என் தேவதையின் பிரிவு
ஊர் திரும்பிய நான் மீண்டும் ஊர் பக்கம் செல்லுமுன்னர் அவளை அழைத்து வருவதற்கான தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வீடு பார்க்க ஆரம்பித்தேன்.
வீடு பார்க்கும் படலத்தில் நான் ஒரு ஏரியாவில் வீடு தேடி அலைந்து கொண்டிருந்த சமயம் என்னுடன் படித்த எனது நண்பன் கூட வந்தான். அப்போது திடீரென்று நண்பா திரும்பி பார். அந்தப் பெண் உன்னைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறாள் என்றான். நானும் நான் பணியாற்றும் ஊரில் என்னைப்பார்த்து அழக்கூடிய பெண் யாராக இருக்கும் என திரும்பிப் பார்க்க அழுது கொண்டிருந்தது எனது இதயம். ஆம். அவள் தான். அவளே தான். என் உயிர். என் உயிர் மூச்சு. என் காதலி என் தேவதை.
அவளைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கும் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. மொட்டை மாடியிலிருந்து அவள் கையசைத்துக் கூப்பிட்ட காரணத்தால் நான் அவள் வீட்டிற்குச் சென்றேன்.
அருகில் சென்றவுடன் தான் தெரிந்தது அவளுக்கு திருமணம் ஆன விவரம். எனக்கு பேச்சே வரவில்லை. அவள் அழுகையை நிறுத்தவில்லை.
இந்த நேரத்தில் எனது நண்பன் என்னைத் தேற்றி நண்பா அவள் அழுது கொண்டே இருக்கிறாள். நீ மௌனமாக இருக்கின்றாய். அக்கம் பக்கத்தினர் திடீரென வந்து கேட்டால் நிலைமை மோசமாகப் போய் விடும் எனவே நீ முதலில் அவளிடம் பேசி அவள் அழுவதை நிறுத்த முயற்சி செய் என்றான். எனக்கு ஏற்பட்ட பேரிழப்பால் எனக்கு பேச்சே வரவில்லை.
நீண்ட நெடிய அழுகை மற்றும் மௌனத்திற்குப் பின்னர் அவள் பேச ஆரம்பித்தாள். உனது தந்தையும் எனது தாயாரும் நாம் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்பதற்கு சதித்திட்டம் தீட்டி என்னை உன்னிடமிருந்து பிரித்து கட்டாயக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். நான் எவ்வளவோ முயன்றும் வீட்டுக் காவலில் ஒரு கைதியைப் போல அடைத்து வைத்து முதல் நாள் பெண் பார்த்தல், மறு நாள் நிச்சயதார்த்தம். அடுத்த நாள் கல்யாணம் என்று மூன்றே நாட்களில் என்னை இந்த மூன்றாம் குழியில் தள்ளி விட்டார்கள்.
நீங்கள் வேலையில் சேர்ந்த நாள் முதல் திட்டமிட்டு என்னை வெளியூர்களுக்கு அனுப்பி ஊரிலேயே தங்கவிடாமல் செய்து உங்களிடம் என்னைப் பேச விடாமல் தடுத்து வந்தார்கள்.
தீபாவளியன்று தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயாரிடம் உங்களுக்கு நல்ல வேலை கிடைத்து விட்டபடியால் உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி தகறாறு செய்ததால் உங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டதாக என்னிடம் பொய் சொன்னார்கள். தாங்கள் எங்கள் வீட்டு வாசலில் இருந்து கீழே விழுந்த சமயம் தான் நான் வந்தேன். என்னை எதுவும் பேச விடாமல் வீட்டிலுள்ள அனைவரும் என்னை உள்ளே இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள். 10 பேர் சேர்ந்து இழுக்கும் சமயம் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதன் பின்னர் எனது தாயார் என்னை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு என் உறவினர்களிடம் தாங்கள் வந்து பெண் கேட்ட விவரத்தையும் மறுத்து விரட்டியதையும் சொன்னார்கள். என் தாயாரின் உண்மையான சுயரூபம் அப்போது தான் எனக்குத் தெரிந்தது. என்னுடைய தாயார் தான் என் காதலுக்கு குறுக்கே நின்றார் என்பதால் அவளை என் தாயார் என்று சொல்லிக் கொள்ள கேவலமாக இருக்கின்றது.
இதை விடக் கொடுமை அடுத்த நாள் என் தலையில் மிகப் பெரிய இடி விழுந்தது. நாளை உன்னை பெண் பார்க்க ஒரு குடும்பம் வருகின்றது. அவர்களுக்கு உன்னைப் பிடித்திருந்தால் உடனடியாக திருமணம். உன்னால் எதுவும் செய்ய முடியாது. மறு பேச்சுக்கே இடமில்லை
மறுநாள் காலை உங்களைப் பார்ப்பதற்காக உங்கள் வீடு செல்ல முயன்றேன். உடனே என் தாயார் அவன் தீபாவளிக்கு புதுத் துணி கூட உடுத்தாமல் நேற்றைய தினமே ஊருக்குச் சென்று விட்டான். உன்னால் அவனைப் பார்க்க முடியாது என்றார்கள். நானும் அவர் இல்லாவிட்டால் பரவாயில்லை அவரது தாயாரையாவது பார்த்து வருகிறேன் எனக்கூற அவரது தாயாரைப் பார்த்து எந்த பிரயோஜனமும் இல்லை. நானும் அவனது அப்பாவும் சேர்ந்து எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க எங்கள் இருவருக்கும் எள் அளவு கூட இஷ்டமில்லை. எங்கள் இருவருக்கும் என்று சொன்னது எனக்கும் அவனுடைய அப்பாவுக்கும் என்று சொன்னேன். எங்கும் போகக் கூடாது எனக்கூறி என்னுடைய தாயார் என்னை மீண்டும் அறையில் அடைத்து விட்டார்கள்.
அடுத்த நாள் பெண்பார்க்க வந்தவர்கள் அதற்கு அடுத்த நாள் நிச்சயதார்த்தம் என்றார்கள். மறு நாள் கல்யாணம் என்றார்கள். எல்லாம் முடிந்து விட்டது. ஹிந்துக் கோவில்களில் பலி கொடுக்கும் சமயம் கூட பலி கொடுக்கக் கூடிய ஜீவன் தலையசைக்கும் வரை காத்திருப்பார்கள். அவ்வாறு தலையசைப்பதை கடவுள் உத்தரவு என்பார்கள். என்னை அதை விட கேவலமாக நடத்தி தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டார்கள்.
எனக்கு இந்த வாழ்க்கை முழுவதுமாகப் பிடிக்கவில்லை. உங்களைப் பார்த்து உங்களிடம் தெரிவித்த பின்னர் உயிரை மாய்த்துக் கொள்வது என்னும் முடிவில் இருந்தேன். நல்ல வேளை இன்று உங்களிடம் நடந்த உண்மைகளை கூறி விட்டேன்.
அதன் பின்னர் அவள் கட்டியுள்ள தாலியைக் காட்ட வேண்டும் என்றாள். எனக்குப் பார்க்க விருப்பமில்லை. திரும்பிக் கொண்டேன். உடனே அவள் நான் சொன்னால் கேட்க மாட்டீங்களா தயவு செய்து திரும்பிப் பாருங்கள் என்றாள். நான் கட்ட வேண்டிய தாலியை எவனோ ஒருவன் கட்டி இருக்கிறான் அதை நான் பார்த்து என்ன செய்யப் போகிறேன் என்றேன். அவள் நான் தாலியை மறைத்துக் கொள்கின்றேன். திரும்பிப் பாருங்கள் என்றாள். எனக்குப் புரியவில்லை.
அரை மனதுடன் திரும்பிப் பார்த்தேன். நான் அவளைச் சந்தித்ததும் வந்த அவளது முதலாவாது பிறந்த நாளன்று நான் ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த அந்த ஆலிலைக் கிருஷ்ணன் டாலர் அவளது தாலிக் கயிற்றில் இருந்தது. அதன் இரண்டு பக்கமும் தாலிக்குப் பக்கத்தில் போட வேண்டிய குண்டுகள் மற்றும் சொரைகள் இருந்தன. தாலி மட்டும் இரண்டு முடிச்சுகளுக்குள் இருந்தது. தாலிக்குப் பக்கம் இருக்க வேண்டிய குண்டுகள் இல்லை
ஏன் இப்படி என்று கேட்டேன்.
உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். ஆனால் கயவர்கள் நம்மைப் பிரித்து விட்டார்கள்.
நாம் இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டாத கடவுள் இல்லை. போகாத கோயில் இல்லை. ஏற்றாத தீபம் இல்லை. வழிபடாத முறைகள் இல்லை. இவ்வளவு செய்தும் ஹிந்துக் கடவுள்கள் நம்மைப் பிரிக்கும் போது நாம் மட்டும் ஏன் ஹிந்துக் கலாசாசாரம் பின்பற்ற வேண்டும். மனதைப் பறி கொடுத்த காரணத்தாலும் மானசீகமாக உங்களுடன் கற்பனைக் கோட்டையில் வாழ்க்கை நடத்துவதாலும் நீங்கள் தான் என்னுடைய இதயத்தில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் காதலர். தீடீரென வந்து என்னுடைய விருப்பத்திற்கு மாறாக தாலி கட்டி விட்ட படியால் அவர் என் கணவர் உடலுறவின்போது மட்டும். என்னுடைய இதயம் முழுவதும் உங்களுக்குச் சொந்தம் அவருடன் தாம்பத்யம் மட்டுமே என்றாள். நாம் இருவரும் கடைசி வரை கலாச்சாரக் கைதிகளாக இருப்போம் என்றாள்.
நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களின் படி ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. ஹிந்துக் கலாச்சாரம். இந்திய நாகரிகம். ஆனால் உங்களைக் காதலித்த என்னை எனது விருப்பத்திற்கு மாறாக உங்களை மணக்க விடாமல் தடுத்து வேறொரு நபருடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்த போதிலும் நான் உங்கள் மனதில் இருப்பதையும் நீங்கள் என் மனதில் இருப்பதையும் எவராலும் மாற்ற முடியாது. நமது உயிர் நம்மை விட்டுப் பிரியும் வரை நாம் எவ்வளவு வசதியாக வாழ்ந்தாலும் எவ்வளவு வயதுகள் கடந்தாலும் உங்களைப் பற்றிய நினைவுகள் எனக்கும் என்னைப் பற்றிய நினைவுகள் உங்களுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி இருக்கும் போது அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக நடத்தி வைக்கப் பட்ட திருமணம் என்னும் ஒரே காரணத்தால் வேறொரு நபருடன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காலம் முழுவதும் வாழ்க்கை நடத்துவது போலியானது. ஹிந்துக் கலாச்சாரத்தின் படி நாம் ஒருவனுக்கு ஒருத்தி என்று மனதுக்குப் பிடித்தவர்களை மணந்து கொள்ள முடியாமல் கடைசி மூச்சு வரையில் காதலித்தவர்களை மனதில் எண்ணிக் கொண்டு மனதுக்குப் பிடிக்காத ஒருவருடன் உடலுறவு கொண்டு வாழ்க்கை நடத்துவதன் பெயர் "கலாச்சாரக் கைதிகள்".
அவர் எனக்கு அவசர கோலமாக மூன்றே நாட்களில் எனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால் உடல் மட்டும் அவருக்குச் சொந்தம்.
எந்த நேரத்திலும் நான் உங்கள் நினைவுடன் தான் இருப்பேன். நீங்கள் என்னை நினைப்பதையோ நான் உங்களை நினைப்பதையோ யாராலும் அறியவும் முடியாது தடுக்கவும் முடியாது. எனவே நான் உயிரோடு இருக்கும் வரை தாங்கள் எனக்குக் கொடுத்த இந்த அன்புப்பரிசு என் தாலிக் கயிற்றில் தான் இருக்கும். அதனை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது.
என் உயிர் போகுமுன்னர் அவர் உயிர் போய்விட்டால் என் கழுத்திலிருந்து மஞ்சள் கயிற்றையும் தாலியையும் தான் கழற்றுவார்கள். தாங்கள் கொடுத்த ஆலிலை கிருஷ்ணன் டாலரை ஒரு செயினில் போட்டுக் கொள்வேன் என்றாள். அப்போதும் கூட அந்த டாலர் என் கழுத்தில் தான் இருக்கும் என்றாள்.
அப்போது நான் எழுந்து போகிறேன் என்றேன்.
உடனே அவள் போகிறேன் என்று சொல்லாதீர்கள். போய் வருகிறேன் என்று சொல்லுங்கள்.
அவர் என் கழுத்தில் தாலி கட்டியிருந்தாலும் நான் உங்களை மறக்க முடியாது. உடல் அவருக்கு உயிர் உங்களுக்கு.
எனக்கு நன்றாகவே தெரியும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உங்களுக்கு ஆபிஸ் விடுமுறை. இரண்டாம் சனிக் கிழமையும் விடுமுறை. மாதத்தில் ஒருநாள் கட்டாயம் என்னைப் பார்க்க நீங்கள் வர வேண்டும். அதிலும் கட்டாயம் இரண்டாம் சனிக்கிழமைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமையன்று நிச்சயம் எதிர் பார்ப்பேன்
எனது நண்பன் குறுக்கிட்டு இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை தொடர்ந்து விடுமுறை வந்தால் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம் எனவே வேறு ஞாயிற்றுக் கிழமை என்றான்.
இராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி என்பது போல நான் இருக்கும் இடம் தான் இவருக்கு சொந்த ஊர் சொர்க்கம் கைலாசம் எல்லாம். இவர் என்னைப் பார்க்க வரும் நாட்கள் எல்லாம் எனக்கு பண்டிகை நாட்களே. கூடிப் பேசும் நேரம் குறைவாக இருந்தாலும் இவரைப் பார்ப்பதற்காக இவரை நினைத்து ஏங்கும் பொழுதுகள் அதிகமாகத் தான் இருக்கும். எனவே வேறு சாய்ஸ் எதுவும் இல்லை என்றாள்.
இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு என் காதலி இப்படிப் பேசுகிறாளே என்பதை நினைத்த எனக்கு என் தாயாரிடம் சொல்லி வந்தது ஞாபகத்திற்கு வந்தது.
என்ன சிந்தனை என்றாள்.
ஒன்றுமில்லை. தீபாவளியன்று வீட்டிலிருந்து வரும் சமயம் இனி நான் தனி மரம். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்றாகி விட்ட அனாதை என்று என் தாயாரிடம் கூறினேன்.
இனி நான் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் வர மாட்டேன் என்றும் சொல்லி வந்தேன். நான் சொன்ன படியே நடந்து விட்டது. அவசரப்பட்டு அன்று திரும்பியிராவிட்டால் உன் திருமணத்தையாவது தடுத்து நிறுத்தி உன்னை அடைந்திருக்க முடியும். நான் அவசரப்பட்டு விட்டேன். என்னை மன்னித்து விடு என்றேன்.
நான் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் மலர்கள் பூத்திருக்கும் பூஞ்சோலை. கனிகள் காய்த்துக் குலுங்கும் ஒரு தோட்டம் என்றாள். எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
எல்லாம் முடிந்த பின்னர் அவள் கேட்டாள். இந்தப் பக்கம் வருவதற்கான காரணம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளட்டுமா?
என்னால் பதில் எதுவும் பேச முடியவில்லை.
எனது நண்பன் அவளது கேள்விக்கு பதில் அளித்தான். அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பின்னர் உங்களுடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு உங்களை இங்கு அழைத்து வந்து தனிக் குடித்தனம் வைக்கத்தான் வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்து இருக்கின்றான் என்று கூறியவுடன் அவள் மீண்டும் தன் அழுகையை ஆரம்பித்து விட்டாள். எப்போதுமே சந்தோஷமாகவே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்த என் தேவதை என் கண் முன்னால் கண்ணீர் வடிப்பதை என்னால் காண முடியவில்லை. என் இதயமும் அழ ஆரம்பித்து விட்டது.
இதனிடையே இரண்டு டம்ளர் காப்பி வந்தது. உடனே எனது நண்பன் நீங்களும் சாப்பிடலாமே என்றான். எனக்கும் சேர்த்துதான். அவர் வழக்கம் போல் பாதியை குடித்துவிட்டு எனக்கு மீதியை கொடுத்து விடுவார். உடலால் நான் களங்கப் பட்டிருந்தாலும் உள்ளத்தில் எந்த மாற்றமுமில்லை எந்த களங்கமுமில்லை. என் மீது அவர் செலுத்தும் அன்பு அது போல் நான் அவர் மீது செலுத்தும் அன்பு நாம் இருவரும் இறக்கும் வரை தொடரும் என்று கூறி என்னை அசர வைத்து விட்டாள். எனக்காக என் வருகைக்காக என் தேவதை என்றும் தன் இதயக் கதவை மூடாமல் திறந்து வைத்துக் காத்திருக்கிறாள்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அடுத்த மாதம் கட்டாயம் வருவதாகக் கூறி தாங்க முடியாத மன வேதனை மற்றும் மிகுந்த துன்பத்துடன் திரும்ப வருவதற்கு மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டேன். அவள் கண்களில் நீர் மல்கிட மொட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டே கையசைத்து வழியனுப்பி வைத்தாள்.