தேவதையின் மகனுக்கு காதல் திருமணம்
எனக்குத் திருமணம் ஆன நாள் முதல் இத்தனை காலம் வரை எனது குடும்பத்தாருடன் இருந்தும் நான் கூறும் அறிவுறைகளை அவர்கள் புறக்கணிக்கும் சமயம் எனக்கு வருவது அவளது ஏக்கம் அவளது நினைவு. ஏனெனில் நான் சொல்லிய எந்த பேச்சுக்கும் மறுவார்த்தை பேசாமல் என்னை ஆதரித்தவள் என் காதலி.
காதலிக்கும் போது ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தத்தமது அபிலாஷைகளை விட்டுக்கொடுத்து இருவரும் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டுமென்று முயற்சிப்பார்கள். ஆனால் நமக்கு அவ்வாறு விட்டுக்கொடுத்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்றுமே வந்ததில்லை. காரணம் அவளது கனவு எனது நினைவாக இருக்கும் எனது கனவு அவளது நினைவாக இருக்கும். நாம் ஒருவரை ஒருவர் அந்த அளவிற்கு புரிந்து வைத்துக் கொண்டிருந்தோம்.
நமது பெற்றோர் செய்த சதி. நான் அவளைக் கரம் பிடிக்குமுன்னர் இன்னொருவன் அவளது கரம் பிடித்து விட்டான். மார்பிலே அவனைச் சுமந்து நெஞ்சிலே என்னைச் சுமக்கும் அந்த இரட்டை வாழ்க்கை அவளுக்குப் பிடிக்கவில்லை. திருமணமான சில நாட்களில் என்னைச் சந்தித்த அவள் உங்களை என்னால் மறக்க முடியவில்லை. எனவே நான் வாழ விரும்பவில்லை நான் சாகப்போகிறேன் என்று கூறினாள். அதன் பின்னர் அவள் என்னிடம் கேட்டுக் கொண்டபடி நான் அவளை எதிர்காலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்னும் வாக்குறுதி பெற்ற பின்னர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள்.
அவளது கணவர் மறைவுக்குப் பின்னர் அவள் கேட்டுக் கொண்ட படி நான் அவளது வீட்டிற்கு சென்றேன். அவள் வராண்டாவில் இருக்கையில் தனியே அமர்ந்து இருந்தாள். நான் அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு அவளது வீட்டிற்குள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் அவ்வாறு பார்த்துக் கொண்டு இருந்த சமயம் அவளது வீட்டில் மூத்த மகன் ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தான். அவளிடம் அதுபற்றிக் கேட்ட போது அவளது கணவரது உறவுக்காரப் பெண் படிப்பதற்கு வந்து ஹாஸ்டலில் தங்கியுள்ளதாகவும் விடுமுறை நாட்களில் மாத்திரம் வந்து செல்வதாகவும் தெரிவித்தாள்.
அவர்களது பழக்க வழக்கங்களில் நெருக்கம் உள்ளது. சொல்லப்போனால் நானும் அவளும் ஆரம்ப காலத்தில் காதலித்த சமயம் எப்படி பழகினோமோ அதே போலத்தான் இருக்கலாம் என ஊகித்து அவளிடம் விஷயத்தைக் கூறி சரிதானா எனக் கேட்டேன். ஆனால் அவளோ எனக்கு ஒன்றும் அப்படித் தெரியவில்லை. சாதாரணமாகத் தான் தெரிகின்றது என்றாள்.
நாம் உயிருக்கு உயிராக பழக ஆரம்பிக்குமுன்னர் அதாவது நமது காதலின் ஆரம்ப காலத்தின் போது நமது சந்திப்பு எப்படியிருந்ததோ அவ்வாறு இவர்களது பாவனை மற்றும் பரிபாஷை இருக்கின்றது. எனவே அவர்கள் இருவரும் காதலிக்கின்றார்களா என்பதனை நன்றாக கவனித்து எனக்கு தெரியப்படுத்தினால் நாம் தற்போது ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்நாள் முழுக்க வருந்துவது போல எதிர் காலத்தில் இவர்களது வாழ்க்கை வருத்தமில்லாததாக அமைய என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை நான் செய்ய முயற்சி மேற்கொள்வேன். எனவே எனக்கு சரியான பதிலைக் கொடு எனக் கேட்டுக்கொண்டேன்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். அதே போல வாழ்க்கையில் ஒருமுறையாவது காதலித்திருந்தால் காதலின் புனிதம் பற்றியும் காதலர்களின் பரிபாஷை பற்றியும் அறிந்திருக்க முடியும். நானும் அவளும் உயிருக்கு உயிராக காதலித்து கரம் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள். காரணம் நான் அவளது கரம் பிடிக்குமுன்னர் அவளது வீட்டினரது நிர்ப்பந்தத்தின் பேரில் வேறொருவன் அவளது கரத்தினைப் பிடித்து விட்டான். அதற்கு எனது பெற்றோர்களும் உடந்தையாக இருந்து துணைபோய் விட்டார்கள்.
வாழ்க்கையில் இணைய முடியாத இருவரும் கலாச்சாரக் கைதிகளாக இதயத்தின் உள்ளே ஒரு அந்தரங்க வாழ்க்கையும் வெளியில் வேறொரு போலி வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றோம்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு இந்து கலாச்சாரம். இந்திய நாகரிகம். ஆனால் எனக்கு அவளும் அவளுக்கு நானும் என நமக்குள்ளே எண்ணங்கள் தோன்றி காதலாக கனிந்து அந்தரங்கத்தில் கணவன் மனைவியாக கற்பனை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சமயம் நமது பெற்றோர்களின் சதி இன வெறி சாதி வெறி மொழி வெறி ஆகியவற்றைக் கடந்த அந்தஸ்து வெறி நம்மைப் பிரித்து விட்டது. நமது பெற்றோர்கள் நம்மைப் பிரித்தாலும் நான் அவளை மறக்க முடியவில்லை. அவளால் என்னை மறக்க முடியவில்லை. இந்து மத தர்மத்தின்படி வேறொருவனுக்கு மனைவியாகி விட்ட பின்னர் அவளால் என்னை கணவனாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலை. இருந்தாலும் என்னை மறக்கவும் முடியாமல் அடையவும் முடியாமல் என்னை நினைத்து எனது நினைவுகளுடன் தனது கணவருடன் போலி வாழ்க்கை வாழ்ந்து வந்து தற்போது கணவனை இழந்து நிற்கின்றாள். உடலுறவின் போது கணவனுடன் படுக்கையில் அவள் இருந்தாலும் நெஞ்சத்தில் நான் தான் இருக்கின்றேன் என்பது வெளியில் சொல்ல முடியாத நிதர்சனமான உண்மை. இது ஒரு கலாச்சாரக் கைதியின் வாழ்க்கை. இது போன்ற நிலைமை எனது என்னைக் காதலித்த அவளது குழந்தைகளுக்கு வரக்கூடாது என்பதே எனது எண்ணம்.
வழக்கம் போல் உபசரணைகள் முடிந்து திரும்பினேன்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் அவளது இல்லத்திற்குச் சென்றேன். இதயத்தில் இன்னலும் உதட்டில் புன்முறுவலும் கொண்டு என்னை வரவேற்றாள். வாழ்க்கை முழுவதும் இணைந்திருப்போம் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தமையால் இதயத்தில் எப்போதும் ஒரு வகையான துக்கம் இருந்திடத்தான் செய்யும் இருந்தாலும் என்றைக்காவது பார்க்க முடிகின்றதே என்ற கண நேர மகிழ்ச்சி உதட்டில் புன்முறுவலை காட்டுகின்றது.
உனது மூத்த மகனைக் கவனித்தாயா என்று ஒரே ஒரு முறை மாத்திரம் கேட்டேன். அவளது கண்களில் கண்ணீர் மலையெனப் பெருகி விட்டது. விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விட்டாள். உடனே நான் என்ன நான் ஏதாவது தவறுதலாகக் கேட்டு விட்டேனா ஏன் அழுகின்றாய் எனக் கேட்டேன்.
நீங்கள் ஒன்றும் தவறுதலாகக் கேட்கவில்லை. சரியாகத் தான் கேட்டுள்ளீர்கள். நீங்கள் சொன்னது போல எனது மகன் அந்தப் பெண்ணைக் காதலிக்கின்றான். அவர்கள் அந்தஸ்தில் மிக உச்சியில் உள்ளவர்கள் அவர்களது செல்வத்திற்கும் எங்களது செல்வத்திற்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. அவர்களிடம் சென்று பெண் கேட்கும் அளவிற்கு எனக்கு அந்தஸ்து இல்லை. தெரிந்தோ தெரியாமலோ நீங்களும் நானும் காதலித்தது போல எனது மகன் அவளைக் காதலிக்கின்றான் என்ற விவரம் நீங்கள் சொன்ன பிறகு தான் நான் கவனித்து தெரிந்து கொண்டேன்.
அவனிடம் ஜாடையாக உனக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்து விட்டது எனவே உனக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கட்டுமா எனக் கேட்டேன். உடனே அவன் எனக்கு திருமணம் என்று ஒன்று செய்ய நினைத்தால் அது அந்தப் பெண்ணுடன் தான் இருக்க வேண்டும் வேறு எந்தப் பெண்ணுடனும் நிச்சயமாக திருமணம் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறி விட்டான். எனவே எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அது மட்டுமல்ல. என் மகனது காதலை நீங்கள் தடுக்க நினைப்பதாகவும் அதற்கு நான் துணை நிற்பதாகவும் நினைத்து நம் இருவர் மீதும் கோபத்தில் இருக்கின்றான் என்று சொன்னாள்.
உடனே நான் இதற்காகவா அழுகின்றாய். அவளது பெற்றோர்களின் விலாசத்தைக் கொடு. மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கின்றேன் எனக்கூற அவள் அவளது மகன் காதலித்து வரும் பெண்ணின் பெற்றோர் பற்றிய விவரங்கள் தெரிவித்தாள். உடனே நான் மிகக் குறுகிய காலத்தில் நல்ல செய்தி சொல்கின்றேன் எனக்கூறி விடை பெற்றேன்.
அதன்பின்னர் சொந்த ஊர் சென்று எனது நண்பர்கள் மூலமாக அந்த பெண்ணின் தந்தையை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தேன். அதற்கு அந்த பெண்ணின் தந்தை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத நிலையில் நான் அவர்களின் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துச் கூறிய பின்னர் சம்மதம் தெரிவித்தார். அது மட்டுமல்லாது இரு குடும்பத்தாருக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்தி திருமணத்தை முன்னிருந்து நடத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அந்த விவரத்தினை நான் அவளிடம் நேரில் சென்று தெரிவித்து அவள் மிகவும் சந்தோஷத்தில் பெண்ணின் தந்தை சொன்னது போலவே இந்த திருமணத்தினை தாங்கள் தான் முன்னிருந்து நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
உடனே நான் உனது மகன் ஆசைப் படும் பெண்ணுடன் சேர்த்து வைக்க வேண்டியது என் கடமை. நான் முன்னிருந்து நடத்தி வைத்தால் நீ சொன்னது போல எனக்கும் உன்னருகில் அமர்ந்து உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கும். எனவே திருமணத்திற்கு நான் வராமல் சுபகாரியம் நடத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டு திரும்பினேன்.
நான் சொல்லி வந்த சிறிது காலத்தில் திருமணம் நிச்சயமாகி திருமண பத்திரிக்கை கொடுத்தார்கள். திருமணம் இனிதே நடந்தேறிய பின்னர் நான் அவள் வீட்டிற்கு சென்றேன்.
அப்போது அவளது மகன் வீட்டில் இல்லை. அவளுடன் மருமகள் மட்டும் தான் இருந்தாள். என்னைக் கண்டவுடன் சலனம் எதுவும் இல்லாமல் என்னை வரவேற்றாள்.
உடனே அந்தப் பெண் என்னைப் பற்றி கேட்டதற்கு வேறு பதில் எதுவும் சொல்லாமல் உனக்கும் என் மகனுக்கும் உள்ள காதலை முதன் முதலில் கண்டறிந்து என்னிடம் சொல்லி அதனை என் மகனிடம் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் உனது பெற்றோரை நேரில் சந்தித்து உங்களது காதலை எடுத்துச் சொல்லி உங்கள் காதல் திருமணத்திற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் திருமண ஏற்பாடுகளை திருமண பத்திரிக்கை வழங்கும் வரை இவர் தான் மறைமுகமாக உதவியவர் என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
உடனே அவளது மருமகள் என் காலில் விழுந்து ஆசி பெற்றதுடன் அவர்களை சேர்த்து வைத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டாள். அதோடு மட்டுமல்லாமல் எங்களின் காதலுக்கு தடையாக இருப்பவர் என்று என் கணவர் தங்களை நினைத்து தவறுதலாக புரிந்து வைத்துள்ளார் என்றும் அவரை சமாதானப் படுத்துவதாகவும் தெரிவித்தாள். உடனே இதுபற்றி அவனிடம் எதுவும் பேச வேண்டாம் என்றும் உனது தந்தையும் இவரும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதனை மட்டும் தெரிந்து கொள் என்றும் சொல்லி அதனால் தான் உனக்கு அவனை திருமணம் செய்து முடிக்க என்னால் சுலபமாக முடிந்தது இல்லையெனில் அந்தஸ்து காரணமாக நீ அவனை இழக்க வேண்டியிருந்திருக்கும் என்பதனையும் அறிந்து கொள் என்றும் அறிவுரைகள் வழங்கினாள்.
உன்னுடைய காதல் திருமணத்தை இவர் நடத்தி வைத்த பின்னர் தான் எனக்கு நிம்மதியான தூக்கம் வருகின்றது என்பதனை தெரிந்து கொள் என்று மருமகளிடம் சொன்னவுடன் மருமகள் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி என்று சொன்னாள்.
ஏற்கனவே அவள் சொன்னவாறு அவள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியத்தையும் நான் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றேன் என்பதனை நினைக்கும் போது அவள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை எனக்கு மேலும் உற்சாகத்தைத் தருகின்றது
இதன் மூலம் எனக்கு அவளது வீட்டில் நடக்கும் இரண்டாவது சுப காரியத்திற்கு முன்னேற்பாடுகள் செய்து முடித்து வைக்க முடிந்தது என்பதனை நினைக்கும் போது எனக்கு மீண்டும் மனத்திருப்தி.