குழந்தை பாக்கியம்
நான் அவளுடன் பேசிப்பழக ஆரம்பித்த பின்னர் எனக்குள் ஒரு மாற்றம். எனக்குள் ஒரு பயம். எனக்குள் ஒரு தன்னம்பிக்கை. எனக்குள் ஒரு புத்துணர்ச்சி. எனக்குள் ஒரு சந்தோஷம்.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதற்காக காலதாமதமாக எழுந்து வந்த நான் அவளைச் சந்தித்த பின்னர் விடுமுறைக்கு விடுமுறை விட்டு விட்டு வழக்கம் போல சீக்கிரம் எழுந்து அவளைக் காண முயல்கின்றேன்.
அவளைச் சந்திப்பதற்கு முன்னர் எனக்கு இருந்த நண்பர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். நான் எனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்த நேரம் மிக மிக அதிகம். எனது உறவினர்களைக் காண அவர்களுடைய வீட்டிற்குச் சென்ற எண்ணிக்கை மிக மிக அதிகம்.
ஆனால் அவளைச் சந்தித்த பிறகு எனது நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. நண்பர்களுடன் அரட்டை அடித்து அவர்களுடன் உல்லாசமாக பேசிப் பழகிய நேரம் குறைந்து கொண்டே வருகின்றது. நான் எனது நண்பர்களுடன் ஊர் சுற்றித்திரியும் காலம் குறைந்து கொண்டே வருகின்றது. அதே போல எனது உறவினர்களைக் காண அவர்களுடைய வீட்டிற்குச் சென்று வரும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்னறது.
சொந்த ஊரில் நான் எந்த எந்த சந்து பொந்துகளிலெல்லாம் சுற்றித்திரிந்து வந்தேனோ அந்த சந்து தெருக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து கொண்டே வருகின்றது.
காரணம்.
நான் அவளைப் பார்க்க வேண்டும். நான் அவளுடன் பேச வேண்டும். நான் அவளுடன் பழக வேண்டும். நான் அவள் அருகிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் பெருகிக்கொண்டே போகின்றன. இதன் பெயர் நான் அவள் மீது வைத்துள்ள அன்பா அல்லது நான் அவள் மீது கொண்டுள்ள ஆசையா அல்லது நான் அவளுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்ற இதயத் துடிப்பா? எத்தனை நண்பர்களுடன் நான் அதிக நேரம் செலவழித்து உல்லாசமாக ஊர் சுற்றித் திரிந்தேனோ அதனை விட குறைந்த நேரம் அவளுடன் மாத்திரம் செலவழித்து அவளுடன் அருகில் இருந்து பேசினாலும் மிக மிக உல்லாசப்படுகின்றேன். எனது நண்பர்களுடன் நான் ஊர்சுற்றி அரட்டை அடித்து எவ்வளவு சந்தோஷமாக இதுருந்தேனோ அதனை விட அதிக சந்தோஷமாக அவளுடன் மாத்திரம் இருக்கின்றேன். எத்தனை உறவினர்கள் வீட்டிற்குச் சென்று நான் உறவின் பெருமையை உணர்ந்தேனோ அத்தனை உறவுகளின் மீது நான் எவ்வளவு அன்பினை செலுத்தினேனோ அதனைவிட அதிகமான அன்பினை அவளிடம் மாத்திரம் செலுத்துகின்றேன்.
நான் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் பேசவே தேவையில்லை. நான் அவளுடன் பேசிக் கொண்டே இருந்தால் எனக்கு உணவே தேவையில்லை. பசியும் பறந்து போகும்.
நானும் அவளும் பேசிக் கொண்டே இருக்கின்றோம். எதைப் பற்றி? என்னைப் பற்றியா? அவளைப் பற்றியா? அல்லது நம்மைப் பற்றியா? எதுவும் தெரியாமல் பேசிக் கொண்டே இருக்கின்றோம். காலையில் என்ன பேசினோம் மாலையில் என்ன பேசுவோம் எதுவும் திட்டமிடாதவை.
இவ்வளவு மாற்றங்கள் எனக்கு மட்டும் தானா? அவளிடம் எதுவும் இல்லையா?
எனது பெற்றோர் சொல்லும் வேலைகளுக்காக நான் வெளியில் செல்லும் சமயம் அவள் கண்கள் ஜாடையுடன் ஏங்கும். நானும் சுருக்கமாக இந்த காரணங்களுக்காக இந்த இடத்திற்கு செல்கின்றேன் இவ்வளவு நேரத்தில் திரும்பி விடுவேன் என்று சொல்லியவாறு இதயம் மற்றும் கண்கள் பின்னோக்கி செல்லும் அதே நேரம் கால்கள் முன்னோக்கி செல்லும்.
எதிர் பார்த்த நேரத்தைவிட சற்று தாமதமாக வர நேரிட்டது. என் வருகைக்காக காத்திருந்த அவள் என்னருகே வந்தாள்.
இன்று ஏதாவது ஒரு இடத்திற்கு நாம் சென்று வர வேண்டும். எங்கு செல்லலாம் என்று கேட்க நான் பொழுது போக்கு இடங்களுக்குச் செல்லலாம் என சில இடங்களைக் கூற அவள் அங்கெல்லாம் வேண்டாம். ஏதேனும் ஒரு சிறிய கோயிலுக்குச் செல்வோம் என்றாள். நான் ஏன் பெரிய கோயிலுக்கே செல்வோமே என்று கேட்க, வேண்டாம் பெரிய பெரிய கோயில்களுக்குச் சென்றால் நாம் அமர்ந்து பேச முடியவில்லை. நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்கள் என எல்லோரும் நாம் சேர்ந்திருப்பதை பார்த்துச் செல்வது எனக்கு ஏதோ போல இருக்கின்றது. எனவே நிறையப்பேர் வராத சிறிய கோயிலுக்குச் சென்று உடனே திரும்பிவிடலாம் என்றாள். அதன்படி நானும் அவளும் கோயிலுக்குச் செல்லலாம் என தீர்மானித்து புறப்பட்டோம்.
ஒரு தெருக் கோயில். அங்கே ஒரே ஒரு விக்ரஹம் மட்டும் தான் இருக்கும். ஒருவர் மீது அம்மன் இறங்கி குறி சொல்லிக் கொண்டிருந்த எனக்கு நமக்கும் குறி கேட்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவளிடம் சொன்னேன். அவள் குறி கேட்க மறுத்து விட்டாள். காரணம் குறி சொல்லும் போது நாம் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம் என்றாள். எனக்கும் அதே பயம் தான். எனவே குறி கேட்பதில்லை வெறும் சாமி மாத்திரம் கும்பிடலாம் என்று நின்றோம்.
அப்போது ஒரு பெண்மணி குறி சொல்பவரிம் ஒரு தேங்காயை கொடுத்தார். அவர் அந்த தேங்காயை வாங்கி என்னிடம் கொடுத்து எனக்குப் பின்னால் இருந்த ஒரு முதியவரிடம் கொடுக்குமாறு கூறி அவரிடம் அந்த தேங்காயை சிதறுகாய் உடைக்குமாறு கூறினார். அவரும் அந்த தேங்காயை தரையில் உடைத்து விட்டார்.
கோயிலுக்குச் சென்று சிதறுகாய் உடைத்து பூஜை செய்தால் நமது கஷ்டங்கள் அனைத்தும் தேங்காயின் உள்ளே உள்ள நீர் எப்படி சிதறி விடுகின்றதோ அதே போல சிதறி நீங்கி விடும் என்பது ஐதீகம்
அந்த குறி சொல்லும் பெண் குறி கேட்க வந்த பெண்ணிடம் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு நீ இந்த முறை 6வது வாரமாக வந்திருக்கின்றாய் சரி தானே எனக் கேட்க அந்த பெண்ணும் ஆம் என்றாள்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் எந்த கோயிலிலும் சிதறுகாய் உடைக்கும் பூஜை செய்யக்கூடாது. தேங்காய் சிதறுகாய் உடைத்தால் கருவில் உருவாகும் கரு கலைந்து விடும். இனிமேல் அடுத்த வாரம் முதல் வெறும் பழங்களுடன் மட்டும் கோயிலுக்கு வந்தாயானால் உன் கருப்பையில் கரு உருவாகி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறியதை கேட்ட எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
நானும் அவளும் நன்றாக சாமி கும்பிட்டு விட்டு கோயிலை விட்டு வரும் சமயம் அவள் என்னிடம் நாம் திருமணம் செய்து கொண்ட பின்னர் குறைந்தது ஒரு வருட காலம் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை. குழந்தை பாக்கியத்தை உடனடியாக பெற வேண்டும் என்று கூறினாள்.
நான் சிரிக்காமல் குழந்தை பெறுவதற்காக நாம் இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் நீ கஷ்டப்பட வேண்டும் என்கின்றாயே என்று கூற நான் பணக் கஷ்டம் அல்லது மனக்கஷ்டம் என்று தான் சொன்னேன் என்று கூறி என்னைப் பார்த்து வெட்கத்துடன் சொன்னது:
உன்னோடு நான் சேர்ந்து அழுதாலே சொர்க்கம்
நீ இல்லாத சொர்க்கத்தை நினைத்தாலே நரகம்
நீ இல்லாத சொர்க்கத்தை நினைத்தாலே நரகம்