திருமணத் தடைகளும் அவற்றிற்கான பரிகாரங்களும்.
மீண்டும் மீண்டும் எனது எண்ண அலைகள் அவளது நினைவாகவே இருந்தது. அவளைப் பார்க்க வேண்டும். அவளுடன் பேச வேண்டும் என்ற எண்ணங்களே மேலோங்கி இருந்த படியால் அவளைப் பார்க்க மீண்டும் அவள் வீட்டிற்குச் சென்றேன்.
அவள் வீட்டிற்குச் சென்ற சமயம் அவள் வீட்டில் இல்லை. அடுத்த வீட்டில் விசாரித்த போது பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றிருப்பதாகவும் திரும்ப வரக்கூடிய நேரம் தான் என்றும் சொன்னார்கள். நான் அமருவதற்காக ஒரு இருக்கையும் கொடுத்தார்கள். நான் அமர்ந்த சற்று நேரத்தில் அவள் கோவிலுக்குப் போய் விட்டு திரும்பினாள்.
என்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்துடன் சந்தோஷப்பட்டாள். அதன் பின்னர் அவள் வீட்டிற்குள் போய் அமர்ந்தேன்.
வழக்கம் போல் எனக்கு காப்பி கொடுத்து விட்டு இருவரும் பகிர்ந்து பருகிய பின்னர் தனது மகனது திருமண ஏற்பாடுகள் குறித்து சொல்ல ஆரம்பித்தாள்.
நீங்கள் சென்ற முறை வந்த போது சொன்னபடி கோயிலுக்குச் சென்று பரிகார பூஜை செய்யலாம் என நானும் என்னுடைய மகனும் பேசிக் கொண்ட போது அவன் ஒரு நல்ல ஜோசியரிடம் ஜாதகத்தைக் கொண்டு போய் காட்டி ஜோதிடர் என்ன சொல்கின்றாரோ அந்த கோயிலுக்குச் சென்று வந்தால் நலமாய் இருக்கும் என கூறினான்.
அதன்படி நானும் என்னுடைய மகனும் இங்குள்ள ஒரு நல்ல ஜோதிடரிடம் என்னுடைய ஜாதகத்தையும் என்னுடைய மகனுடைய ஜாதகத்தையும் காண்பித்து வரச் சென்றோம். ஜோதிடரிடம் நிறைய கூட்டம் இருந்தது. இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்துடைய ஜாதகங்களையும் எடுத்து பலன் சொல்லும் சமயம் அனைவரும் அதே இடத்திலேயே இருந்தனர். யாரையும் தனியாக அழைத்து ஜாதகத்தில் உள்ள கிரக நிலை மற்றும் பரிகாரம் செய்ய வேண்டியது என்ன என்பதனை சொல்லாமல் அனைவருக்கு முன்னாலும் ஜாதகப் பலன்களைச் சொன்னார்.
என் மகன் அவரிடம் செல்வதற்கு முன்னர் காதில் வைத்து இசை கேட்கும் வாக்மேன் கொண்டு வந்து இருந்தான். என்னிடமும் சொல்லாமல் எனக்கும் தெரியாமல் ஜோதிடர் கூறியவற்றை அப்படியே ரிக்கார்டு செய்து வந்து எனக்கு போட்டுக் காண்பித்தான்.
அவர் நிறைய பேருக்கு நவக்கிரஹ கோவில்களுக்கு சென்று வருமாறும் அவைகள் அமைந்துள்ள இடங்கள் பற்றியும் கூறினார். அவர் சொன்ன கோவில்கள் பின் வருவன.
சூரியன் - சூரியனார் திருக்கோவில்
சந்திரன் - திங்களுர்
செவ்வாய் - வைத்தீஸ்வரன் திருக்கோவில்
புதன் - திருவெண்காடு
குரு - ஆலங்குடி
சுக்கிரன் - கஞ்சனூர்
சனி - திருநள்ளாறு
ராகு - திருநாகேஸ்வரம்
கேது - கீழப்பெரும்பள்ளம்
அதே போல ஜாதகத்தில் தோஷங்கள் இருப்பவர்களுக்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் பற்றியும் எந்த நாளில் எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துச் சொல்லி அவைகள் அமைந்துள்ள இடங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். அவர் ஜாதகம் பார்த்து சில குறிப்பிட்ட நபர்களுக்கு கீழ்க்காணும் ஊர்களில் அமைந்துள்ள கோவில்களுக்குச் சென்று வருமாறு சொல்லி தனி பேப்பர்களில் எழுதிக் கொடுத்து இந்த இடங்களில் இந்த பூஜைகள் செய்தால் இத்தனை நாட்களில் திருமணம் கைகூடும் என்பதனைக் கேட்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
முடிச்சூர்
திருமணஞ்சேரி
நாச்சியார்கோவில்
திருக்கருகாவூர்
திருச்சேரை
காளஹஸ்தி
திருவேதிக்குடி
திருவேள்விக்குடி
ஒரு சிலர் தமக்கோ அல்லது தமது பெற்றோருக்கோ அறுபது வயதுகள் பூர்த்தி ஆவதால் சஷ்டியப்த பூர்த்தி என்னும் திருமணத்தை நடத்து ஆவலுடன் வந்து நாள் நட்சத்திரம் நேரம் ஆகியவற்றை குறித்துக் கொடுக்குமாறு கேட்டு வாங்கிச் சென்றனர். எனக்கு அந்த பிராப்தம் இல்லை என்றாலும் அவர் 60 வயது பூர்த்தியானவர்கள் செல்ல வேண்டிய கோயில் என்று குறிப்பிட்டுச் சொன்ன கோயில்
திருக்கடையூர் - 60 வயது பூர்த்தி திருமணம்
சிலர் தம்முடைய கணவன் மார்களுக்கு உடல் நிலை சரியில்லை. தமது மனைவி மார்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று ஜாதகம் காட்டிய போது உடல் நிலை சீராகவும் நீண்ட நாட்கள் வாழ்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று கூறி உடல் நிலை சீரடைந்து நடக்கக் கூடிய நிலைக்கு வந்தவுடன் செல்ல வேண்டிய கோயில் எனவும் மாங்கல்ய பலம் பெறுவதற்கும் குறிப்பிட்டுச் சொன்ன கோயில்.
திருமங்கலக்குடி – மாங்கல்யபலம்
சிலர் தமது தமது வாரிசுகளது ஜாதகங்களைக் காண்பித்து திருமணம் ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை எனவும் சிலர் கர்ப்பமாகவுள்ள தமது மகள் அல்லது மருமகள் சுகப்பிரசவம் ஆகி நல்ல திட ஆரோக்கியத்துடன் குழந்தை பெறவேண்டி கேட்டனர். அதற்கு அந்த ஜோதிடர் சென்று வருமாறு குறிப்பிட்டுச் சொன்ன கோவில்
திருக்கருக்காவூர் - கர்ப்பரட்சாம்பிகை திருக்கோவில்
சில பெற்றோர் தமது மகன் அல்லது மகள் திருமணம் நிச்சயிக்கப் பட்டு தடைப்பட்டு விட்டது என பரிகாரம் என்ன செய்யலாம் எனக் கேட்டனர். அவர்களுக்கு அந்த ஜோதிடர் திருமணம் தடைப்பட்டதற்கான காரணங்களை விளக்கமாக எடுத்துக் கூறி அவர்கள் சென்று வர குறிப்பிட்டுச் சொன்ன கோவில்கள்.
கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம்
திருப்புறம்பியம்
ஆதிவராகப்பெருமாள் திருக்கோவில் கும்பகோணம்
தோஷம் இல்லாத ஜாதகக் காரர்களுக்கு பொதுவாக அவர் சொன்ன வழிபாட்டு முறைகள்:
வெள்ளிக் கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் ராகு கால நேரத்தில் ஒன்பது வாரங்கள் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தால் திருமணம் கை கூடும்.
அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து உள்ள மரத்தின் கீழ் உள்ள விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து பஞ்ச தீப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி 11 முறை சுற்றி வர வேண்டும் எனவும் வீட்டிற்கு அருகிலேயே இவ்வாறான பிள்ளையார் இருந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் திருமணத் தடைகள் விலகி விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் வாழ்க்கை நல்லதாக அமையும் என்றும் தம்பதியர் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.
நாகர் சிலை அமைந்துள்ள இடங்களில் பெண்கள் அடிப் பிரதட்சிணம் செய்யலாம் அவ்வாறு செய்தால் திருமணத் தடைகள் விலகும். ஒரு சில கோவில்களில் நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து முட்டை வைத்து பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடந்தேறும்.
துணைவியருடன் இருக்கும் நவக்கிரஹங்களை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும். அவ்வாறான விக்ரஹங்கள் ஒரு சில கோவில்களில் மட்டுமே உள்ளன கல்யான நவக்கரஹங்களைத் தேடிப்பிடித்து ஒருமுறை வழிபட்டால் நல்லது.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை பாக்கு மாலை சாற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் விலகும்.
கோவில்களில் நாம் அர்ச்சனை செய்வதற்கு கொடுத்த அர்ச்சனைத் தட்டு மாறி பிறருடைய அர்ச்சனைத் தட்டு நம் கைக்கு வருமேயானால் விரைவில் நிச்சய தாம்பூலம் நடைபெற்று திருமணம் நடந்தேறும்.
அனைத்தும் சரி. உன்னுடைய மகன் திருமணத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார் என்பதனை இதுவரை எனக்குச் சொல்ல வில்லையே என்று கேட்டதற்கு அந்த ஜோதிடர் சொன்னபடி நானும் என் மகனும் திருப்பதி மற்றும் காளஹஸ்தி சென்று வந்தோம்.
காளஹஸ்தியில் நடைபெறுகின்ற ஹோமத்தில் என் மகன் அமர்ந்து கலந்து கொண்டான். நான் அவன் பின்னால் அருகில் இருந்தேன்.
அதே போல நானும் என் மகனும் திருப்பதியில் இரவு 2.30 மணிக்கு அங்கப் பிரதட்சிணம் செய்து பின்னர் சாமி தரிசனம் செய்தோம். இந்த இரண்டு இடங்களுக்கும் நானும் என் மகனும் மட்டுமே சென்றோம். முதல் மகனையும் மகளையும் கூட அழைத்துச் செல்லவில்லை என்று சொன்னாள்.
இந்த நேரத்தில் அவளது மகன் அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பினான். அப்போது அவள் உன்னுடைய திருமணம் பற்றி நீயே சொல் என்று அவனிடம் சொன்னாள்.
அவளது மகன் தனக்கு பெண் பார்த்து முடித்து விட்டதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் முதல் நாள் நிச்சயதார்த்தம் அடுத்த நாள் திருமணம் எனவும் தேதியினை தெரிவித்து திருமணப் பத்திரிக்கையினை நல்ல நாள் பார்த்து அச்சடிக்க கொடுக்கப் போவதாகவும் திருமண பத்திரிக்கையினை நேரில் வந்து கொடுப்பேன் கட்டாயம் தன்னுடைய திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.
நான் அவளைக் கடைக் கண்ணால் பார்த்தேன். அப்போது அவன் அழைக்கின்றான். ஆனால் நம்முடைய உள் மன ஏக்கம் மற்றும் ஆதங்கம் அவனுக்குத் தெரியாது என்று சொன்னாள். ஆமாம் திருமண பத்திரிக்கைகள் கொடுத்து அழைப்பு மாத்திரம் நடக்கும் நாம் இருவரும் கலந்து கொள்வதில்லை என்பது ஆரம்ப கால ஒப்பந்தம்.
நான் அவள் இல்லத்திலிருந்து புறப்படத் தயாரான போது அவளது மகன் என்னிடம் திருமண சேதி சொல்லியிருப்பதாலும் நல்ல சேதியினை அறிந்து கொண்டு வெறும் வயிற்றில் செல்லக் கூடாது என்றும் சிற்றுண்டி வாங்கி வருகின்றேன் சாப்பிட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு சிற்றுண்டி வாங்க கிழம்பி விட்டான்.
அவளது மகன் சிற்றுண்டி வாங்கச் சென்றவுடன் உங்களிடம் சொல்ல விட்ட ஒன்று உள்ளது என்று சொன்னாள். என்னவென்று கேட்டேன்.
நீங்கள் வருடாவருடம் திருப்பதி சென்று திரும்பும் சமயம் என்னிடம் லட்டு பிரசாதம் கொடுத்து விட்டு அங்கப் பிரதட்சிணம் செய்து வழி பட்டு வந்ததாகச் சொல்வீர்கள். நான் அதனை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்வேன். இப்போது தான் தெரிந்தது இரவு 2.00 மணிக்கு குளித்து விட்டு ஈரத் துணியுடன் 2.30 முதல் 4.00 மணிக்குள் அங்கப்பிரதட்சிணம் செய்துள்ளீர்கள் என்பது. ஈரத் துணியுடன் இரவுக் குளிரில் பற்கள் வெட வெட என நடுங்கிக் கொண்டு அங்கப்பிரதட்சிணம் செய்யும் போது என் இதயம் முழுவதும் உங்கள் நினைப்புதான். வேறு எந்த நினைப்பும் இல்லை. என் மகனுக்காக நான் கோவிலுக்கு வந்துள்ளேன் என்பது கூட நினைக்கவில்லை.
அவனது மகன் திரும்ப வரும் வரை மீண்டும் அவளுடன் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் வருமுன்னர் அவளிடம் இந்த முறை உன் மகன் இருப்பதால் கண்ணீரின்றி சிரித்த முகத்துடன் தான் என்னை வழியனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு அப்போதே கண்ணீர் விட்டு அழுது விட்டாள்.
சிற்றுண்டி வந்ததும் அவள் கையால் பரிமாற மிகுந்த சந்தோஷத்துடன் சாப்பிட்டு விட்டு விடைபெற்று வந்தேன். வழக்கம் போல் அவள் வாசல் வரையில் வந்து என்னை கையசைத்து உள் மனது அழுதாலும் உதட்டில் புன்னகையுடன் வழியனுப்பி வைத்தாள்.