குழந்தைக்குப் பெயர் தேடல்
காலங்கள் கடந்தன.
அவள் மிகவும் ஆலலுடன் எதிர்பார்த்திருந்த என்னுடைய பிறந்த நாளன்று அவளைக் காண ஆவலுடன் சென்றேன். அவள் மட்டும் தனியே இருந்தாள்.
அவள் என்னை வரவேற்ற விதமே தனியாக இருந்தது. இனிப்புகள் கார வகைகளுடன் பால் பாயாசம் வேறு. இத்தனை வருடங்கள் கழித்து முதலாவதாக இப்படியான ஒரு பிறந்த நாள்.
நானாகவே பேச ஆரம்பித்தேன். உடல் நலம் எப்படி இருக்கின்றது. மன நலம் பற்றி கேட்க மாட்டேன். ஏனென்றால் உன்னுடைய இதயம் என்னிடம் தான் இருக்கின்றது என்றேன்.
உங்களுடைய வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதால் எனக்கு தினந்தோறும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகின்றது.
ஆனால் தற்போது கொஞ்சம் அசதி என்றாள். எதற்கு எனக் கேட்டதில் என்னுடைய பெயர் V யில் ஆரம்பிக்கின்றது. உங்களுடைய பெயர் J யில் ஆரம்பிக்கின்றது. எனக்கு குழந்தை பிறக்க இருக்கின்றது. இன்னமும் அவரிடம் சொல்லவில்லை. உங்களிடம் தான் முதலாவதாகச் சொல்கின்றேன். வேறு யாருக்கும் தெரியாது என்றாள். எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு எனது பெயரின் முதல் எழுத்தையும் உங்கள் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து ஒரு அழகான பெயராக இன்று தேர்வு செய்யலாம் என்றாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை.
பிறக்கப் போகும் குழந்தை ஆணோ பெண்ணோ எதுவாக இருந்தாலும் VIJAY என்னும் எழுத்துக்கள் வரவேண்டும் என தீர்மானித்தோம். அதன் படி பெண் குழந்தை பிறந்தால் விஜயா என்றும் ஆண் குழந்தை பிறந்தால் விஜயன் என்றும் பெயர் சூட்டுவது என்று என்னுடன் கலந்து ஆலோசித்து அவள் முடிவு செய்தாள். இதற்கு உங்கள் வீட்டில் ஒப்புதல் கிடைக்குமா என்றேன். ஒப்புதல் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி நான் அப்படித் தான் எனது முதலாவது குழந்தையை விஜி என்று அழைப்பேன் என்றாள்.
இத்தனை நாட்கள் உன்னை சந்தித்த சமயம் உங்கள் வீட்டார் எவரும் வீட்டில் இல்லாமல் இருந்தார்கள். இப்போது நீ ஒரு கருவை சுமப்பதினால் உன்னுடைய ஒத்தாசைக்கும் உதவிக்கும் உனது உறவினர்கள் உனது இல்லம் தேடி வருவார்கள். அப்போது நீ அவர்களிடத்தில் என்னைப் பற்றி அறிமுகப்படுத்துவது சற்று சிரமம்.
அதே சமயம் இதுவரை நாம் இருவரும் கலந்துரையாடியது போல இனி உனது உறவினர்கள் முன்னிலையில் சரளமாகப் பேச முடியாது. எனவே இனி வருங்காலங்களில் மாதம் ஒரு முறை இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை என்றில்லாமல் விடுமுறை இல்லாத நாட்களில் சந்திக்க வருகின்றேன் என்றேன். அதற்கு அவள் அரை மனதுடன் என்னை சந்திக்க வராமல் ஏமாற்றி விட மாட்டீர்களே என்றாள். உன்னை நான் எந்த காலத்திலும் ஏமாற்ற முடியாது ஏனெனில் அந்த காரியத்தை உனது தாயாரும் எனது தந்தையும் சேர்ந்து செய்து விட்டார்கள் என்றேன். அதற்கு அவள் சற்று சோகம் ஆனாள்.
என்ன மிகவும் அசதியாக இருக்கின்றதா என்றேன். இல்லை என்றாள்.
உன் வயிற்றில் கருவை சுமக்கும் சமயம் நீ கண் கலங்கினால் கருவில் உள்ள சிசு வளர்ச்சி பாதிக்கும் எனவே எப்போதும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய் என்றேன். அந்த சந்தோஷம் எனக்கு கிடைக்கவில்லையே என்றாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை.
இந்த தருணத்தில் அவளது எண்ணங்களை மாற்ற அவள் எனக்கு செய்து இருந்த இனிப்புகளை எடுத்து அவளிடம் கொடுத்து இந்த முறை நீ முதலில் சாப்பிட்டு எனக்குக் கொடு என்றவுடன் அவ்வாறே ஆகட்டும் எனக் கூறி புன் முறுவலுடன் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை எனக்குக் கொடுத்தாள். கடைசியில் அவள் கையால் பாயாசம் வாங்கி பாதி குடித்து விட்டு மீதியை அவளிடம் கொடுக்க அவளும் உண்மையான அன்பையும் பாசத்தையும் காதலையும் எனக்கு பிறக்கப் போகும் குழந்தையுடன் நான் பகிர்ந்து கொள்கின்றேன் என்று கூறி ஆசையுடன் பருகினாள். எனது பிறந்த நாளன்று அவளுக்கும் புத்தாடை வாங்கியதைக் கூறி அவளிடம் ஆசையாகக் கொடுத்தேன். அவள் புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டாள்.
அந்த சமயம் ஒருவர் வந்தார். கடைக்கு வாடகை கொடுக்க வந்துள்ளோம் என்றார். உடனே அவள் அவரிடமே கொடுக்கலாமே என்றாள். நாங்கள் கொடுத்தோம் அவர் அவசரமாக வெளியே போகிறேன் வாடகையை வீட்டில் கொடுத்து விடுங்கள் என்று காலையிலேயே சொல்லிவிட்டு சென்று விட்டதால் வாடகை கொடுக்க வந்துள்ளோம் என்றவுடன் வாடகையை பெற்றுக் கொண்டாள்.
அவளாகவே பேச ஆரம்பித்தாள். தரை தளத்தில் முன்பக்கம் வாசலுக்கு இருபுறமும் இரண்டு கடைகள். உள்ளே நான்கு வீடுகள். நான்கு குடித்தனங்கள் வாடகைக்கு. இங்கு மேலே எனக்கு தனிச் சிறை. இது தவிர இன்னும் இரண்டு வீடுகள். அவை எங்கு இருக்கின்றன என்பது இது வரை எனக்குத் தெரியாது.
பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பஞ்சு மெத்தை கட்டில் வாங்கலாம் ஆனால் தூக்கத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. லட்ச ரூபாய் கொடுத்து ஏ சி வாங்கலாம் ஆனால் தென்றல் காற்றின் சுத்தமும் சுகாதாரமும் அதில் கிடைக்காது. லட்சக் கணக்கிலோ அல்லது கோடிக் கணக்கிலோ செலவு செய்து மணமக்களை சேர்த்து வைக்கலாம். ஆனால் அவர்களது இதயங்களை இணைத்து வைக்க முடியாது.
உண்மையான காதலும், ஒளிவு மறைவு இல்லாத அன்பும், கடினமான உழைப்பும், தன்னம்பிக்கையும், போதுமான வருமானமும், வருமானத்துக்குட் பட்ட வகையில் செலவுகளும் தம்பதியரிடையே இருக்குமானால் ஓலைக்குடிசையில், கோரைப் பாயில் படுத்தால் கூட நிறைவான சந்தோஷம் மற்றும் மனத் திருப்தியுடன் எத்தனை காலம் வேண்டுமானாலும் நிம்மதியாக வாழ முடியும்.
உறவு என்பது வாழ்க்கை வசதியில் இல்லை. அன்பிலும் அரவணைப்பிலும் தான் இருக்கின்றது என்பது நம் இருவருக்கு மட்டுமே தெரியும். ஆனால் எனது தாயார் இது மாதிரியான சொத்துகளுக்கு ஆசைப்பட்டு என்னை இப்படி பலிகடா ஆக்கி விட்டார்கள். இந்த வீட்டில் இல்லை என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை, எனக்கு நிம்மதி எனக்கு சந்தோஷம் என்பதனைத் தவிர என்றாள்.
உங்களைக் காதலித்த எனக்கு அவரை சுத்தமாக பிடிக்கவில்லை. என்னுடைய ஆள் காட்டி விரலை தொட்ட ஒரே காரணத்தால் வெற்றிலை பாக்கு, பீடி சிகரட், மது வகைகள் எதையும் தொடுவதில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் அதற்கு நேர் மாறானவர். மது இல்லாமல் இருக்கவே மாட்டார். எப்போது பார்த்தாலும் பாக்கு வாயில் இருக்கும். பணம் பணம் பணம் என்று அலைந்து திரிந்து வருவார். இங்கு நான் தனிமையில் இருக்கின்றேன். உண்ண ஏதாவாது வாங்கி வருவோம் என்று நினைக்க மாட்டார். அவரது சைட் டிஷ்களை நான் பார்த்தால் அருவருப்பாக இருக்கும்.
மாதத்தில் பாதி நாட்கள் எக்ஸிபிஷன் காண்ட்ராக்ட் என்பதால் வெளியூர் போய் விடுவார். இங்கு இருக்கும் நாட்களில் வசூலுக்கு போய் விடுவார். வீட்டில் இருக்கும் நாட்கள் மிக மிக குறைவு. அவற்றையும் போதையிலேயே கழித்து விடுவார். நீங்கள் பல முறை சொன்னது போல கிடைக்காதவனுக்கு கிடைக்காதது மேல் ஆசை. கிடைத்தவனுக்கு அதன் அருமை தெரியாது என்பதும் கிடைக்காதவனுக்கு ஏக்கம் கிடைத்தவனுக்கு அதிருப்தி என்பதும் உண்மையாகப் போய் விட்டது.
நீங்கள் இந்த வீட்டிற்கு முதல் முறை வந்த சமயம் நான் என் கையால் தயாரித்த உணவை பரிமாற ஆசைப்பட்டேன். நீங்கள் என் கணவரை நேரில் சந்தித்த பின்னர் பரிமாறலாம் இப்போது வேண்டாம் என்று என்று சொன்னீர்கள். அது பெருந்தன்மை.
சென்ற முறை நீங்கள் வரும் சமயம் அவர் வீட்டில் தான் இருந்தார். நீங்கள் வந்தவுடன் சமையலறையில் இருந்த என்னை உன்னைத் தேடி யாரோ ஒருவர் வந்திருக்கின்றார் என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டார். உங்களை ஒரு வார்த்தைக்குக் கூட யார் என்ன உறவு என்று கேட்காமல் யாரோ ஒருவர் என்று சொன்னது எனக்கு மிகவும் மன வேதனையாக இருந்தது. என்னுடன் கடைசி காலம் வரை இருந்திருக்க வேண்டிய நீங்கள் யாரோ ஒருவர் ஆகி விட்டதை எண்ணி நான் இரண்டு நாட்கள் அழுது புலம்பியது யாருக்கும் தெரியாது. எல்லாம் என் தாயாரின் சதி என் தலை விதி என்று புலம்பினாள்.
அவளது சோகத்தைக் குறைக்க சென்ற முறை வந்த சமயம் உடனடியாக புத்தாடைகளை அணிந்து வந்து ஆச்சர்யமூட்டினாய். இந்த முறை இல்லையா என்றேன்.
இதோ ஒரே நிமிடத்தில் என்று உள்ளே சென்றவள் அடுத்த சில நொடிகளில் மீண்டும் ஒரு தேவதையாக காட்சி கொடுத்தாள். இருவருக்கும் சந்தோஷம்.
நான் சென்று வரட்டுமா என்று கேட்டதற்கு மனமில்லாமல் தயாராகவுள்ள கண்ணீருடன் மவுனமாக தலையசைத்தாள். நானும் பிரிவு தாங்காத இதயத்துடன் அங்கிருந்து புறப்பட்டு எனது இருப்பிடம் வந்து சேர்ந்தேன்.