முதலாவது திருமண கலந்தாய்வு
(அவளும் நானும் சேர்ந்து)
அவளது உடல் நிலை சரியாக தேறிய பின்னர் நான் மீண்டும் அவளிடம் பேச ஆரம்பிக்க முயன்றேன்.
அவளது தாயார் என்னிடமும் அவளிடமும் பேசியதற்கு முன்னர் அவளிடத்தில் இருந்த சந்தோஷம் இல்லை. புன்னகையுடன் காட்சி தந்த அவள் சோகமாக காட்சி தந்தாள்.
நானாகவே பேச ஆரம்பித்தேன். உனது தாயார் சொன்னபடி என் குடும்பத்தார் வளர்ந்து வரும் நிலையில் இருந்தாலும் அல்லது வளர்ந்த நிலையில் இருந்தாலும் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் மிக மிக சிக்கனமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்றேன்.
நீங்கள் உங்கள் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக இருந்து வருகின்றீர்கள. உங்களுக்கென்று தனிப்பட்ட வருமானம் இல்லை. உங்களால் வரக்கூடிய வருமானம் எவ்வளவாக இருந்தாலும் திருமணம் என்று சொல்லும் சமயம் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு கட்டுப்பட்டுத் தான் நடக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் உங்களுக்கென தனிப்பட்ட வருமானம் எதுவும் இருந்தால் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் எனக்கு உங்கள் சொத்தில் பங்கு எதுவும் வேண்டாம். எனக்கு இவள் தான் மனைவியாக வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பெற்றோரைச் சம்மதிக்க வைத்து என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியும். உங்கள் பெற்றோர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த என்னை உங்கள் வீட்டிலேயே மருமகளாக வைத்துக் கொண்டால் எனக்கு பூரண சம்மதம். அதே நேரத்தில் சேற்றில் முளைத்த செந்தாமரை பூஜை அறைக்கு வரக்கூடாது என்று முடிவெடுத்தால் நீங்கள் என்னை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக தனிக்குடித்தனம் வந்து கஷ்டப்பட வேண்டும். அவ்வாறு நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து பார்த்து நான் தினம் தினம் கண்ணீர் விட வேண்டும். எனவே நாம் இரண்டுக்கும் தயாராக வேண்டும்.
நீங்கள் உங்கள் பெற்றோரிடம் நம் திருமண விஷயத்தை ஆரம்பிக்கும் முன்னர் உங்களுக்கென்று தனியே ஒரு வருமானம் வரக்கூடிய நிலைக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். நான் இப்படிச் சொல்வதால் நாம் இருவரும் தனிக்குடித்தனம் தான் செல்ல வேண்டும் என்று தாங்கள் என்னை தவறாக நினைக்கக் கூடாது.
என்னுடைய தாயார் பேசியதன் படி என்னை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்றோ நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன் என்றோ சொல்லவில்லை. அவர் சொன்ன அறிவுறைகளின் சாராம்சப்படி நாம் இருவரும் இருவர் வீட்டிற்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மீண்டும் நாளை தொடரலாம் என்று கடைசியாக கூறி அழுது கொண்டே உள்ளே சென்று விட்டார். நாளை என்ன சொல்வார் என்று நான் இன்று வரை காத்திருக்கிறேன்.
இடையில் எனது உடல் நிலை பாதிக்கப்பட்ட படியால் மேலும் பேசி என்னை தற்போது சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்னும் முடிவில் இருக்கலாம். அவர் மீண்டும் என்ன பேசப் போகிறார் என்பதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உடனே நான், நீ சொல்வது போல எனக்கென்று தனியாக ஒரு வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டு உனது தாயார் என்ன சொல்கிறார் என்பதனையும் அறிந்து கொண்டு நான் எனது பெற்றோரிடம் சம்மதம் கேட்பது சரியாக இருக்கும். அத்துடன் நம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் எனது பெற்றோருக்கு எனது உறவினர் வீட்டிற்கு நானும் நீயும் சென்று வந்த நாளன்று இரவே தெரிந்து விட்டது. இருந்தாலும் என்னிடம் இது வரை அதைப்பற்றி கேட்கவில்லை. அதனால் அவர்களுக்கு நமது திருமணத்தில் சம்மதம் உண்டா அல்லது சம்மதம் இல்லையா என்பது அறிய முடியாமல் நான் தவித்து வருகின்றேன்.
இந்த நிலையில் நான் எனக்காக தனியாக வருமானம் வரக்கூடிய வகையில் ஏதேனும் வேலை தேடி என் சொந்தக் காலிலேயே நான் நிற்கக்கூடிய அளவிற்கு வந்தவுடன் நம் திருமணத்தைப் பற்றி நம் இருவர் பெற்றோரிடமும் தெரிவித்து சம்மதம் வாங்கலாம். அதுவரை எனக்கு வேலை கிடைக்க என்னுடன் சேர்ந்து நீயும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
உடனே அவள் சம்மதித்தாள். அவளது தாயார் அறிவுறையைப் புறக்கணித்து நானும் அவளும் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று இருவர் வீட்டிற்கும் தெரியாமல் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தோம்.
அதற்காக நாம் இருவரும் முதலாவதாக சென்றது மதுரை மீனாட்சியம்மன் கோயில். அங்குள்ள பொற்றாமரைக் குளத்திற்கு அருகில் உள்ள விநாயகர் சிலைக்கு அவள் பொற்கரங்களால் விபூதி எடுத்துக் கொடுத்து நான் அதனைப் பெற்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதற்காக எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும் அவளும் சேர்ந்து ஆரம்பித்தது விநாயகர் வழிபாடு.
தும்பிக்கையான் மீது நம்பிக்கை
வைத்தால் அந்த நம்பிக்கை
தும்பிக்கையான் அருளால் நிறைவேறும்.
வைத்தால் அந்த நம்பிக்கை
தும்பிக்கையான் அருளால் நிறைவேறும்.