இருவர் வழிபாடு
அசைவுகள் அற்ற ஒரு குளத்தில் ஒரு கல்லைப் போட்டால் அந்த கல் எங்கு விழுகின்றதோ அந்த இடத்திலிருந்து நீர் அலைகள் வட்ட வடிவமாக சுற்றிலும் விரிவடைந்து குளத்தின் கரை வரை சென்று கொண்டே இருக்கும்.
எதிர் காலத்தில் நமது வாழ்க்கை எப்படி இருக்கும்? நம் இருவருக்கும் திருமணம் நடக்குமா? எப்போது நடக்கும்? எப்படி நடக்கும்? நமது திருமணத்திற்கு பெற்றோர்களின் நல்லாசி கிடைக்குமா? உறவினர் சுற்றம் நண்பர்கள் புடைசூழ அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கெட்டி மேளங்கள் முழங்க மங்கல ஒலியுடன் நான் அவள் கழுத்தில் தாலி கட்டும் நாள் வருமா அல்லது காந்தர்வ மணமாக முடியுமா என்று பலப்பல எண்ணங்கள் எனக்கு மட்டுமல்ல அவளுக்கும் தோன்ற ஆரம்பித்து விட்டது.
இருந்தாலும் நம்பிக்கை உண்டு. அவள் சொன்ன அறிவுறைகளின் படி நான் எனக்கென்று ஒரு வருமானத்தை தேடிக் கொண்டு சொந்தக் காலில் நிற்கும் நிலைக்கு வரும் வரை பொறுத்திருந்து தான் ஆக வெண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
வேலை தேடும் படலம் ஆரம்பித்தேன். என்னுடன் கூடப்பழகிய நண்பர்கள் யாரேனும் உதவ முன்வருவார்களாயின் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஏதேனும் தொழில் அல்லது வணிகம் செய்ய முடியுமா என்று யோசித்து பார்த்ததில் ஏதேனும் வேலைக்குச் சென்றால் தான் நல்லது எனத் தோன்றியது. அதனையே அவளும் சரி என்று சொன்னாள்.
பிறந்தது முதல் அவளைச் சந்திக்கும் வரையில் கோயில் குளங்களுக்குச் சென்று கடவுளை வழிபடும் அளவிற்கு பக்தி எதுவும் இல்லை. ஆனால் அவளைச் சந்தித்த பின்னர் அவளுடன் தனிமையில் பொழுதினை கழிக்க வேண்டும் அவளுடன் நெருக்கமாகப் பழக வேண்டும் என்பதற்காக அவளுடன் கோயில்களுக்குச் சென்று வருவது வாடிக்கையாகி விட்டது.
அவள் எப்படி பயபக்தியுடன் வழிபாடு செய்கின்றாளோ அந்த அளவிற்கு என்னால் வழிபாடு செய்ய முடியாது ஏனெனில் பழக்கமில்லை.
வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தேன். நான் மட்டுமல்ல அவளும் என் கூட வருவதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் முன்கூட்டியே செய்து விடுவோம். ஏற்கனவே அவளது பொற்கரங்களால் விபூதி எடுத்துக் கொடுத்து விநாயகருக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பின்னர் அவளும் நானும் சென்று பல கோயில்களில் வழிபாடு செய்ய ஆரம்பித்தோம்.
ஒரு கோயிலுக்குச் செல்லுமுன்னர் அந்த கோயிலில் உள்ள வழிபாட்டு முறைகள் பற்றி அவள் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பாள். கோயிலுக்குள்ளே நுழையுமுன்னர் இந்த கடவுளுக்கு இந்த பொருட்கள் வைத்துப்படைக்க வேண்டும் என்று முன்கூட்டியே கூறி விடுவாள்.
சிவன் கோயிலுக்கு வில்வ இலை. நாகப் புற்று உள்ள கோயிலுக்கு முட்டை, பால், மஞ்சள் குங்குமம். அம்மன் கோயிலுக்கு குறிப்பிட்ட வண்ணத்தில் ஆடைகளுடன் பூஜைப் பொருட்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை. முருகன் கோயிலுக்கு அபிஷேகத்திற்கான பால். பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை என்று வகை வகையாக நன்றாக வழி காட்டுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக கோயில்களில் உள்ள குளங்களில் உள்ள மீன்களுக்கு உப்பு மிளகு பொறி போட்டு அந்த மீன்கள் தின்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.
எனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல கோயில்களுக்கு நானும் அவளும் வழிபாடு செய்ய செல்வோம். அதே போல எனக்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக அரசமரம், வேப்பமரம் போன்றவற்றிக்கு மஞ்சள் நூல் கட்டி விளக்கு ஏற்றுவோம்.
அதே போல வெற்றிலை மற்றும் பாக்கு ஆகியவற்றைக் கொண்டு 108 எண்ணிக்கை வரும் வகையில் வெற்றிலை பாக்கு மாலை தயார் செய்து ஆஞ்சநேயருக்கு சாத்துபடி செய்வாள்.
நான் அவளிடம் ஆஞ்சநேயர் ஒரு பிரம்மச் சாரி. திருமணம் செய்து கொள்ளாதவர். அவரிடம் எப்படி திருமணப் பிரார்த்தனை வைக்க முடியும் என்று கேட்டால் ஸ்ரீ ராமபிரானிடமிருந்து சீதையை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்ற சமயம் இருவரையும் சேர்த்து வைத்தது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். எனவே நம் இருவரையும் சேர்த்து வைக்குமாறு அவரிடம் வேண்டுவது சரிதான் என்பாள்.
நான் அப்படியானால் ஆஞ்சனேயரை மட்டும் வழிபட வேண்டியது தானே மற்ற தெய்வங்களை விட்டு விடலாமே என்பேன். அதற்கு முருகன் வள்ளியை சேர்த்து வைத்தது விநாயகர். அவரும் திருமணம் ஆகாதவர் தான். இருந்தாலும் எந்த ஒரு சுப காரியத்திற்கும் மஞ்சளிலாவது பிள்ளையார் பிடித்து வைத்து தான் சுப காரியம் செய்ய முடியும். உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நம் இருவருக்கும் தடையில்லாமல் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் நாம் அனைத்துக் கடவுள்களையும் வழிபாடு செய்து நமது வேண்டுதல்களை வைப்போம். ஏதோ ஒரு கடவுள் கிருபையினால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பாள்.
எது எப்படியோ நானும் அவளும் கோயில்களுக்குச் செல்லும் சமயம் அவள் அணிந்து வரும் ஆடைகளின் நிறம் எலுமிச்சம்பழ நிறமுடைய மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறம், பச்சை நிறம் மற்றும் நீல நிறம். அவளை அந்த நிறங்களில் உள்ள ஆடைகளில் அடிக்கடி பார்த்ததாலோ என்னமோ நானும் அந்த நிறங்களை அவளுடன் சேர்த்து மிகவும் நேசிக்க ஆரம்பித்து விட்டேன்.
நாம் வாழும் ஊரில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் ஒரு முறை சென்று வந்து விட்டோம். இனி மீண்டும் அதே கோயில்களுக்கு இரண்டாவது சுற்று போக வேண்டும். அல்லது வெளியூர்களில் உள்ள கோயில்களுக்குச் செல்ல வேண்டும் என்னும் நிலை.
அந்த கால கட்டத்தில் அதிகாலை 5.00 மணிக்கு எனது கனவில் ஒரு விநாயகர் உருவம் தெரிந்தது. அந்த உருவம் என்னிடம் அசரீரியாக பேசியது. உனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் நான் எங்கு இருக்கிறேன் என்று கண்டுபிடித்து எனக்கு தொடர்ந்து சில காலம் வழி பாடு செய்தால் உனக்கு நல்ல வேலை கிடைக்கும் என்பதனை நான் நன்றாக கேட்க முடிந்தது.
நான் கேள்வி கேட்டு விநாயகர் பதில் சொல்லும் நிலையில் இருந்தால் என்னால் கேட்டிருக்க முடியும். ஆனால் விநாயகர் உருவம் மட்டும் எனக்கு தெரிந்தது. குரல் அசரீரியாக இருந்ததால் நான் எதுவும் கேட்க முடியவில்லை.
அந்த நேரத்தில் திடீரென தூக்கம் கலைந்து விட்டது. ஆனாலும் நான் கனவில் கண்ட விநாயகர் உருவம் என் மனதில் நன்கு ஆழமாகப் பதிந்து விட்டது.
காலையில் நான் அவளுடன் பேசும் சமயம் நான் கண்ட கனவு பற்றி கூறினேன்.
அவள் கேட்டாள். நாம் இருவரும் நமது ஊரில் உள்ள கோயில்கள் அனைத்தையும் பார்த்து விட்டோம். நாம் பார்த்த கோயில்களில் எந்த கோயிலிலாவது அது மாதிரியான விநாயகர் உருவம் கொண்ட சிலை உள்ளதா என்று கேட்டாள்.
எனது கனவில் வந்த உருவம் கொண்ட விநாயகர் சிலை இது வரை நாம் இருவரும் சேர்ந்து வழிபட்டது கிடையாது. ஆனாலும் இதே ஊரில் உள்ள கோயில் தான். ஆனால் பிரகாரம் இல்லாத ஒரு மரத்துக்கு அடியில் சிறிய மேடையில் உள்ள விநாயகர். ஒரே ஒரு விளக்கு மாத்திரம் எரிந்து கொண்டிருந்தது. நித்திய புஜைகள் நடப்பது போல் தெரியவில்லை. எனவே இனி நாம் கோயில்களுக்குச் செல்லும் சமயம் அனைத்து விநாயர் சிலைகளையும் எங்கெங்கு எவ்வாறு இருக்கின்றது என்று பார்த்தால் தான் அந்த விநாயகர் சிலையினை என்னால் கண்டு பிடிக்க முடியும் என்று கூறினேன்.
நானும் அவளும் சென்று வழிபாடு செய்யும் சமயம் நான் என் கனவில் வந்த உருவம் கொண்ட விநாயகர் சிலையினைத் தேடுவேன். எப்போதும் அவளுடன் சென்று வருவது பெற்றோருக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதாலும் எனக்கு வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்பதாலும் நான் மட்டும் தனியாக அனைத்துக் கோயில்களுக்கும் சென்று விநாயகர் சிலைகளைத் தேடுவேன். இதனால் எனக்கு தேடுதல் நோக்கம் தான் இருந்ததே தவிர பக்தி அவ்வளவாக இல்லாமல் போய் விட்டது.
ஒரு வகையாக கனவில் கண்ட அந்த வடிவம் கொண்ட விநாயகர் சிலை இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.
அந்த சந்தோஷமான செய்தியினை நாம் இருவரும் மிக மிக சந்தோஷமாக பகிர்ந்து கொண்டோம். இருந்தாலும் எனக்கு வேலை கொடுக்கக்கூடிய அந்த கடவுளை நானும் அவளும் சேர்ந்து ஒரு நல்ல முகூர்த்த தினத்தன்று வழிபட்டோம். அவளுக்கு ஒரே ஆச்சர்யம். இதுவரை இந்த இடத்தில் இவ்வளவு சக்திவாய்ந்த கடவுள் விக்ரஹம் இருப்பது எனக்குத் தெரியவில்லை. கோயிலிலே ஒரு ஒதுக்குப் புறத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பிரகாரத்தில் இருப்பதால் இந்த விநாயகருக்கு புஜை புனஸ்காரங்கள் குறைவாக இருக்கின்றது. நாம் இனி வழிபட்டு நல் வாழ்வு பெறுவோம் என்று கூறினாள்.
அந்த விநாயகர் விக்ரஹத்தை கண்டறிந்து வழிபட ஆரம்பித்ததிலிருந்து மூன்று மாத காலத்தில் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது.
ஒரு சந்தோஷம் இருந்தால் ஒரு சோகம் இருக்கும் என்று சொல்வார்கள். வேலை கிடைத்தது எனக்கு மிக்க சந்தோஷம். ஆனால் வெளியூரில் கிடைத்ததால் அவளைத் தற்காலிகமாகப் பிரிய வேண்டும் என்பது எனக்கு சோகம். எனக்கு மட்டும் அல்ல அவளுக்கும் தான்.
இருந்தாலும் கூடிய சீக்கிரம் இருவர் வீட்டாரிடமிருந்து அனுமதி பெற்று திருமணம் செய்து கொள்ள முடியும் என்னும் அழுத்தமான நம்பிகையுடன் பணியில் சேர முடிவு செய்து பணியில் சேர்ந்தேன்.
நான் பணியில் சேர்ந்த இரண்டு மூன்று நாட்களில் அங்கே இருக்க மனம் இல்லாமல் அவள் வெளியூரில் உள்ள அவர்களின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டாள். அந்த அளவிற்கு அவளுக்கு நான் இல்லாத தனிமை வாட்டியிருக்கின்றது.