எங்களது முதல் சோகம்
பேசிக்கொண்டிருந்த சமயம் திடீரென அவளிடம் சற்று நேரம் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறியவுடன் நான் வேண்டுமானால் வீட்டுக்கு உள்ளே போய் விடவா எனக் கேட்டாள்.
உடனே அவளது தாயார் நீயும் கூட இருக்க வேண்டும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இடையில் எதுவும் பேசக் கூடாது. நான் சொல்வது இருவருக்கும் தான் என்று கூறியவாறே பேச்சினை துவங்க நானும் அவளும் நம் இருவர் திருமணத்தைப் பற்றித்தான் பேசுவார் என்று எதிர்பார்த்தோம்.
எனக்கும் என் கணவருக்கும் திருமணம் நடந்த சமயம் அவர் மிகப் பெரிய வணிகராக இருந்தார். அந்தக் காலத்திலேயே தமிழ் மற்றும் ஆங்கில டைப்ரைட்டர்களுடன் பணியாட்களை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
திருமணம் நடந்த வருடத்திலேயே நான் கர்ப்பமாகி விட முதலாவது குழந்தை ஆண்பிள்ளை வேண்டுமென்று மிக்க ஆவலுடன் இருந்தார். அதே போல அழகான ஆண் குழந்தை பிறந்து விட்டது. அப்போது அவருக்கு தனது வியாபாரத்தை கவனித்துக் கொள்ளவும் மென் மேலும் பெருக்கவும் ஒரு ஆண் வாரிசு உருவாகிவிட்டது என்ற சந்தோஷம்.
அதற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் மகளையும் அதிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது மகளையும் ஈன்றெடுத்தேன். இவள் மூன்றாவது கடைக்குட்டி. எங்கள் செல்லம்.
வருடங்கள் கடந்தன. இரண்டு மகள்களும் வளர்ந்து விட்ட காரணத்தால் திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். முதலாவது மகள் திருமணத்தை வெகு விமரிசையாக தடபுடலாக செய்த காரணத்தால் வியாபாரத்தில் கவனம் குறைந்து சற்று நஷ்டம் ஏற்பட்டது. எனவே இரண்டாவது மகள் திருமணத்தை ஆடம்பரம் இல்லாமல் முடிக்க வேண்டிய கட்டாயம்.
அவருக்கு வியாபாரத்தில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில் எனது மகன் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தான். முதலீடு பத்தவில்லை வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்ற காரணத்தாலும் போதுமான வருமானம் இல்லாத காரணத்தாலும் நான் போட்டிருந்த நகைகளை அடகு வைத்து எனது மகன் வியாபாரத்தில் ஈடு பட்டான். இந்த நிலையில் எனது கணவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு ஜோசியர்களிடம் செல்ல ஆரம்பித்தார். அச்சமயம் ஒரு ஜோசியர் உங்கள் மனைவியின் தாலி எங்கு இருக்கின்றது என்று தெரிந்து கொண்டு நாளை வாருங்கள் என்று அனுப்பி வைத்திருந்தார். இந்த விவரம் எனக்குத் தெரியாமல் அவர் கேட்டவுடன் தாலி என்னிடத்தில் கழுத்தில் இருக்கின்றது ஆனால் தங்கத்தால் ஆன தாலிச் சரடு பையனிடத்தில் கொடுத்துள்ளேன் எனக்கூற அவரும் என் மகனைக் கூப்பிட்டு விசாரித்ததில் தாலிச் சரடினை அடகு வைத்து சில கடன்களை அடைத்துள்ளதாக கூறினான்.
மறுநாள் காலை என் கணவர் ஜோசியரிடம் சென்று விவரத்தைக் கூற உங்களுக்கு உடல் நிலை சரியாக வேண்டும் என்றால் அந்த தாலிச் சரடினை எவ்வளவு ரூபாய்க்கு அடகு வைத்திருந்தாலும் மீட்டு வந்து அதனுடன் மேலும் இரண்டு பவுன் சேர்த்து கழுத்தில் அணிவித்தால் அவர் புரண குணம் அடைந்து விடுவார் எனக்கூற அவரும் அவ்வாறே செய்து குணம் அடைந்து விட்டார். அதற்காக சில நகைகளை விற்று விட்டோம். சில காலம் சந்தோஷமாக இருந்தோம். அவர் வியாபாரத்தில் நாட்டம் செலுத்தவில்லை.
மீண்டும் வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் என் மகன் வற்புறுத்தலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மீண்டும் அந்த தாலிச் சரடினை என் மகனிடம் கொடுத்து அடகு வைத்து பிரச்சினைகளை சமாளித்தோம்.
ஆனால் அவருக்கு மீண்டும் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு நடமாட முடியாத நிலைக்கு வந்து விட்டார்.
மீண்டும் அதே ஜோசியரிடம் நான் சென்ற சமயம் கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட சமயம் தாலிச் சரடினை ஏதேனும் ஒரு கோயிலில் காணிக்கையாக செலுத்தி கணவர் உயிரினை காக்கும் படி கேட்டால் மரணப்படுக்கையில் உள்ள ஒருவரைக் கூட காப்பாற்ற முடியும். ஒரு முறை கஷ்டம் அனுபவித்தும் அதே தவறினை மீண்டும் செய்த காரணத்தால் இந்த முறை அது மாதிரிச் செய்ய முடியாது. அந்த தாலிச் சரடினை மீட்டு ஏதேனும் ஒரு கோயில் உண்டியலில் போட்டால் தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்று கூறி விட்டார்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் என் மகனிடன் கூற இப்போதைக்கு அவ்வளவு பணம் புரட்டக்கூடிய அளவில் இல்லை என்று கூற வேறு நகைகள் எல்லாவற்றையும் விற்று விட்ட நிலையில் அந்த தாலிச் சரடினை மீட்கவோ அல்லது ஜோசியர் கூறிய படி கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தவோ முடியவில்லை.
அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு திடீரென காலமாகி விட்டார். அது மட்டுமல்ல. தனது தந்தையின் சாவுக்கு தாம் காரணமாகிவிட்டதை எண்ணியும் நாங்கள் ஏதேனும் கேட்டு மன உளைச்சல் ஏற்படும் என்பதாலும் என் மகன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுச் சென்று விட்டான். எங்கு இருக்கின்றான். என்ன செய்கின்றான். உயிருடன் இருக்கின்றானா இல்லையா என்ற விவரம் எதுவும் தெரியாமல் நாங்கள் வெளியில் சிரித்துக்கொண்டும் உள்ளே அழுது கொண்டும் இருக்கின்றோம்.
எனது முதல் மகள் மிக மிக வசதி படைத்தவளாக இருந்தாலும் கூட்டுக் குடும்பமாக வெளியூரில் வசித்து வருவதால் நாங்கள் அங்கே செல்ல முடியவில்லை.
எனது இரண்டாவது மகள் நடுத்தர குடும்பமாக இங்கேயே இருப்பதால் நான் என் மூன்றாவது மகளுடன் இரண்டாவது மகள் ஆதரவில் வசித்து வருகின்றோம்.
எனது இரண்டாவது மகள் எவ்வளவு தான் அன்பாக இருந்தாலும் எங்கள் மீது வெறுப்பு மருமகனுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக நான் ஒரு சில இடங்களில் வீட்டு வேலை பார்த்து வருகின்றேன். அந்தக் கஷ்டத்தினை என் மகளுக்கு கொடுக்கவில்லை. அவள் எனக்கு எப்போதும் கடைக்குட்டி. எப்போதும் என் செல்லம்.
எனது கடந்த காலத்தைப் பற்றி உங்களிடம் கூறி மனது புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இருந்தாலும் நான் இதனை கூறுவதற்கு காரணம் உண்டு.
உங்கள் குடும்பத்தார் வளர்ந்து வரும் நிலையில் அல்லது வளர்ந்து விட்ட நிலையில் இருப்பவர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு என்னால் சீர் வரிசைகள் நகை போன்றவை எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம்.
உங்களைப் பற்றி நான் எதுவும் கூற எனக்கு அறுகதையில்லை. உரிமையும் இல்லை.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக்கூடாது என்னும் பழமொழி என் மகளுக்கு கட்டாயம் பொருந்தும்.
இவ்வாறு நான் சொல்லும் காரணத்தால் எனக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ தெரியாமல் என் மகளை இரகசிய திருமணம் செய்து கொண்டு கண்காணாமல் போய் விடலாம் என்று நினைத்தால் என் மகன் எப்படி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டுச் சென்ற சோகத்துடன் நான் வருத்தத்தில் இருக்கின்றேனோ அதே போல் என் மகளுக்கும் சேர்த்து நான் சோகப்பட வேண்டும். ஆனால் எனக்கு புத்திர சோகம் எனக்கு பழகி விட்டது.
உங்கள் குடும்பத்தாருக்கு எனக்கு ஏற்பட்ட சோகம் போல தாங்கள் ஏற்படுத்த மாட்டீர்கள் அதற்கு என் மகள் நிச்சயம் காரணமாக இருக்க மாட்டாள் என்று நான் நம்புகிறேன் என்று கூறியவாறு மீண்டும் நாளை தொடருவோம் என்று கூறி விடடு அழுதுகொண்டே போய் விட்டார்கள்.
நாங்கள் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் மிக மிக சோகமாக இருந்தோம். அவளுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது. நான் எவ்வளவு ஆறுதல் கூறியும் அவள் அழுவதை நிறுத்தவில்லை.
சற்று நேரத்தில் உள்ளே சென்ற அவளின் தாயார் அவளை அழைக்க என்னிடம் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே சென்று விட்டாள்.
எனது இதயம் எப்படி வருந்தியிருக்கும் என்பதனை என்னால் சொல்லவே முடியாது.
அன்றைய தினம் இரவுப் பொழுது எங்களுக்கு அரவணைப்பாக இருந்த தலையணைகள் கூட எங்களுக்கு சாதகமாக இல்லை. இரவு முழுதும் தூக்கம் இல்லாமல் பொழுது விடிந்து விட்டது.
அவளை மூன்று நாட்கள் காணமுடியாமல் தவித்தபின்னர் எனக்கு அவள் அழுது புலம்பி உடல் நலமில்லாமல் அவதிப்படுவது அறிந்து உடனே அவள் நலம் பெற இறைவனைப் பிரார்த்தித்தேன்.
மீண்டும் பழைய நிலைக்கு அவள் திரும்ப ஒரு வார காலம் பிடித்தது.