முதலாவது திருமண கலந்தாய்வு
(எனது பெற்றோர்களுடன்)
அவளும் நானும் வேண்டி விரும்பி கடவுளை வணங்கி எனக்கு வேலை கிடைத்தவுடன் கட்டாயம் அவளை நான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்னும் மிகப் பெரிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் பணியின் காரணமாக வெளியூர் செல்ல நேரிட்டது.நான் பணியில் சேர்ந்தவுடன் அவளை எனது பிரிவு வாட்டிய காரணத்தால் அவள் ஊரில் இருக்க மனம் இல்லாமல் வெளியூரில் உள்ள அவளது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டாள் என்னும் தகவல் அவளது தூரத்து உறவினரும் எனக்கு நண்பராக இருப்பவருமான ஒருவர் மூலமாக அறிந்து கொண்டேன்.
மலர்களைத் தேடி வண்டுகள் வரலாம். ஆனால் வண்டுகளைத் தேடி மலர்கள் செல்ல முடியாது. சூரியனைப் பார்த்து தாமரை மலரும் ஆனால் தாமரை மட்டும் மலர்வதற்காக சூரியன் உதிப்பதில்லை.
அவளது நிலையும் அப்படித்தான். அவள் என்னைப் பார்க்க வரமுடியாது. இருந்தாலும் அவளைப் பார்க்க நான் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும். அதற்காக முன்பின் தெரியாத அவளது உறவினர் வீட்டிற்கு நான் சென்று அவளைச் சந்திப்பது என்பது சாத்தியமல்ல. அவர்களுக்கு நமது நெருக்கம் தெரியுமோ தெரியாதோ அல்லது நம்மிடையே உள்ள நெருக்கத்தினை கருத்தில் கொண்டு அதனுள் விரிசல் ஏற்படுத்துவதற்காக அவளது தாயார் ஏதேனும் திட்டம் தீட்டி அனுப்பி வைத்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
அதற்காக நான் எனது நண்பர் மூலமாக அவளது வீட்டிற்கு தூது அனுப்பி விசாரித்து வரச் சொன்னேன். எனது சந்தேகம் சரிதான் என்பது தெரியவந்தது.
எனது நண்பன் சென்று விசாரித்த சமயம் அவள் என்னுடன் சேர்ந்து சுற்றுவது நெருக்கமாகப் பழகுவது பிடிக்கவில்லை எனவே அவர்களைப் பிரிக்க நான் என்னாலான அறிவுறைகளை ஒரே ஒரு முறை சொன்னேன். அந்த அறிவுறைகளைக் கேட்ட அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. மேற்கொண்டு அவளுக்கு நான் ஏதேனும் அறிவுறைகள் கூறி அவள் ஏதேனும் விபரீத முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதனால் நான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அதே நேரம் அவள் நம்பும் படியாக சில பல பொய்களைக்கூறி அவளை எனது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளேள். வேலை கிடைத்து நான் வெளியூர் சென்று விட்டபடியால் அதனைச் சாதகமாக்கிக் கொண்டு அவளது தனிமை சோகத்தைக் குறைப்பதற்காகவும் இருவரையும் சேர விடாமல் தடுப்பதற்காவும் அவளை அவளது உறவினர் வீட்டிற்கு முன்கூட்டியே விஷயம் சொல்லி அனுப்பி வைத்திருப்பதாக கூறியது எனக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் என்ன செய்வது என்பது தெரியாமல் எனது நண்பரிடமே விவரம் கேட்க அவன் மிகப் பெரிய மனதுடன் தானே நேரில் சென்று (அவள் வெளியூரில் தங்கியிருக்கும் உறவினர் அவனுக்கும் உறவு தான்) விவரம் அறிந்து வருவதாகத் தெரிவித்தான். நானும் அவன் சென்று வருவதற்கு எவ்வளவு செலவானாலும் கொடுக்கின்றேன் என்று கூற அதனை அவன் ஏற்கவில்லை. என்னுடைய நண்பனுக்காக நானாக முன்வந்து செய்வது உதவி அல்ல கடமை என்றான்.
அவ்வாறே எனது நண்பன் அவள் தங்கியிருக்கும் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்து விவரம் அறிந்து நேரிடையாக நான் பணியாற்றும் அலுவலகத்திற்கே வந்து விட்டான்.
எனது நண்பன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு என்னால் எப்படி இருந்திருக்க முடியும்.
எனது நண்பர்கள் கூட்டமாகச் செல்லும் சமயம் எனக்கு ஏற்கனவே வாழ்க்கைத் துணை கிடைத்து விட்டது. நம்மைப் போல அலைந்து திரிந்து வாழ்க்கைத் துணையை தேடும் நிலையில் இல்லை எனக் கூறி என்னை ஒதுக்கி விட்டு அவர்கள் மட்டும் செல்வார்கள். அவ்வாறு செல்லும் சமயங்களில் பல முறை எனது நண்பர்கள் நானும் அவளும் உல்லாசமாக நடந்து போவதைப் பார்த்து எங்களுக்கு அண்ணி கிடைத்து விட்டபடியால் உன்னை எங்கள் சைட் அடிக்கும் குழுவிலிருந்து நீக்கி விட்டோம் என்று கிண்டலடிப்பார்கள். அவர்களிடம் அவள் கேட்கும் கேள்வி இவர் விரும்பி சைட் அடிப்பது யாரை? அதற்கு அவர்கள் தேவதை போல நீங்கள் முந்திக்கொண்டு அவனுக்கு கிடைத்து விட்டபடியால் அவன் இது வரை யார் முகத்தையும் விரும்பி பார்த்தது இல்லை. ஏனெனில் நீங்கள் எங்கள் நண்பனை அந்த அளவிற்கு மயக்கி இருக்கின்றீர்கள் என்பார்கள். அது மட்டுமல்ல. நாங்கள் வெற்றிலை பாக்கு போடுவோம். பீடா சாப்பிடுவோம். சிகரட் பிடிப்போம் மது குடிப்போம். எதிலும் அவன் கலந்து கொள்ள மாட்டான் கேட்டால் உங்களிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றேன் என்பான். நாங்களும் உங்களுடன் ஊர் சுற்றுவதற்கும் கோயில் குளங்களுக்கு செல்வதற்கும் ஜாலியாக இருப்பதற்கும் செலவுக்கு பணம் தேவைப்படும். எங்களுடன் சேர்ந்து செலவு செய்தால் உங்களுக்குப் பணம் போதாது என்பதற்காக செலவுகள் எதுவும் வைப்பதில்லை. ஆனால் அவர்கள் ஒரே ஒரு சாக்லெட்டை நம் இருவருக்கும் சேர்த்து கொடுப்பார்கள். ஒரே ஒரு இளநீரை நம் இருவருக்கும் கொடுப்பார்கள். நான் பாதி சாப்பிட்ட பின்னர் மீதியை அவள் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். ஸ்ட்ரா கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நமது நெருக்கம் என் நண்பர்களுக்கு அத்துபிடி.
எனது உறவினர்களில் சிலர் கூட நம்மை பார்த்து ஊர் சுற்றியது போதும் காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொள்ளப் பாருங்கள் என்று கூறியிருக்கின்றார்கள்.
முதலாவது மாதத்திற்கான அரசாங்க சம்பளம் வந்தவுடன் நேராக எனது வீட்டிற்கு வந்தேன்.
எனது பெற்றோரிடம் நான் அவளை காதலிப்பதாகவும் அவளை என்னுடன் மணமுடித்து வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறும் கேட்டுக் கொண்டேன். எனது தாயார் எதுவும் பேசவில்லை.
எனது தந்தை அவளுடைய ஜாதகத்திற்கும் எனது ஜாதகத்திற்கும் பொருத்தம் இல்லை. அதுவும் தவிர காசு பணம் அந்தஸ்தில் அவர்கள் நமது தரத்திற்கு ஏற்றபடி இல்லை என்று கூறி திருமணம் செய்து வைக்க மறுத்தார்.
காசு பணம் அந்தஸ்து இன்று வரும் நாளை போகும் உழைப்பினால் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும். என்னிடம் கடினமான உழைப்பு மற்றும் வெற்றி பெறுவேன் என்னும் தன்னம்பிக்கை இருக்கின்றது அவளிடம் கடவுள் நம்பிக்கை இருக்கின்றது நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கடின உழைப்புடனும் கடவுள் நம்பிக்கையுடனும் சந்தோஷமாகத்தான் இருப்போம். இப்போது எனக்குக் கிடைத்துள்ள வேலை கூட நானும் அவளும் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்தமையால் கிடைத்தது தான். நானும் அவளும் அனைத்துக் கோயில்களிலும் சென்று வழிபாடு முடியும் தருவாயில் எனது கனவில் ஒரு விநாயகர் உருவம் தோன்றி என்னை கண்டுபிடித்து வணங்கினால் உனக்கு நல்ல வேலை கிடைக்கும் எனக்கூற நானும் அவளும் அனைத்துக் கோயில்களிலும் தேடியலைந்து கண்டுபிடித்து அந்த விநாயகருக்கு 3 மாத காலம் பூஜை செய்ததன் பலனாக எனக்கு இந்த வேலையும் கௌரவமும் கிடைத்துள்ளது. உள்ளுரிலே உறவினர்களையும் நண்பர்களையும் மட்டும் அறிந்திருந்த எனக்கு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட உயர் அலுவலர்களையும் தெரியக்கூடிய அளவில் உயர்ந்துள்ளேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய திடமான நம்பிக்கை மற்றும் அவள் காட்டிய கடவுள் பக்தி மற்றும் நானும் அவளும் சேர்ந்து வழிபட்டதன் பலன். இன்று நான் பெரிய உத்தியோகத்திற்குப் போய் நாலு காசு சம்பாதிக்கும் அளவிற்கு இருக்கின்றேன் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அவள் தான்.
ஜாதகப் பொருத்தம் பார்த்து எங்கள் திருமணத்தை தடுக்க வேண்டாம்.
நான் அவளைத் திருமணம் செய்து கொண்டு அவள் எனக்கு மனைவியாக வருவாளேயானால் எங்கள் இருவர் வாழ்க்கையும் கடைசி வரை சந்தோமானதாகவும் நிம்மதியானதாகவும் வசதியுள்ளதாகவும் இருக்கும் என்று கூறினேன்.
அதற்கு என் தந்தை நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பீர்கள் ஆனால் எங்கள் நிலை என்ன என்பது பற்றி நீ சிந்திக்க வில்லை. அவளது மோகம் உன்னை இப்படி மாற்றி விட்டது.
எக்காரணம் கொண்டும் உன்னை அவளுக்கு திருமணம் செய்து வைக்க நான் சம்மதிக்க மாட்டேன். வேறு ஏதேனும் பேச வேண்டுமென்றால் பேசு இல்லையென்றால் நான் சொல்வதைக் கேள் என்று கூறிச் சென்று விட்டார்.
பின்னர் என் தாயாரிடம் சொல்லிப் பார்த்தேன். நான் சொல்லி விட்டேன். அவர் மறுக்கின்றார். அத்துடன் உனது தந்தையும் அவளது தாயும் கூடிக் கூடிப் பேசுகிறார்கள். என்னவென்று தெரியவில்லை. கேட்டால் ஒன்றுமில்லை என்று தான் பதில் வருகின்றது. என்னால் எதுவும் ஊகிக்க முடியவில்லை. ஆனால் அவளை உனக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு பூரண சம்மதம். நான் பல முறை சொல்லிப்பார்த்தும் உன் தந்தை கேட்கவில்லை.
கடைசியில் கஷ்டப்படப்போவது நீ தான் என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரிகின்றது எனக்கூறி அழ ஆரம்பித்து விட்டார்.
எனது தாயாரை மேலும் அழ வைக்க நான் விரும்பாததால் மீண்டும் ஒரு முறை திரும்ப வந்து பேசிப் பார்க்கலாம் என்னும் நோக்கில் அன்று இரவே பணிக்கு செல்லும் பொருட்டு புறப்பட்டு விட்டேன்.
நாம் இருவரும் வழிபட்ட விநாயகரை தனியாக வழிபடும் அளவிற்கு என்னிடம் மன அமைதி இல்லை. எனவே விநாயகரைக் கூட வழிபடாமல் ஊருக்குத் திரும்பி விட்டேன்