தேவதையின் கணவர் மறைவு
மலரைத் தேடி வண்டுகள் செல்ல முடியும். ஆனால் வண்டுகளைத் தேடி மலர்கள் செல்ல முடியாது. அதே போல நான் அவளைத் தேடிச் செல்ல முடியும் ஆனால் அவள் என்னைத் தேடி வர முடியவில்லை. சூரிய காந்தி மலர் சூரியன் கிழக்கில் உதிக்கும் போது கிழக்கு நோக்கிச் சாய்ந்தும் உச்சி வேளையில் நிமிர்ந்தும் அந்தி சாயும் வேளையில் மேற்கு நோக்கிச் சாய்ந்தும் இருந்து சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் துவண்டும் விடும். ஆனால் மறுநாள் காலையில் மீண்டும் கிழக்கு நோக்கி சாய்ந்து சூரியன் வரவினை எதிர்நோக்கி காத்திருக்கும். இது இயற்கை.
நான் அவளது இல்லத்திற்குச் சென்று அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் சமயம் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள். வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டாள். அதேபோல நான் அவளது இல்லத்தில் நுழையும் பொழுது அவளது மனம் மகிழந்து உதட்டில் புன்னகை தவழ என்னை வரவேற்பாள். ஆனால் நான் அவளிடமிருந்து விடைபெறும் சமயம் மீண்டும் எப்போது வருவீர்கள் எனக்கேட்டு நான் மீண்டும் அவளது வீட்டிற்கு வரும் நாள் அறிந்து அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமா என எண்ணி அவளது மலர்முகம் வாடி மனதில் அழுகையுடன் கண்களில் கண்ணீருடன் முகத்தில் சோகத்துடன் என்னை வழியனுப்பி வைப்பாள்.
அவள் வீட்டில் நடக்கும் நல்ல செயல்கள் அனைத்திலும் அவள் கணவனுடைய ஆலோசனைகளை விட பல மடங்கு எனது ஆலோசனைகளும் அறிவுறைகளும் இருக்கும். எந்த செயலைச் செய்தாலும் என்னைக் கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டாள். அதேபோல நானும் எனது வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தையும் அவளிடம் கூறி எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
எனது வீட்டில் எனது மகன்களுக்காக ஒரு புதிய வணிகம் ஒன்றினை ஆரம்பித்து கொடுத்தேன். அந்த விவரத்தை வணிகம் ஆரம்பித்து கொடுத்த நான்கைந்து வாரங்களுக்குள் அவளிடம் தெரிவிக்க அவளது இல்லம் நோக்கி சென்றேன்.
என்வருகைக்காக எப்படி அவள் பால்கனியில் காத்திருப்பாளோ அதே போல அவள் காத்திருந்தாள். அவள் என்னைக் கண்டதும் கையசைத்து வரவேற்றாள். முகத்தில் சந்தோஷமில்லை.
மேலே சென்று அவளைப் பார்த்த போது அதிர்ந்து போனேன். காரணம் அவளது நெற்றியில் மங்கலத் திலகம் இல்லை. கழுத்தில் மங்கல நாண் இல்லை. ஒரே ஒரு தங்கத்தால் ஆன செயின் ஆலிலைக் கண்ணன் டாலருடன் இருந்தது. காரணம் நான் எனது மகன்களுக்கு நல்ல நாள் பார்த்து எந்த நாளில் வணிக நிறுவனம் ஆரம்பித்துக் கொடுத்தேனோ அதே நாளில் எமன் அவளது கணவன் உயிரை தனது எமலோகத்திற்கு கொண்டு சென்று விட்டான். எனவே நான் அன்புப் பரிசாக வழங்கிய ஆலிலைக் கண்ணன் டாலரை எனது பெற்றோர்கள் கொடுத்த செயினில் போட்டு இருந்தாள். இதுவரையில் நல்லவைகளை மாத்திரமே பரிமாறிக்கொண்ட இருவரும் சோகத்தில் ஆழ்ந்தோம். நான் எனது வீட்டில் நடந்த வணிக நிறுவன துவக்கம் பற்றி தெரிவிக்க மனமில்லை. ஆனால் அவளோ என்னிடம் தேம்பித் தேம்பி அழுதவாறே அவளது கணவனின் மரணம் பற்றி தெரிவித்தாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
எனக்கு ராசியில்லை. நான் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை. ஆனாலும் கடவுள் என்னை சுமங்கலியாக வாழவைக்க விரும்பவில்லை. காரணம் விரும்பியோ விரும்பாமலோ எனது தாயாரின் கட்டாயத்தின் பேரில் உங்களை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் மனதில் உங்களைச் சுமந்து உடலில் அவரைச் சுமப்பதைப் பொறுக்காத கடவுள் என்னை விதவையாக்கி விட்டார். இருந்தாலும் எனக்கு ஒரு வகையில் சந்தோஷம்.
எப்படியெனில் என் கணவனது இறப்புக்குப் பின்னனர் நான் உங்களுடைய நினைவுகளுடன் மட்டும் தான் வாழ்வேன். இந்த ஜென்மத்தில் நம்மைப் பிரித்த அந்த கடவுள் அடுத்த ஜென்மத்திலாவது தாம் செய்த தவறை உணர்ந்து நம்மைச் சேர்த்து வைப்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
அப்படியெனில் எனது சந்தோஷத்திற்கு காரணம். இதே ஜென்மத்தில் நாம் இருவரும் மணந்திருந்தால் நான் வாங்கி வந்த வரம் அதாவது எனது தாலி பாக்கியம் உங்களை இந்த நேரத்தில் என்னிடமிருந்து பிரித்திருக்கும். ஆனால் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாத ஒரே காரணத்தால் உங்களை உயிருடன் பார்க்க முடிகின்றது. அந்த ஒரு ஆறுதலாவது என்னிடம் இருக்கின்றது. இதனால் தானோ என்னவோ உங்கள் தந்தை ஜாதகப் பொருத்தம் சரியில்லை என்று நமது திருமணத்தை தடுத்து விட்டாரோ என்று தோன்றுகின்றது.
அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால் அந்தப் பிறவியில் நான் உங்களையே மணக்க வேண்டும். நீங்கள் என்னையே மணக்க வேண்டும். நாம் இருவரும் நீண்ட காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். நம் இருவரையும் காலன் ஒன்றாகவே அழைத்துச் செல்ல வேண்டும். உங்களைப் பிரிந்து நானும் என்னைப்பிரிந்து நீங்களும் தனியே வாழ வேண்டிய அவல நிலை அடுத்த ஜென்மத்தில் நம் இருவருக்கும் வரவே கூடாது என்று கூறியபோது இருவர் கண்களிலும் கண்ணீர் இருவர் மனதிலும் சோகம். இருவரது நிலையும் தடுமாறிய நிலை.
காதலித்த என்னை மணக்க முடியாமல் என்னைப் பிரிந்து வேறொருவனை மணந்து அவர் இறந்ததைப் பற்றி கவலைப்படாமல் என்னை மணந்திருந்தால் நான் இறந்திருப்பேன் என்று எண்ணி கற்பனை செய்து கவலைப்படும் அவளது ஆழமான காதலுக்கு நிகர் இந்த உலகத்தில் எதுவும் இல்லை.
நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே எனது வீட்டில் நீங்கள் முன்பு போல சிற்றுண்டி சாப்பிடலாமா என்று கேட்டாள். நான் சிற்றுண்டி வேண்டாம் ஏதேனம் பானம் மாத்திரம் போதும் என்றேன். எப்படி சூடாகவா குளிர்சியாகவா என்று கேட்டாள். அதற்கு நான் உன் விருப்பம் என்று சொன்னவுடன் தேநீர் கொண்டு வந்தாள். வழக்கம் போல் தேநீர் பருகினோம்.
அப்போது நான் எனது கணவர் உயிருடன் இருக்கும் போதே பாதி குடித்தவள் இப்போது அந்த முறையினை மாற்றமாட்டேன். இன்னும் சொல்லப் போனால் ஒரே இலையில் கூட உணவருந்த ஆவலாக இருக்கின்றது என்றாள். அதற்கு உனக்கு வேண்டுமானால் உன்னுடைய சோகத்தின் சமயம் நான் ஊட்டி விடுகின்றேன் என்று சொன்னேன். அது போதும் என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.
எனது கணவரது மறைவு தொடர்பான சடங்குகளை 48 நாட்களுக்குள் முடித்து விடலாம் என்று எல்லோரும் பிரியப் படுகின்றார்கள். எனவே நான் அந்த சடங்கிற்கு உங்களை வாருங்கள் என்று அழைக்கவில்லை.
அந்த சடங்கு முடிந்தவுடன் எனது வீட்டிற்கு கட்டாயம் வர வேண்டும். மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதன் படி நான் சடங்கு முடிந்தவுடன் கட்டாயம் வருவதாக தெரிவித்து நான் புறப்பட்ட சமயம் மீண்டும் ஒரு முறை பால்கனிக்கு வந்து வழியனுப்பி வைத்தாள்.
அவள் சொன்ன வார்த்தைகள் என் இரு செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தன.
நான் உங்களை மணக்கவில்லை. உங்களை மணந்திருந்தால்
இந்த ஜென்மத்தில் வாங்கி வந்த எனது தாலி பாக்கியத்தின்படி
காலன் உங்களை என்னிடமிருந்து பிரித்திருப்பார்.
உங்களைப் பார்க்க முடியாமல் போயிருக்கும்.
எனவே நாம் காதலில் தோற்றதும் உங்களைக் காலம் முழுவதும் காணத்தான் என்று நினைத்து எனது இதயம்
ஒரு வகையில் சந்தோஷப் படுகின்றது.