முதலாவது திருமண கலந்தாய்வு
(அவளது தாயாருடன்)
எனது தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக மனக் கவலையுடன் பணிக்குத் திரும்பிய நான் சகஜ நிலைக்குத் திரும்ப இரண்டு நாட்கள் ஆனது.
அதன் பின்னர் விநாயக சதுர்த்திக்கு ஊருக்கு வருமாறு என்னுடைய பெற்றோரிடமிருந்து கடிதம் வந்தது.
உடனே நான் எனது நண்பருக்கு போன் செய்து அவள் ஊரில் இருக்கின்றாளா? வெளியுர் சென்றவள் திரும்பி விட்டாளா என்று அறிந்து தெரிவிக்கச் சொன்னேன். எனது நண்பன் அவளது வீட்டிற்கு சென்று திரும்பி எனக்கு தகவல் தெரிவித்தான். அவள் ஊரிலிருந்து திரும்பி விட்டாள். ஆனால் அவள் வீட்டில் இல்லை எங்கு இருக்கின்றாள் என்பதும் தெரியவில்லை அதே போல உள்ளுரில் இருப்பதாகவும் தெரியவில்லை என்று என்னிடம் தெரிவித்தான்.
ஆகவே நான் பெற்றோர் அழைப்பின்படி விநாயக சதுர்த்திக்கு ஊருக்கு செல்லவில்லை.
அடுத்து வரும் பண்டிகையான தீபாவளிக்கு ஊருக்குச் சென்று அவளை பார்த்து வரலாம் என்பதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டேன்.
தீபாவளிக்கு புதிய ஆடைகள் வாங்கி ஊருக்குச் சென்று விட்டேன். தீபாவளிக்கு முதல் நாள் இரவு அவளைப் பார்க்க முயன்றேன். முடியவில்லை.
தீபாவளியன்று புத்தாடையில் தேவதையாக ஜொலிக்கும் அவளைப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலுடன் அவளது வீட்டிற்குச் சென்றேன். அவள் இல்லை.
அவள் தாயார் மாத்திரம் இருந்தார். என்னைப் பார்த்ததும் இனிமேல் என் மகளைத் தேடி இங்கெல்லாம் வரக்கூடாது. அவளை உனக்குத் திருமணம் செய்து வைக்க எனக்கோ என் குடும்பத்தாருக்கோ சம்மதம் இல்லை.
உங்களது வசதி மற்றும் அந்தஸ்துக்கு ஏற்றபடி வேறு ஒரு அழகான பணக்காரப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள். இனி மேல் இந்த வீட்டுப்பக்கம் நீ வரவே கூடாது. என் மகள் வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று கோபமாகக் கூறினார்.
உங்கள் மகளிடம் என் முன்னிலையில் ஒரு முறை ஒரே ஒரு முறை பேசிப் பாருங்கள் அவள் என்னை மணக்க முடியாது என்று கூறிவிட்டால் நான் திரும்பி பார்க்காமல் திரும்ப வர முடியாத இடத்திற்கு போய் விடுகின்றேன் எனக் கூறினேன்.
நான் உயிரோடு இருக்கும் வரை உனக்கும் அவளுக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டேன். மீறி எதுவும் நடப்பது போல இருந்தால் என் மகளுக்கு விஷம் கொடுத்து நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி என்னை விரட்ட நானும் வாசல் தாண்டி வெளியே விழும் சமயம் வெளியில் இருந்து வீடு திரும்பிய அவள் என்னைப் பார்த்தாள்.
அவளை என்னிடம் பேச விடாமல் தடுத்து அவளது குடும்பத்தாரும் அவளது தாயாரும் அவளை தர தரவென்று இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை மூடி விட்டார்கள். நான் அவளுடன் பேசவே முடியவில்லை.
மிக்க கவலையுடன் வீட்டிற்குத் திரும்பினேன். எனது பெற்றோர் புத்தாடை உடுத்தி மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.
என்னிடம் புத்தாடை உடுத்தும்படி சொன்னார்கள். நான் அவளை இழந்த மனக்கவலையுடன் அமர்ந்திருந்து புத்தாடை உடுத்தாமல் அப்படியே மாலையில் ஊருக்குத் திரும்பி விட்டேன்.
வரும் சமயம் என் தாயாரிடம் ஒரு மனிதனுக்கு இஷ்டப்பட்ட வாழ்க்கை அமையாவிடில் அவன் எத்தனை காலம் வாழ்ந்தாலும் எவ்வளவு வசதிகள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க மாட்டான். மனக்கஷ்டத்துடன் தான் சாக வேண்டும். அவ்வாறான நிலைக்கு நான் தள்ளப்பட்டதற்கான காரணம் என்னுடைய பெற்றோர் ஆகிய நீங்கள் தான். எனவே என்னை இனிமேல் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் எதிர்பார்க்காதீர்கள். இனி நான் தனி மரம். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்றாகி விட்ட அனாதை என்று என் தாயாரிடம் கூறினேன்.
என் தாயார் எவ்வளவோ சொல்லியும் நான் புத்தாடை அணியாதது எனது தாயாருக்கு மாத்திரம் மனக்கவலையை கொடுத்தது.