திருமணத்திற்குப் பின்னர் அவளது முதல் சந்தோஷம்
அவளது திருமணத்திற்குப் பின்னர் அவளுடனான முதல் சந்திப்பின் போது அவள் சொன்ன வார்த்தைகள் என்னை வாட்டியது. நான் அவள் கேட்டுக்கொண்ட படி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அவளைப் பார்க்க நான் செல்லாவிட்டால் என்ன செய்து கொள்வாளோ என்ற பயம் என்னை தொற்றிக் கொண்டது. அதே சமயம் பெற்றோரிடம் அவளை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காத காரணத்தால் எந்த ஒரு நல்ல காரியத்திலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி வந்தமையால் விடுமுறையில் சொந்த ஊர் செல்ல விருப்பமில்லை.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் சமயம் எனக்கும் அவளுக்கும் சேர்த்து புத்தாடைகள் வாங்கியிருந்தேன். அவளைப் பார்க்கச் சென்ற சமயம் நான் விரட்டப்பட்டதால் என்ன செய்வதென்று அறியாத நிலையில் புத்தாடையினை நானும் உடுத்தாமல் அவளுக்கும் கொடுக்காமல் திரும்ப வேண்டியிருந்தது.
எனக்கு எடுத்திருந்த புத்தாடையினை உடுத்திக் கொண்டு அவளுக்கு வாங்கியிருந்த புத்தாடைகள் மற்றும் அவளுக்குப் பிடித்தமான சாக்லெட்டுகளுடன் காணும் பொங்கல் அன்று அவளைப் பார்க்கச் சென்றேன். அவள் மட்டும் தனியாக இருந்தாள்.
என்னைப் பார்த்தவுடன் அவளது முகத்தில் ஏற்பட்ட சந்தோஷம் மற்றும் சுறுசுறுப்பு என் மீது அவள் கொண்டிருந்த பாசத்தை மேலும் வெளிப்படுத்தியது. நான் வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்டேன். இன்று எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள் என்றாள். யார் யார் என்று கேட்டதற்கு ஒரு புன்னகை தான் பதில்.
அவளிடத்தில் நான் கொண்டு சென்ற புத்தாடைகளுடன் சாக்லெட்டுகளைக் கொடுத்தேன்.
அதனை பார்த்த அவள் முகத்தில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த இளமஞ்சள் நிற தாவணி (சாட்டின் நிறம்) மற்றும் எனது சட்டையின் நிறத்திற்கு மேட்ச்சாக இரவிக்கையுடன் பச்சை கலரில் ஆரஞ்சு நிற பார்டர் போட்ட பாவாடை மற்றும் கண்ணுக்குத் தெரியாத இன்னும் பிற. ஆடைகளைப் பார்த்தவுடன் அவள் கேட்டாள். இன்னும் நான் பாவாடை தாவணியில் தான் இருக்க வேண்டுமா?
நான் தீபாவளிக்கு வரும் சமயம் உனக்காக வாங்கியது. அப்போது என் நினைவில் நின்ற என் காதலிக்கு நான் வேறு எப்படி வாங்க முடியும்?
உன்னை என் மனக் கண்களில் பார்க்கும் சமயம் இரட்டை சடை பின்னலை இரண்டாக மடக்கி மேல் பக்கம் ரிப்பன் போட்டு இந்த ஆடைகளில் தான் அழகு தேவதையாக எனக்கு காட்சி தருகின்றாய். அதற்காக நான் எப்படி வேறு விதத்தில் யோசித்திருக்க முடியும்?
இவ்வாறு நாம் இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயம் உனக்கு இன்று நான் உணவு பரிமாற வேண்டும் என்பது எனது ஆசை. சரியா தவறா என்றாள்.
இப்போது வேண்டாம். நான் உன் கணவருக்கு அறிமுகமான பின்னர் அவர் முன்னிலையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றேன். அதுவும் சரி தான் எனக்கூறி சற்று நேரம் அமர்ந்திருக்கச் சொல்லி உள்ளே சென்றவள் நான் கொடுத்த புத்தாடைகளை அணிந்து கொண்டு எனது எதிர்பார்ப்பின் படியான தோற்றத்தில் கையில் காப்பி டம்ளருடன் வந்து நின்று என்னை அசத்தி விட்டாள்.
அவள் சொன்னது சரிதான். சீதைக்கு ராமன் இருக்கும் இடம் அயோத்தி. எனக்கு அவள் இருக்கும் இடம் தான் உலகிலேயே மிக மிக சந்தோஷமான இடம். நான் அவள் வீட்டிற்குச் செல்லும் நாட்கள் எல்லாம் அவளுக்கு பண்டிகை நாட்களே. நம் இருவருக்கும் அன்று தான் மாற்று தீபாவளி.
வழக்கம் போல காப்பி சூடாக இருக்கும் போதே குடிக்கலாமே என்றாள். நானும் சரியென்று குடிக்க ஆரம்பித்த சமயம் எனக்குப் பாதி என்றாள். உனக்கு வைக்காமல் நான் குடிக்க மாட்டேன் என்று எனது பழைய வழக்கப்படி நான் குடித்தபின்னர் அரை டம்ளர் காப்பியை அவளுக்குக் கொடுத்தேன். அந்த நேரம் சாக்லெட்டை எடுத்த அவள் இதையும் அதே போல என்றாள். அதுவும் அப்படியே.
நான் அவளிடம் உன் குடும்பத்தைப் பற்றி நான் தெரிந்து கொள்ள முடியுமா என்றேன். நான் நீ வேலைக்குச் சென்ற பின்னர் இத்தனை காலம் கடந்து இன்று தான் இவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றேன். இந்த சந்தோஷம் இன்று இரவு வரையாவது நிலைத்திருக்க வேண்டும் எனவே வேறு ஏதேனும் பேசி சந்தோஷமாக இருக்கலாம் என்றாள்.
அதன் பின்னர் நான் வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளம் வாங்கியவுடன் ஊருக்குச் சென்று பெற்றோரிடம் பேசியதையும் எனது தந்தை எதிர்ப்பு தெரிவித்ததையும் பற்றி சொன்னேன். அதே சமயம் எனது தாயார் நம் திருமணத்திற்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தார் என்பதனையும் நான் அவளை அடைவதற்கு தந்தை தடையாக இருப்பதை கூறி அழுத விவரத்தையும் தெரிவித்தேன்.
அதே போல தீபாவளிக்கு புத்தாடை கூட உடுத்தாமல் இருப்பது கண்டு எனது தாயார் எவ்வளவு மன வேதனை அடைந்தார் என்ற விவரத்தையும் சொன்னேன்.
அதே போல அவளும் அவளது வீட்டில் நடந்தவற்றை கூறினாள்.
இதே போல நானும் அவளும் முதல் முதலாக சந்தித்தது முதல் நடந்த விஷயங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சிக் கடலில் இருந்தோம். பின்னர் அடுத்த மாதம் பார்க்கலாம் எனக்கூறி புறப்பட்டேன்.
எனது கால்கள் முன்னே சென்றாலும் என் கண்களில் அவளது தோற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதே போல அவள் முகத்தில் முதல் அடி எடுத்து வைத்த போது இருந்த மகிழ்ச்சி எனது கால்கள் செல்லச் செல்ல குறைந்து கொண்டே வந்தது.
எனது தோற்றம் அவள் கண்களிலிருந்து மறையும் அதே சமயம் அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் படிப்படியாக மறைந்ததை என்னால் நன்கு உணர முடிந்தது.