இரண்டு இதயங்களுக்குள் ஒரே எண்ணம் ஒரே சிந்தனை
எனது அலுவலக வேலைப்பளு காரணமாக அவளை தொடர்ந்து 6 மாத காலத்திற்கு மேலாக சந்திக்க முடியவில்லை.
நான் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவளைப் பார்ப்தற்காக அவளைத் தேடி அவளது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றேன். ஆனால் அவள் அங்கு இல்லை. அவளது மருமகள் மாத்திரம் இருந்தாள். என்னைக் கண்டவுடன் வரவேற்று நலம் விசாரித்த பின்னர் குடிப்பதற்கு பானம் கொடுத்தாள்.
அவளாகவே முன்வந்து தனது திருமணத்திற்கு உண்டான ஏற்பாடுகளை மறைமுகமாகச் செய்து திருமணம் நடத்தி வைத்தமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டாள்.
நான் என்னவளைப் பற்றி விசாரித்த சமயம் நீங்கள் எப்போது சொந்த ஊரிலிருந்து புறப்பட்டீர்கள் என்று கேட்டாள். நான் புறப்பட்ட நாள் மற்றும் நேரம் சொன்னவுடன் அவள் அதே நாளில் அதே நேரத்தில் தான் அவளது மாமியார் உற்றார் உறவினர் மற்றும் வேண்டியவர்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கின்றது என்று சொல்லி சொந்த ஊர் புறப்பட்டு சென்று இருப்பதாக தெரிவித்தாள்.
நான் அவளைப் பார்க்க வேண்டும் என்று புறப்பட்ட அதே நாளில் அதே நேரத்தில் அவள் என்னைப் பார்க்க புறப்பட்டுச் சென்றுள்ளாள். இதுதான் ஒன்றுபட்ட இதயங்களின் ஒரே மாதிரியான எண்ணம் சிந்தனை.
எப்போது திரும்புவாள் என்று கேட்டதற்கு தனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் வேண்டியவர்கள் அனைவரையும் பார்த்து விட்டுத் தான் திரும்புவேன் என்று கூறி விட்டுச் சென்றதாக சொன்னாள். எப்போது திரும்புவது என்று திட்ட வட்டமாகச் சொல்லவில்லை என்றும் சொன்னாள்.
இந்த நிலையில் நான் அவளை எனது சொந்த ஊரிலேயே சந்தித்து விடலாம் என்னும் எண்ணத்தில் உடனடியாக சொந்த ஊர் திரும்பி அவள் வந்து இறங்கும் அவளது உறவினர்களிள் வீடுகளுக்கு எல்லாம் சென்று பார்த்தேன். அவளைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் அவள் எந்த பஸ்ஸில் எப்போது திரும்புகிறாள் என்பது மட்டும் எனக்குத் தெரிந்து விட்டது. எனவே அவள் புறப்படும் நாளன்று மாலையில் அவளை பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். அவள் என்னைச் சந்திக்க முடியாத ஏக்கத்துடன் மீண்டும் ஊருக்குத் திரும்ப பஸ்ஸில் அமர்ந்து இருந்தாள். என்னைக் கண்டவுடன் அவளுக்கு பேரானந்தம். நான் உங்களைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவலுடன் வந்தேன். நீங்கள் எனது மகள் திருமணத்தின் போது கொடுத்த அந்த வீட்டு விலாசத்தில் விசாரித்தேன். ஆனால் வீடு மாற்றி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். எனவே சந்திக்க முடியவில்லை என்று ஏக்கத்துடன் கூறினாள்.
உன்னைச் சந்திக்க உனது இல்லத்திற்கு சென்ற சமயம் உனது மருமகள் தான் இருந்தாள். உன்னைப் பற்றிக் கேட்ட சமயம் நீ சொந்த ஊர் சென்றிருப்பதாகக் கூறினாள். எனவே நான் உடனே திரும்பி வந்து இங்குள்ள உனது அனைத்து உறவினர்கள் வீட்டிற்கும் சென்று பார்த்தேன். ஆனால் உன்னைச் சந்திக்க முடியவில்லை. இன்றைய தினம் இந்த பஸ்ஸில் புறப்படும் தகவல் மட்டும் எனக்குத் தெரிந்ததால் இன்று உன்னைப் பார்க்க முடிந்தது என்று சொல்லி நான் வாங்கிச் சென்ற பிஸ்கட்டுகள் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை கொடுத்து என்ன விஷயம் என்று கேட்டேன்.
உங்களுடன் நிறைய பேச வேண்டும் எனவே பத்து பதினைந்து நாட்களில் கட்டாயம் என்னைச் சந்திக்க வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு நான் இந்த பஸ்ஸில் இடமிருந்தால் நானும் கூட வருகின்றேன் என்று சொன்னதற்கு அது நமது கடைசிப் பயணமாகத் தான் இருக்க வேண்டும் அதுவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நம் இருவரது உயிர் பிரிய வேண்டும் என்று சொன்னாள்.
அதன் பின்னர் நான் வேறு எதுவும் பேசாமல் கட்டாயம் வீட்டிற்கு வந்து சந்திக்கின்றேன் எனக்கூற கட்டாயம் ஞாயிற்றுக் கிழமை மாலையில் ஐந்து மணக்கு மேல் வர வேண்டும் அப்போது தான் மனம் விட்டுப் பேச முடியும் என்று சொன்னாள். நானும் சரியென ஒப்புக் கொண்டேன்.
அவள் கேட்டுக் கொண்டபடி அடுத்த வாரம் சென்று ஞாயிற்றுக் கிழமை மாலையில் அவள் வீட்டிற்குச் சென்றேன். அவள் மாத்திரம் தனியாக இருந்தாள். மற்றவர்கள் எங்கே எனக் கேட்டதற்கு அனைவரும் சினிமா அல்லது பீச் போன்ற பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று விடுவார்கள் என்பதால் தான் ஞாயிற்றுக் கிழமை வரச் சொன்னேன் என்று கூறினாள்.
வழக்கம் போல சிற்றுண்டி மற்றும் பானம் பகிர்ந்து உட்கொண்டோம். அதன் பின்னர் பேச ஆரம்பித்தோம்.
நீங்கள் திருமணம் பேசி முடித்து வைத்த மூத்த மகனின் மாமனார் அவனுக்கு ஒரு வீடு கட்ட இடம் வாங்கிக் கொடுத்து வீடு கட்டி வருகின்றார்கள். எனவே அவர்கள் தனியே செல்ல முடிவு செய்துள்ளார்கள். எனது இரண்டாவது கடைசி மகனுக்கு திருமணம் செய்ய வேண்டியிருக்கின்றது. அதற்கான செலவுகளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அது தொடர்பான ஆலோசனைகளுக்காகத் தான் உங்களை அவசரமாகப் பார்க்க வந்தேன் என்று கூறினாள்.
அதன் பின்னர் வீடு கட்டும் பணி எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்று கேட்டமைக்கு வீடு கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது அதற்கான செலவுகளை மகனும் செய்து வருவதாகக் கூறினாள்.
இந்நிலையில் பெரிய மகனிடம் பணம் எதிர்பார்க்க முடியாது. கேட்டால் வீடு கட்டி பணம் தீர்ந்து விட்டது என்று சொல்லி கைவிரித்து விட்டால் சிறிய மகனுக்கு எப்படி திருமணம் நடத்துவது என்று தெரியவில்லை என்று சொன்னாள்.
அதற்கு நான் பெரிய மகன் தற்போது வீடு கட்டி குடியேறட்டும். சிறிய மகனுக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடத்துவதற்கு ஓன்றிரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டால் செலவினை சமாளித்து விடலாம். அதற்காக பெரிய மகனிடம் இப்போதே சிறிய மகன் திருமணத்திற்கு பணம் வேண்டும் என்று கேட்டால் நான் வீடு கட்டுவது பிடிக்கவில்லையா என்று கேட்டு மனஸ்தாபம் வரும் எனவே வீடு கட்டி முடியும் வரை எதுவும் பேச வேண்டாம் என்று அவளுக்கு அறிவுரை சொன்னேன்.
இவ்வாறு நாம் இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயம் பெரிய மகனும் பெரிய மருமகளும் வீட்டிற்கு திரும்பினார்கள். என்னைக் கண்டவுடன் நலம் விசாரித்தனர்.
பின்னர் அவளது மருமகள் என்னிடம் தன்னுடைய தந்தை கொடுத்த பணத்தை வைத்துக் கொண்டு புதிதாக வீடு கட்டி வருவதாகவும் ஒரு குறிப்பிட்ட தேதியினைக்கூறி அந்த நாளில் கிரஹப் பிரவேசம் செய்ய உத்தேசித்துள்ளோம் என்றும் பத்திரிக்கை எதுவும் வைத்து அழைக்காமல் சிறிய அளவில் முக்கியமான உறவினர்களை மட்டும் அழைக்க இருப்பதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். நானும் சரியென ஒப்புக் கொண்டேன். அவளது மருமகள் மற்றும் மகன் இருவரும் சேர்ந்து மீண்டும் ஒரு முறை எங்களிடமிருந்து பத்திரிக்கை அல்லது கடிதம் எதுவும் எதிர்பாராமல் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் உள்ளே சென்ற பின்னர் என்னுடையவள் இதோ பாருங்கள் வீடு குடி போகும் நாள் கூட நிச்சியித்து விட்டார்கள். இதுவரை என்னிடத்தில் இந்த விவரம் தெரிவிக்கவில்லை என்று சொன்னது கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவளுக்கு என்னால் சரியான ஆறுதல் சொல்ல முடியவில்லை. எனக்கு தெரிவித்த தகவலைக் கூட அவளுக்குத் தெரிவிக்கவில்லை.
நான் விடைபெறும் சமயம் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து அழைத்துள்ள கிரஹப்பிரவேசத்தன்று கட்டாயம் வருவீர்களா என்று கேட்டாள். நானும் கட்டாயம் கலந்து கொள்வேன் இல்லாவிடில் நான் உன்னைப் பார்க்க மட்டுமே இங்கு வந்து செல்கின்றேன் என்று அவர்களுக்கு நமது உறவினை சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே அவ்வாறான தப்பான எண்ணங்கள் வராமல் தவிர்க்க கட்டாயம் கலந்து கொள்வேன் என்று சொன்னேன்.
மகளுக்கு திருமணமாகி மருமகன் மற்றும் மகனுக்கு திருமணமாகி மருமகள் வந்த பின்னரும் கூட என் காதலி நான் அவளிடம் விடை பெறும் சமயம் மீண்டும் கண்களில் கண்ணீர் ததும்ப எனக்கு பிரியாவிடை கொடுத்தாள். வழக்கம் போல் கால்கள் முன்னே செல்ல நினைவுகள் பின்னே செல்ல நான் புறப்பட்டேன்.
கிரஹப்பிரவேச நாளன்று மீண்டும் ஒரு முறை பரிசுப் பொருட்களுடன் சென்றேன். அங்கு இருந்த பெரிய மகனின் மாமனார் அதாவது எனது நண்பர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது அவளது மருமகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அனைவரும் இருக்கும் சமயம் என்னவளுடன் தனியே பேச முடியவில்லை. ஆனால் அவளாகவே நான் நாளை மாலை சிறிய மகன் இருக்கும் வீட்டிற்கு திரும்பி விடுவேன் என்று சொன்னது கேட்டு என் மனதிற்குள் நாளை மறுநாள் அவள் என்னைச் சந்திக்க விரும்புகிறாள் என்பதனை ஊர்ஜிதம் செய்து கொண்டேன்.
இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து மீண்டும் அவளது வீட்டிற்குச் சென்ற சமயம் வீட்டில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. அவளுக்குத் திருமணம் ஆவதற்கு முன் நாம் இருவரும் எப்படியெல்லாம் பேசி மகிழ்ந்து இருந்தோமோ அதே போல மனம் விட்டுப் பேசி நமது எண்ணங்களை பரிமாறிக் கொண்டோம். விரைவில் கட்டாயம் திரும்ப வாருங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டாள். மீண்டும் கண்ணீருடன் விடை பெற்று சொந்த ஊர் திரும்பினேன்.