவித்தார். நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டுமெனில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இரண்டு கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அது தவிர புத்தி, திசை என்றெல்லாம் நிறையச் சொன்னார் அவற்றை என்னால் மீண்டும் நினைவு படுத்தி தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று அவளது மகன் என்னிடம் தெரிவித்தான்.
ஜோதிடர் எங்கள் அனைவரது ஜாதங்களையும் அலசி ஆராய்ந்து சொந்த வீடு அமைய சுக்கிர ஓரையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிவுறை சொன்னார் எனவும் தெரிவித்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் வந்த பின்னர் தங்களிடம் ஆலோசனை கேட்கலாம் என்று தான் காத்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள்.
நான் என்னவளிடம் திருமணத்திற்கு முன்னர் திருப்பதி மற்றும் காளஹஸ்தி சென்று வந்தீர்கள். திருமணம் ஆன பின்னர் திருப்பதி சென்று வந்தீர்களா என்று கேட்டேன். மூவரும் சேர்ந்து ஒரே குரலில் இல்லை என்று பதில் சொன்னார்கள். அதன் பின்னர் வீடு வாங்குவது பற்றி நான் அவர்களுக்கு அறிவுறைகள் சொல்ல ஆரம்பித்தேன்.
கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடுவோம். ஆற்றுமணலை எங்காவது வீட்டின் அருகே வீடு கட்டுவதற்காக கொட்டி வைத்து இருப்பார்கள் அல்லது திருவிழாக்களின் போது ஆற்று மணல் கொட்டி வைப்பார்கள். அவ்வாறான ஆற்று மணலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஈரப்பதம் ஏற்படுத்திவிட்டு நாங்கள் (என்னவளைப் பார்த்துக் கொண்டே) சின்னஞ்சிறு வயதில் மணல் வீடு கட்டி அம்மா அப்பா விளையாட்டு விளையாடுவோம். அது கற்பனை அல்ல. அது வேடிக்கை அல்ல. அது விளையாட்டு அல்ல. நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் சொந்தமாக வீடு கட்டி வசதியாக வாழ வேண்டும் என்பதற்கான எதிர்காலத்திற்கான திட்டமிடல் தான் நம் முன்னோர்களால் மணல் வீடு கட்டும் விளையாட்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டது.
அதே போல் ஒரு பெரிய கல்லை வைத்து (அஸ்திவாரம்) அதன் மீது அதனை விட சிறிய கல் ஒன்றை வைத்து (இருப்பிடம்) அதன் மீது அதனை விட சிறிய கல் ஒன்றை வைத்து (மொட்டை மாடி அல்லது மேற்கூரை) விளையாடுவோம். அதுவும் நம் முன்னோர்களால் மேலே சொன்னபடி உருவாக்கப்பட்ட விளையாட்டு அதாவது எதிர்காலத் திட்டமிடல்.
பல புண்ணிய ஸ்தலங்களில் இவ்வாறாக மூன்று கற்கள் அல்லது நான்கு கற்கள் அல்லது ஐந்து கற்கள் கிரிவல மலைப் பாதைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அவை அங்த கோயில்களுக்கு வரும் பக்தர்களால் தமக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்பதற்கான வழிபாட்டு வேண்டுதல்கள்.
பல புண்ணிய ஸ்தலங்களில் இவ்வாறாக மூன்று கற்கள் அல்லது நான்கு கற்கள் அல்லது ஐந்து கற்கள் கிரிவல மலைப் பாதைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அவை அங்த கோயில்களுக்கு வரும் பக்தர்களால் தமக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்பதற்கான வழிபாட்டு வேண்டுதல்கள்.
அதே போல பல புண்ணிய ஸ்தலங்களில் கீழேயிருந்து தம்மால் முடிந்த அளவு ஒரு கல்லை எடுத்துக் கொண்டு போய் மலை உச்சியில் உள்ள கோயிலில் சேர்ப்பார்கள். அதுவும் வீடு கட்ட வேண்டி நாம் மேற் கொள்ளும் ஒரு வகையான பிரார்த்தனை. உதாரணம் சபரி மலை செல்லும் பக்தர்கள் பம்பை நதியிலிருந்து கல் கொண்டு சென்று கல்லிடும் குன்றில் வைப்பது.
தற்போது மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் மாதிரி வீடுகள் செய்து கொண்டு வருமாறு பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் சொல்வதும் அவ்வகையான ஒரு தூண்டுதல்களின் வெளிப்பாடேயாகும்.
சரி. நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்.
ஒரு வீட்டு மனை என்பது ஐந்தரை செண்டு பரப்பளவு உள்ள நிலம். அதாவது 60 அடி நீளம் 40 அடி அகலம் கொண்டது. இந்த மனையினை நமது பெயருக்கு வாங்க வேண்டும் என்றால் நமக்கு ஜாதகப்படி யோகம் இருக்க வேண்டும். ஜாதகத்தில் தற்போது அந்த யோகம் இல்லை. அவ்வாறான ஜாதக அமைப்பு உடையவர்கள் தனியாக இடம் வாங்கி அதில் வீடு கட்டுவதற்கு பதிலாக அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு பகுதியினை வாங்க முடியும்.
உதாரணமாக 60 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட மனையின் பரப்பளவு 2400 சதுர அடியாகும். இரண்டு பேர் சேர்ந்து வாங்கினால் ஒருவர் பெயரில் 1200 சதுர அடி மட்டுமே பதிய முடியும். மூன்று பேர் சேர்ந்து வாங்கினால் 800 சதுர அடி மட்டுமே பதிய முடியும். இதே இடத்தில் அடுக்கு மாடிக்குடியிருப்பு பத்து தளங்கள் அமையுமேயானால் மாடிப்படி மற்றும் பொது உபயோகத்திற்கு என உள்ள பரப்பளவைக் கழித்து மீதமுள்ள இடத்தினை நமக்கு கொடுக்கும் சமயம் 240 சதுர அடிக்கு கீழ் தான் பதிய முடியும். நாம் உபயோகிக்கும் பரப்பளவு ஒவ்வொரு தளத்திலும் 2000 சதுர அடியாக இருந்தாலும் நமக்கென்று பதியப்பட்ட பரப்பளவு மிகவும் குறைவு தான். வீடு கட்டக் கூடிய இடம் அனைவருக்கும் பொது. உபயோகப் படுத்தும் பரப்பளவு மட்டும் நமக்குச் சொந்தம். ஆனால் நாம் எந்த விதமான மாறுதல்களும் செய்ய முடியாது. இவ்வாறுள்ள இடங்களில் ஜாதகப்படி வீடு வாங்கும் யோகம் இல்லாதவர்கள் கூட சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த காரணத்தால் தான் ஜாதகப்படி வீடு வாங்கும் யோகம் இல்லாதவர்கள் கூட அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்க முடிகின்றது.
சில செல்வந்தர்கள் தம்மிடம் உள்ள உபரி பணத்தினை முதலீடு செய்ய வீடுகள் வாங்கி போடுவார்கள். அவ்வாறு உபரி பணத்தினை முதலீடு செய்ய அவர்கள் தேர்ந்தெடுப்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்துள்ள வீடுகள். ஜாதகப்படி அவர்களுக்கு வீடுகள் வாங்கும் யோகம் இருப்பதால் அவர்களால் மேலும் மேலும் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட முடிகின்றது அல்லது தமக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவச வசிப்பிடமாக உபயோகித்துக் கொள்ள கொடுக்க முடிகின்றது. வீடு வாங்கும் யோகம் ஜாதகப்படி இல்லாதவர்களுக்கு அவ்வாறான செல்வந்தர்களின் யோகம் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்குவதால் வந்து விடுகின்றது என்பது வெளியில் தெரியாத வாஸ்து ரகசியம்.
சில செல்வந்தர்கள் தம்மிடம் உள்ள உபரி பணத்தினை முதலீடு செய்ய வீடுகள் வாங்கி போடுவார்கள். அவ்வாறு உபரி பணத்தினை முதலீடு செய்ய அவர்கள் தேர்ந்தெடுப்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்துள்ள வீடுகள். ஜாதகப்படி அவர்களுக்கு வீடுகள் வாங்கும் யோகம் இருப்பதால் அவர்களால் மேலும் மேலும் பல வீடுகள் வாங்கி வாடகைக்கு விட முடிகின்றது அல்லது தமக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவச வசிப்பிடமாக உபயோகித்துக் கொள்ள கொடுக்க முடிகின்றது. வீடு வாங்கும் யோகம் ஜாதகப்படி இல்லாதவர்களுக்கு அவ்வாறான செல்வந்தர்களின் யோகம் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்குவதால் வந்து விடுகின்றது என்பது வெளியில் தெரியாத வாஸ்து ரகசியம்.
சொந்தமாக வீடு வாங்கும் யோகம் ஜாதகப்படி சில ஆண்டுகள் கழித்து தான் வருகின்றது. தற்போதைக்கு இல்லை. அப்போது என்ன செய்யலாம். நம்மிடத்தில் உள்ள சொற்ப தொகையினை வங்கிகளில் டெபாசிட்டாக செலுத்தி இடம் வாங்கி அந்த இடத்திற்கான பத்திரத்தையும் வங்கியில் வைத்து கடன் பெற்று வீடு கட்டி குடியேறலாம். வீட்டில் குடியிருக்கும் உரிமை மாத்திரம் நமக்கு உண்டு. வீட்டிற்கான கடன் முழுவதும் நாம் வங்கிக்கு செலுத்தி முடிக்கும் வரையில் வீட்டிற்கான அல்லது வீடு கட்டும் இடத்திற்கான மூலப் பத்திரம் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். நாம் கடன் அடைத்து முடிக்கும் வரையில் கடன் கொடுத்த வங்கி தான் இடத்திற்கான உரிமையாளர் என்னும் அந்தஸ்த்தில் இருக்கும். எனவே நமது ஜாதகத்தில் பூமி காரகனாகிய செவ்வாயின் பலவீனத்தால் நமக்கு ஏற்படும் தாக்கம் குறைந்து விடும். ஜோதிடர்கள் சொல்வது போல செவ்வாய் எப்போது பலம் பெறுகின்றாரோ அந்த நேரத்தில் நமது கடன் தொகை முழுவதும் அடைக்கப்பட்டு சொத்துப் பத்திரம் நம் கைக்கு வந்து சேரும்.
இதன்படி தான் தற்போது உள்ள தலைமுறையினர் ஜாதகப் படி கிரக பலாபலன்கள் எப்படி இருந்தாலும் அலுவலகத்தில் கடன் பெற்று வீடு வாங்க முடிகின்றது. வசதியாக வாழ முடிகின்றது.
இதற்கு முந்தைய தலைமுறையினர் அயராது உழைத்து சம்பாதித்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பும் அளவுக்கு தம் வாரிசுகளை உயர்த்தி இருந்தாலும் இவ்வாறான நடைமுறை அப்போது இல்லாத காரணத்தால் தான் அந்த தலைமுறையினர் வீடு வாங்க கஷ்டப்பட வேண்டியிருந்தது.
சிலரது வீடுகள் எப்போதும் அடமானத்தில் தான் இருக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கு நம் முன்னோர்கள் சொன்ன அறிவுறைகள் வீடு மற்றும் நிலம் ஆகியவற்றுக்கான பத்திரங்களை நீழ் வசத்தில் தான் (கோர்ட் கட்டு போல) மடக்கி வைக்க வேண்டுமே தவிர அகல வசத்தில் மடக்கி வைக்கக்கூடாது என்பது.
பேசிக் கொண்டிருக்கும் போது என்னவள் திருப்பதி சென்று நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இன்னும் சொல்லவில்லையே என்று கேட்டாள். அதற்கு நான் யார் யார் செல்ல போகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவள் பெரிய மகனை அழைத்தால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் செலவு செய்ய வேண்டும். மகளை அழைத்தால் கட்டாயம் மரியாதைக்காகவாவது நாம் தான் செலவு செய்ய வேண்டும். அந்த செலவினை இவனுக்கு வைக்க நான் விரும்பவில்லை என்றாள்.
நீங்கள் மூவரும் சேர்ந்து திருப்பதி சென்று அங்குள்ள புஷ்கரணி குளத்தில் குளித்துவிட்டு அந்த குளக்கரையில் அமைந்துள்ள நாகர் விக்ரஹங்களை வழிபட்டு விட்டு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ வராக ராஜப் பெருமாளை வணங்கிவிட்டு திருப்பதி கோயிலுக்குள் செல்ல வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கடவுளை வணங்கி விட்டு வெளியில் வந்த பின்னர் அருகில் இருக்கும் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் உள்ள வகுள மாதா தேவி அம்மனை வழிபட்டு பெருமாளின் மதில் சுவர்களில் இருக்கும் சிம்ம வாகனங்களை (கருட வாகனம் இருக்காது) வழிபட வேண்டும். அதன் பின்னர் கோபுர ஸ்ரீநிவாசப் பெருமாள் எதிரே (ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் விமானத்தில் அம்புக்குறி போட்டு காட்டப்பட்டிருக்கும்) சில நிமிடங்கள் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனைகளை வைத்த பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு உண்டிலுக்கு எதிர்வரிசை மூலையில் வீற்றிருக்கும் யோக நரசிம்மரை வழிபட வேண்டும். யோக நரசிம்மர் சன்னதியை வலம் வரும் சமயம் யோக நரசிம்மருககு வலது புறத்தில் உள்ள ஒரு தூணில் நான்கு கடவுள்கள் இருக்கும் அந்த தூணிற்கு அடியில் தான் திருப்பதி கோயிலுக்கு முதன் முதலாக அடிக்கல் நாட்டப்பட்டது. எனவே அந்த தூணை 3 முதல் 21 முறை வலம் வந்து சொந்த வீடு வாங்க பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். கோயிலுக்குள் செல்லும் சமயம் நேற்றிக் கடன் சாமான்கள் விற்பவர்கள் வீடு போன்று வடிவில் நேற்றிக் கடன் சாமான் விற்றுக் கொண்டு இருப்பார்கள். அதனை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விட்டு வந்தால் மிக மிக விரைவில் சொந்த வீடு அமையும்.
திருமணம் சுபமாக நடந்தேறிவிட்டதற்கான ஒரு நன்றி தெரிவிப்பினை ஏழுமலையானுக்கு மீண்டும் ஒரு முறை மூவரும் சேர்ந்து மருமகள் கர்ப்பமாகுமுன்னர் மேற்கொண்டால் இன்னும் நல்லது என்று தெரிவித்தேன். அதற்கும் என்னிடமே நாள் குறித்து வாங்கிக் கொண்டு என்னையும் அழைத்தார்கள். எனக்கு அந்த குடும்பத்துடன் சென்று வரும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் இல்லை என்பது நம் இருவருக்கும் தெரியும்.
இது தவிர வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்டனர்.
அதற்கு நான் சென்னை கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 33 கிலோ மீட்டர் தூரத்தில் இடது பக்கம் திரும்பி 3 கிலோ மீட்டர் தூரம் சென்றால் அங்கு சிறுவாபுரி என்னும் இடத்தில் ஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்திற்கு சென்று ஒரு முறை வழிபட்டு வந்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் கட்டாயம் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழ் நாட்டிலேயே சொந்தமாக வீடு வாங்கும் பேற்றினை கொடுக்கும் ஒரே கோவில் இது மட்டும் தான். வேறு எங்கும் இது போன்ற கோவில்கள் இல்லை.
இங்குள்ள முருகன் வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் இங்கு காட்சி தருவதால் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி வீடு கட்டுவதில் உள்ள தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த முருகனை வழிபட்டால் திருமணத் தடைகளும் விலகும் என்பது ஐதீகம். எனவே கட்டாயம் சிறுவாபுரி சென்று வாருங்கள் என்று சொன்னேன்.
இந்த நேரத்தில் அவளது மருமகள் திடீரென்று என்னிடம் என்னை நீங்கள் மீண்டும் ஒரு முறை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எனது காலில் விழுந்தாள். நானும் சரியென்று ஆசீர்வதித்து விட்டு மீண்டும் ஒரு முறை எதற்காக என்று கேட்டேன்.
எங்கள் குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கரையுடன் பொறுமையாக என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டு நான் அசந்து போய் விட்டேன் என்று சொன்னாள். அதற்கு அவள் உனது நாத்தனார் அதாவது விஜியின் திருமணத்திற்கு அவர் இவரிடம் மட்டும் தான் ஆலோசனை கேட்டு திருமணம் செய்து வைத்தார். அப்போது அவளுடைய மகன் அண்ணனுடைய காதல் திருமணத்தை முன்னின்று பேசி நடத்தி வைத்தவரும் இவர்தான் என்பது எனக்கு நீண்ட நாட்கள் கழித்து தான் தெரியும். அதே போல என்னுடைய திருமணத்திலும் அறுவுறைகள் வழங்கியது இவர்தான். மொத்தத்தில் இவர் தான் எங்கள் குடும்ப ஆலோசகர் என்று சொன்னான்.
நான் அந்த குடும்பத்திற்கு ஆலோசகரா அல்லது குடும்பத் தலைவிக்கு நெருக்கமானவரா என்பது பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டியது நானும் அவளும் தான்.
இதற்கு இடையில் சிறப்பு உணவினை அவளும் அவளுடைய மருமகளும் சேர்ந்து தயாரித்து அனைவரும் மதிய உணவு உட்கொண்டோம்.
அவளது மருமகள் வெற்றிலை பாக்கு கொண்டு வரவா அல்லது பீடா கொண்டு வரவா என்று கேட்டாள். உடனே என்னவள் அவர் வெற்றிலை பாக்கு பீடி சிகரட் மது போன்ற எதனையும் தொடக் கூட மாட்டார் என்று சொல்ல எப்படி என்று கேட்டாள். அதற்கு என்னவள் சொன்ன பதில் அது அப்படித்தான்.
நான் விடைபெறும் சமயம் அவளது மகனும் மருமகளும் அடுத்து எப்போது வருவீர்கள் என்று கேட்டனர். ஆனால் என்னவள் இவ்வளவு சீக்கிரம் புறப்படவேண்டுமா இருந்து இரவு சிற்றுண்டி சாப்பிட்டு விட்டுச் செல்லலாமே என்றாள். அது தான் உண்மையான காதல். நான் எதுவும் பேசாமல் சென்று வருகின்றேன் என்று சொல்லி புறப்பட்ட சமயம் இரண்டு இதயங்கள் சரியென்றாலும் ஒரு இதயம் உள்ளுக்குள் அழ ஆரம்பித்து விட்டது. அது தான் கலாச்சாரக் கைதிகளின் நிலை.