உறவினர் நல்லாசி
அருகில் இருந்தால் பார்த்துக் கொண்டேயிருப்போம். பக்கத்தில் இருந்தால் பேசிக் கொண்டேயிருப்போம்.
இரவு தூங்கப்போகும் முன்னர் படுக்கையில் அன்று நடந்த சம்பவங்களை மனதில் நினைத்து உறங்கி விடுவோம்.
ஒரு நாள் அதிகாலைப் பொழுதில் வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே எழுந்துவிட்டு வெளியே வந்த சமயம் அவள் எனக்கு முன்னதாகவே எனக்காகக் காத்திருந்தாள். ஒரே ஆச்சர்யம். எனக்கு மட்டும் அல்ல. இருவருக்கும்.
நான் பேசுமுன்னர் அவள் பேச ஆரம்பித்தாள்.
உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லையா என்றாள்.
இல்லை. அனைவரும் நன்றாக இருக்கின்றோம் என்றவுடன் நான் ஒரு கெட்ட கனவு கண்டேன் அதில் உங்கள் உறவினர்களில் ஒருவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவது போலவும் நான் மிக மிக அருகில் இருந்து பணிவிடை செய்வது போலவும் கனவு கண்டேன். எனவே நான் பாதி தூக்கத்தில் எழுந்து வந்து உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றாள்.
எனக்குள் ஒரு சந்தேகம். நான் நன்றாக இருக்கின்றேன். நான் எழுந்து வரும் சமயம் எனது வீட்டில் உள்ள மற்றவர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. எனவே சற்று நேரம் கழித்து சொல்கின்றேன் என்று கூறி விட்டேன்.
சற்று நேரம் கழித்து எனது வீட்டில் உள்ள அனைவரும் தூக்கத்திலிருந்து விழித்த பின்னர் அனைவரும் உடல் நலத்துடன் இருக்கின்றார்கள் என்பதனை அறிந்து மிக்க சந்தோஷத்துடன் அவளிடம் வந்து தெரிவித்தேன். அவள் பெருமூச்சு விட்டது என் குடும்பத்தார் மீது அவள் வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.
பிற்பகலில் நான் எனது மிக நெருங்கிய உறவினர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது தான் தெரிந்தது அவளது கனவு இரகசியம். எனது மிக நெருங்கிய உறவினர் உடல் நலமில்லாமல் இருந்தது தெரிய வந்தது. திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் ஒரே நாளில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனது உறவினரிடம் அவள் காலையில் கூறிய விவரங்களைக் கூறினேன். எனது உறவினர் எனக்கும் அவளுக்கும் இருக்கும் நெருக்கம்பற்றி ஏற்கனவே தெரியும் என்றும் அவளைப் பார்க்க வேண்டும் என்றும் உடனடியாக அழைத்து வருமாறும் கூறினார். நானும் சரியென்று சொல்லி வந்து விட்டேன்.
மறு நாள் காலை அவளிடம் விவரத்தைக் கூறினேன். அவளும் உடல் நலமில்லாமல் இருக்கும் எனது உறவினரைக் காண வர சம்மதம் தெரிவித்தாள்.
நானும் அவளும் இருவரது வீட்டிற்கும் தெரியாமல் எனது உறவினரைக் காணச் சென்றோம். அவள் எனது உறவினரிடம் மிகவும் அன்பாகப் பேசி ஆறுதல் கூறினாள். எங்கெங்கு வலிக்கின்றது எனக்கேட்டு அந்த இடங்களில் தடவிக் கொடுத்தாள். தைலமும் தேய்த்து விட்டாள்.
எனது உறவினர் என்னிடம் நான் உயிரோடு இருக்கும் சமயம் உன்னுடைய வருங்கால மனைவியைக் கொண்டு வந்து காண்பித்து என்னைப் பரவசத்தில் ஆழ்த்தி விட்டாய் என்று கூறியவாறு அவளை அருகில் மிக அருகில் அழைத்து அமர வைத்து உனது பெயர் என்ன என்று கேட்டார்.
நான் எனது பெயரினை உங்களிடம் கூற மாட்டேன் என்றாள். ஏன் என எனது உறவினர் கேட்டதற்கு உங்களிடம் எனது பெயரினைக் கூறினால் என்னை விட வயதில் மூத்தவரான உங்கள் முன் உங்கள் பெயர் சொல்வது சரியாக இருக்காது. காரணம் இருவரது பெயரும் ஒன்று தான் என்றாள்.
எனது உறவினருக்கு சந்தோஷம் பொங்கி அவளைக் கட்டித் தழுவி இவ்வளவு பணிவானவளாக இருக்கின்றாயே என முத்தமிட ஒரு பக்கம் வலிகள் அதிகமாகி படும் வேதனையை அவளால் அறிந்து கொள்ள முடிந்தது.
எனது உறவினர் அவளிடம் நான் உன்னுடைய மடியில் உயிர் விட வேண்டும் என்று ஆசையாக இருக்கின்றது. நான் உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகின்றேன். நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். இருந்தாலும் ஒரு கவலை நீங்கள் வாழ்வதை நான் பார்த்து மகிழ முடியாது. ஏனெனில் எனது உடல் நிலை பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் இரண்டொரு மணி நேரத்தில் என்னுடைய வாழ்க்கை முடிந்து விடும் என்றவாறே அவளது தோள்களில் சாய்ந்தார்.
அருகில் இருந்த மற்றவர்கள் உடனடியாக எனது உறவினரை படுக்கையில் படுக்க வைத்து அவசர அவசரமாக டாக்டரை வரவழைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்க நானும் அவளும் இருவர் வீட்டிற்கும் தெரியாமல் சென்றிருந்ததால் உடன் புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
டாக்டர் வந்து பார்த்து தீவிர சிகிச்சை அளித்து பயனில்லாமல் சற்று நேரத்தில் உயிர் பிரிந்து விட்டது என்ற செய்தி நம் இருவருக்கும் மிகுந்த கவலையை கொடுத்தது.
இரவு நேரம் எனது உறவினரின் வீட்டிற்கு நான் என் பெற்றோருடன் சென்ற சமயம் அங்கு திரண்டிருந்த அனைவரும் என்னைப் பற்றியும் அவளைப் பற்றியும் தான் பேசினார்கள். கடைசியாக அவள் தோளில் சாய்ந்து பின்னர் யாரையும் பார்க்காமல் யாரிடமும் பேசாமல் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
இருந்தாலும் நம்மையும் வாழ்த்திய ஒரு ஜீவன் ஆன்மாவாகி விட்டது என்பதனை எண்ணிப் பார்க்கும் போது எனக்கும் அவளுக்கும் கவலையுடன் கூடிய ஆறுதலாக இருந்தது.