குடும்பத்தில் ஏற்படும் பணக் கஷ்டமும் அதற்கான நிவர்த்தியும்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அவளைச் சந்திக்க அவளது இல்லம் சென்றேன். ஆனால் இதுவரையில் இருந்த இல்லத்தில் அவள் இல்லை. காரணம் சொந்த வீட்டினை விற்று விட்டு வாடகை வீட்டிற்குச் சென்று விட்டதாக அறிந்தேன். வாடகைக்குச் சென்றுள்ள அந்த வீடும் மிகவும் அருகில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அந்த வீட்டிற்குச் சென்றேன். அவள் மாத்திரம் தனியே இருந்தாள்.
வழக்கம் போல் நலம் விசாரித்தேன். அதன் பின்னர் அவளாகவே வீடு விற்று விட்ட விவரம் சொல்ல ஆரம்பித்தாள்.
தனது மகளுக்கு திருமணம் செய்த சமயம் ஏற்பட்ட கடன் மற்றும் அதன் பின்னர் வரக்கூடிய செலவுகள் மற்றும் கணவரது உடல்நிலை மோசமான போது ஏற்பட்ட வைத்தியச் செலவுகள் மற்றும் வியாபாரத்தில் உண்டான நஷ்டம் ஆகியவற்றை மிகவும் கஷ்டப் பட்டு சமாளித்து வந்தோம். இடையில் பெரிய மகன் சொந்தமாக வீடு கட்டி சென்று விட்டதால் கடன்கள் அடைக்க முடியாத நிலையில் வீட்டினை விற்று விடுவது என தீர்மானித்து அதன்படி வீட்டினை நல்ல விலைக்கு விற்று விட்டோம் எனவும் வீடு விற்று வந்த தொகையில் கடன் அடைத்தது போக மீதத் தொகையினை இரண்டு மகன்களுக்கும் மகளுக்கும் கொடுத்து விட்டதாகவும் சிறிய மகன் திருமணத்திற்கும் நகைகளுக்கும் கொஞ்சம் தொகை தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தாள்.
உனக்கென்று எதுவும் தனியாக ஒதுக்கி வைத்துக் கொள்ளவில்லையா எனக் கேட்டதற்கு இதோ உங்களது ஆலிலைக் கிருஷ்ணன் உருவம் பதித்த டாலர் மற்றும் நம்மைப் பிரிக்க காரணமாக இருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் உங்களது நினைவுகள் என்று சொன்னாள். எனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் உங்களை மணந்திருந்தால் நான் சாகும் வரை ஆசைப் பட்ட வாழ்க்கையுடன் சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று மனதில் எண்ணிக் கொண்டு என்னை நானே ஆறுதல் படுத்திக் கொள்வேன். எனது வாழ்நாள் வரை அது போதும் என்று சொன்னாள்.
அதன் பின்னர் பேச்சுவாக்கில் சின்ன பையன் கல்யாணத்திற்கு என்று ஒதுக்கி வைத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதாகவும் செலவுகள் அதிகமாக இருப்பதால் பணக் கஷ்டத்தில் இருப்பதாகவும் சொன்னாள்.
இதுவரையில் நீயும் உன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்தபடியால் நான் எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் இருக்க வேண்டியதாயிற்று.
தற்போது உன்னுடைய பெரிய மகன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டான். அவன் கூடவே இருந்திருந்தால் தனியாக வீடு கட்டிய பணத்தை வைத்து கடன்கள் அடைத்து இருந்த வீட்டை தக்கவைத்து இருக்கலாம். ஆனால் அவ்வாறான பெருந்தன்மை இல்லாததால் தனக்கென்று ஒரு வீடு மற்றும் தனது தந்தை வழிச் சொத்தில் பங்கு என்று பெற்றுக் கொண்டு அவன் மட்டும் வசதியாக இருக்கின்றான். வீடு கிரஹப் பிரவேச தேதியினைக் கூட உன்னிடம் தெரிவிக்காமல் என்னிடம் முதலில் சொன்னதிலிருந்தே அவர்களது குணாதிசயங்களை அறிந்து கொண்டேன்.
தற்போது பெரிய மகன் ஆதரவில்லாமல் உனது சின்ன மகனுடன் நீ வசித்து வருவதால் நான் உனக்கு சில அறிவுறைகள் கட்டாயம் சொல்ல வேண்டியிருக்கின்றது என்று சொன்னேன்.
அதற்கு அவள் நான் என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை தற்போது வீட்டில் யாரும் இல்லாத சமயமே சொல்லி விட்டால் நான் பின் பற்றுகின்றேன் என்று கூறினாள். இதனிடையில் காப்பியினை நாம் இருவரும் வழக்கம் போல் பாதி பாதி குடித்தோம்.
அதன் பின்னர் அவளது பூஜை அறையில் உள்ள சாமி விக்ரஹங்களை பார்த்தேன். அவற்றில் சில விக்ரஹங்களில் பின்புறம் முழுமையாக இல்லை. அவ்வாறானவற்ளை எடுத்துக் காட்டி இந்த கடவுள் சிலையின் பின்புறம் குழியுடன் இருப்பதால் வெளி உலகிற்கு மிகுந்த வசதி படைத்தவர்கள் போலவும் ஆனால் உண்மையில் கஷ்டப்படுபவர்களாகவும் இருக்க வேண்டியிருக்கும் எனவே இவ்வாறானவற்றை எடுத்து விட்டு முன்புறமும் பின்புறமும் முழு உருவம் கொண்ட பித்தளை அல்லது செம்பு அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விக்ரஹங்களை மட்டும் வைக்கும் படி சொன்னேன்.
அரிசி மாவினால் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு உணவு கொடுத்த பாக்கியம் கிடைக்கும் என்று சொன்னேன்.
குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய்கள் கலந்து பூஜை செய்வதாகக் கூறினாள். அவ்வாறு ஐந்து எண்ணெய்கள் கலந்து தீபம் ஏற்றும் சமயம் குத்து விளக்கின் எந்த பகுதியும் கருமை நிறம் அடையாமல் நன்றாக பளிச்சென்று இருக்க வேண்டும். நாம் கலக்கும் ஐந்து எண்ணெய்கள் பசுவின் நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், புங்க எண்ணெய் ஆகியவைகளில் ஏதேனும் ஐந்து. இவற்றில் இலுப்பை எண்ணெய் மற்றும் புங்க எண்ணெய் உபயோகிப்பதால் (நாட்டு எண்ணெயாக இருந்தால்) விளக்கு கருப்பாகும். எனவே தற்போதைக்கு விளக்குகளை உப்பு புளி சாம்பல் மற்றும் கடைகளில் விற்கும் பாலீஷ் பவுடர் போட்டு நன்றாக சுத்தம் செய்த பின்னர் பசுவின் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றை உபயோகித்து தீபம் ஏற்றுமாறு அறிவுறை சொன்னேன்.
சாமி மாடம் வடக்கு நோக்கி இருந்தால் குத்து விளக்குகளின் இரண்டு திரிகளையும் எதிர் எதிரே ஒன்று கிழக்கு பார்த்து மற்றொன்று மேற்கு பார்த்து அல்லது இரண்டையும் வடக்கு பார்த்து தீபம் ஏற்றலாம் என்றும் சாமி மாடம் கிழக்கு நோக்கியிருந்தால் குத்து விளக்குகளின் இரண்டு திரிகளும் கிழக்கு நோக்கிதான் ஏற்ற வேண்டும் என்றும் சொன்னேன். சாமி மாடம் மேற்கு நோக்கியிருந்தால் திரிகளை கிழக்கு அல்லது மேற்கு நோக்கி ஏற்றலாம் என்று சொன்னேன்.
எக்காரணம் கொண்டும் மாடிப் படிக்கு அடியில் அமைந்துள்ள சுவர்களில் சாமி மாடம் வைக்கக் கூடாது. சாமி படங்களும் வைக்கக் கூடாது என்று சொன்னேன்.
பூஜை அறையில் விளக்கேற்றும் இடத்திற்கு மிக அருகில் அமரராகி விட்ட அவளது கணவர் படம் கிழக்கு திசை நோக்கி வைக்கப் பட்டிருந்தது. அந்த படத்தினை தெற்கு பார்த்து வடக்கு சுவற்றில் வரவேற்பு அறையில் தான் வைக்க வேண்டும் எனவும் பூஜை அறையிலிருந்து எடுத்து விடும்படியும் அறிவுறுத்தினேன்.
தட்சிணாமூர்த்தி மற்றும் நமது முன்னோர்கள் ஆன்மீக குருக்கள் ஆகியோரது படங்களை தெற்கு நோக்கிக்தான் வைக்க வேண்டும் என்று சொன்னதற்கு அவள் சரியென ஒப்புக் கொண்டாள்.
நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி அல்லது வேப்பமரம் இருக்கலாம். அவை நோய்களிலிருந்து நம்மை பாது காக்கும். விஷ ஜந்துக்கள் வராது. தூய்மையான காற்று கிடைக்கும்.
வீட்டின் நிலைகளில் குங்குமம் மற்றும் மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும் விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
வீட்டு புஜை அறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
தற்போது காற்றினால் அசைந்து எப்போதும் மணியோசை எழுப்பிக் கொண்டிருக்கும் வாஸ்து மணியினை வீட்டில் தொங்கவிட்டு மணியோசை கேட்டுக் கொண்டேயிருந்தால் மனதில் கவலைகள் குறைந்து சந்தோஷம் வளரும்.
அதே போல அரிசி சேமிக்கும் பாத்திரம் மற்றும் குடி தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை எக்காரணம் கொண்டும் தலை கீழாகக் கவிழ்த்து வைக்கக் கூடாது எனவும் சுத்தம் செய்யும் நேரத்தில் திறந்த வெளியில் வெயிலில் உலர வைத்து அதன் பின்னர் அதனை எடுத்து காலியாக இருந்தாலும் மூடி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். அரிசி வைக்கும் பாத்திரத்தினுள் ஒரு அன்னபூரணி விக்ரஹம் அல்லது ஏதேனும் ஒரு காசு வைத்தால் அரிசிக்கு பஞ்சம் இருக்காது. எத்தனை விருந்தினர்கள் வந்தாலும் சமாளிக்க முடியும் என்று சொன்னதற்கு சரியென்றாள்.
மளிகைக் கடைகளுக்குச் சென்று மொத்தமாக பலசரக்குகள் வாங்கும் சமயம் உப்பினை முதலாவதாக எடுக்க வேண்டும் அடுத்த படியாக ஏதேனும் ஒரு பருப்பினை எடுக்க வேண்டும் அதன் பின்னர் தான் எல்லா சாமான்களையும் எடுக்க வேண்டும் என்றும் சொன்னேன்.
இந்த நேரத்தில் மதிய சாப்பாடு தயாராகி விட்டது. மனதுக்குப் பிடித்தவர்கள் கையால் உணவு தயார் செய்து பிடித்தவர்கள் பரிமாறும் சமயம் உண்பது என்பது தனி சந்தோஷம். எனக்கு மட்டுமல்ல நம் இருவருக்கும்.
தான் தற்போதைக்கு இரண்டாவது மகனுடன் இருந்து வருவதாகவும் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே செல்வதாகவும் கூறி வருந்தினாள். அதற்கு நான் எனக்குத் தெரிந்த ஒரு பூஜையினை அவளது வீட்டில் செய்யலாமா என்று கேட்டேன். அதற்கு அவள் நீங்களும் நானும் இந்த ஜென்மத்தில் ஒன்று சேர்ந்து எந்த விதமான பூஜைகளும் சேர்ந்து செய்ய சம்மதிக்க மாட்டேன் என்றும் அவ்வாறு பூஜையில் அமர்ந்து கலந்து கொண்டால் மீண்டும் ஒரு முறை தங்களை திருமணம் முடிக்க முடியவில்லை என்னும் கவலை தன்னைத் தொற்றிக் கொள்ளும் எனவும் தெரிவித்தாள்.
அதன் பின்னர் திருமணத் தடைகள் விலக செல்ல வேண்டிய சில பரிகார ஸ்தலங்களுக்கு சென்று வருமாறு அறிவுறைகள் சொன்னேன். அவளும் சரியென ஒப்புக் கொண்டாள்.
சென்ற முறை பஸ்ஸில் ஏறிக் கொண்டு நிறையப் பேச வேண்டும் என்று சொன்னபடி இந்த முறை நீண்ட நேரம் பேசி நம் இருவரது மனதிலும் சந்தோஷம் நிறைந்து இருந்தாலும் சென்று வருகிறேன் என்று சொல்லும் சமயம் வழக்கம் போல் அழுது விட்டாள். என் மனதிலும் அதே நிலை.