என் தாயாரின் வருத்தமும் சந்தோஷமும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் எனது பெற்றோர் புதிதாக வீடு ஒன்றினை வாங்கி கிரஹப் பிரவேசத்திற்கு அழைத்தார்கள். அதற்கு நான் செல்லவில்லை.
எனது தந்தைக்கு அறுபது வயதுகள் பூர்த்தியானதால் சஷ்டியப்த பூர்த்தி விழா வெகு விமரிசையாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் புடை சூழ இராமேஸ்வரத்தில் நடை பெற்றது. அதற்கும் அழைத்தார்கள். எங்கள் திருமணத்தை நடத்தி வைக்காத எனது தந்தையின் 60 வயது பூர்த்தியான திருமணத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும் என்று அதற்கும் செல்லவில்லை. அதனால் மனவேதனை அடைந்த என் தாயார் என் தந்தையுடன் நான் பணியாற்றும் ஊருக்கு வந்து அங்கேயே இருந்த எனது அண்ணன் வீட்டில் தங்கி என்னை அங்கு வருமாறு அழைத்தார்கள். நானும் சென்றேன்.
என் தாயார் என்னிடம் அவளைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். அவளைப் பார்த்து நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். அவளைப் பிரிந்து நீ கஷ்டப்படுவது எனக்கே பொறுக்கவில்லை. பாவம் அந்தப் பெண் என்ன பாடு படுகின்றாளோ எனக்கு மன வேதனையாக இருக்கின்றது. எனவே ஒரே ஒரு முறை அவளைப் பார்க்க என்னை அழைத்துச் செல் என்று கெஞ்சினார். நானும் அவளுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தேன்.
அவள் நாளை மதியம் எதிர் பார்ப்பேன். கட்டாயம் அழைத்து வாருங்கள் என்றாள்.
மறு நாள் மதியம் 2 மணிக்கு நான் என் பெற்றோருடன் அவளது வீட்டிற்கு சென்றேன்.
உள்ளத்தில் அழுகையும் உதட்டினில் புன் சிரிப்பும் கொண்டு எனது தந்தையை வாங்க மாமா என்றும் எனது தாயாரை வாங்க அத்தை என்றும் வரவேற்றாள். உறவு விட்டுப் போய் இருந்தாலும் பாசம் போகவில்லை என்று மிகவும் சந்தோஷப்பட்டார் என் தாய். பின்னர் என் பெற்றோருக்கு சிற்றுண்டி கொடுத்து உபசரித்தாள்.
இதற்கிடையில் எனது தந்தை அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வருவதாகக் கூறி (வெளி நடப்பு) எழுந்து சென்று விட்டார்.
என் தாயார் அவளிடம் என்னம்மா ஏதோனும் விசேஷம் உண்டா எனக் கேட்க அவளும் தலையை குனிந்து கொண்டு ஆமாம் மூன்று மாதம் என்றாள். உடனே என் தாயார் என்னைப் பார்த்து இந்த நல்ல சேதியினை முன்னமே சொல்லியிருந்தால் ஏதேனும் விசேஷமாக வாங்கி வந்திருப்பேனே என்று கூற பரவாயில்லை உங்கள் மகன் அவரை விட நன்றாக ஆரம்ப முதலே என்னை சரியாக கவனித்து வருகின்றார். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினாள். எனது தாய்க்கு மிக்க சந்தோஷம்.
பின்னர் அவளும் எனது தாயாரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தனர். உனது வீட்டை சுற்றிக் காட்டுகின்றாயா என்று எனது தாயார் கேட்டபடியால் வீட்டை சுற்றிக் காட்ட கூட்டிச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
என்ன நடக்கின்றது என்று நான் சயைலறையில் சென்று பார்த்தேன். அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
உன்னைத் திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக என் மகன் என்னை ஒதுக்கி விட்டான். புது வீடு வாங்கி கிரஹப் பிரவேசத்திற்கும் வரவில்லை.
இராமேஸ்வரத்தில் நடந்த எங்கள் சஷ்டியப்த பூர்த்தி விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. யார் பேச்சையும் கேட்க மாட்டான். நீ சொன்னால் மட்டும் தான் அவன் என்னைப் பார்க்க வருவான். என் மகனை என்னிடம் கொடுத்து விடு என்று கெஞ்சினார்.
உங்கள் மகன் என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருப்பததால் நான் உயிருடன் இருக்கின்றேன. இல்லாவிட்டால் எப்போதோ நான் உயிரை விட்டிருப்பேன் என்று கூறிபடியே உங்கள் மகன் இங்கு வந்து போவதைத் தடுத்து விடாதீர்கள என்று கூறினாள்.
என் கரம் பற்றி வாழ நினைத்த உங்கள் மகன் எனது ஆள் காட்டி விரலைத் தொட்ட ஒரே காரணத்தால் இன்று வரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கின்றார். ஆனால் என்னைத் தொட்டுத் தாலி கட்டி எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அப்படியில்லை. தினந்தோறும் மது குடித்து விட்டு தான் வீட்டுக்கு வருவார். எப்போதும் அவர் வாயில் பாக்கு தான் இருக்கும்.
அரை பவுன் தங்க தாலிக்கு பதிலாக வெறும் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் மாத்திரம் கட்டி உங்கள் மகன் கையில் கொடுத்து கூரைப் புடவையுடன் என்னை தாங்கள் மாட்டுப் பெண்ணாக ஏற்றிருந்தால் என்னுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களுடைய மறுமகளாக உங்கள் வீட்டிற்கு வந்து உங்களுக்கு பணிவிடை செய்து இருப்பேன்.
அதுதான் எனக்குத் தெரியுமே. ஒரு முறை கூட பார்த்திராத எனது சகோதரி உன் தோளில் சாய்ந்து தான் உயிர் விட்டார். அவளது ஆசை உன் மடியில் அவள் உயிர் பிரிய வேண்டும் என்பது. ஆனால் உயிர் விட்டது உன் தோளில். முன் பின் அறியாத என் சகோதரியின் உடல் நிலை பற்றிய விவரம் உன் கனவில் வந்து அடுத்த நாள் நீயும் என் மகனும் என் சகோதரியைப் பார்க்கச் சென்று வந்தது. அவளது உயிர் எப்போது பிரிந்தது என்பதை கேள்விப்பட்ட உடனேயே நீ தான் எனக்கு மறுமகளாக வரவேண்டும் என் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
அதற்காக நான் வேண்டாத கடவுள் இல்லை. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
ஐந்து பவுன் செயினை எனது தாயாருக்கு இரவலாக அல்லது கடனாக கொடுத்து இந்த பாழுங்கிணற்றில் தள்ளியிருப்பதற்கு பதிலாக அரை பவுன் தங்க தாலி போட்டு என்னை உங்கள் மறுமகளாக ஆக்கியிருந்தால் எனக்கு எந்த கவலையும் இருந்திருக்காது. நீங்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். உங்கள் மகன் உங்களை விட்டுப் பிரிந்து இங்கே கஷ்டப்பட வேண்டியது இல்லை என்றாள். அது மட்டும் அல்ல போன மாதம் ஹோட்டல் சாப்பாடு பிடிக்காமல் வயிற்றில் புண் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். என்னிடமும் சொல்லவில்லை. காப்பி கொடுத்த சமயம் பால் வேண்டுமென்று கேட்டார். அதற்கு நான் என்ன நமக்கு முதல் இரவு என்ற எண்ணமா பால் கேட்கின்றீர்கள் என்று கேட்ட சமயம் தான் அவர் அந்த விவரம் எனக்கு கூறினார். நான் விஷயம் தெரியாமல் இப்படிப் பேசி விட்டோமே என்று இரண்டு நாட்கள் கவலைப்பட்டு அழுதேன் என்று சொன்னாள்..
இதற்கிடையில் நான் குறுக்கே பேசினேன். எனது தந்தை தான் ஐந்து பவுன் தங்க செயின் கொடுத்தார் என்று இதுவரை என்னிடத்தில் கூட ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டேன். இந்த விஷயத்தை மறைத்தும் நீங்கள் உங்கள் பெற்றோரை இவ்வளவு வெறுக்கின்றீர்கள். சொல்லி இருந்தால் இன்னும் அதிகமாகும் என்பதாலும் என்னால் உங்கள் குடும்பத்தில் மேற்கொண்டு பிரச்னைகள் வரக் கூடாது என்பதாலும் மறைத்து விட்டேன் என்றாள். அவள் சொல்வதும் சரி தான்.
பின்னர் அவள் என் தாயாரிடம் அவளது தாலிக் கயிற்றில் போட்டு இருக்கும் ஆலிலை கிருஷ்ணன் டாலரைப் பற்றி சொல்லி இந்த டாலர் உங்கள் மகன் எனக்கு ஆசை ஆசையாக எனது பிறந்த நாளன்று பரிசாக கொடுத்தது. தாலிக்கு உண்டான முழு மரியாதையுடன் இது என் கடைசி மூச்சு வரை என் கழுத்தில் தான் இருக்கும். ஒரு வேளை என் கணவர் எனக்கு முன்பாக அகால மரணமடைந்தால் இந்த டாலரை எங்களைப் பிரிப்பதற்காக தங்கள் குடும்பத்திலிருந்து கொடுக்கப்பட்ட இந்த ஐந்து பவுன் செயினில் தான் போடுவேன். பிரிவுக்கு அடையாளம் ஐந்து பவுன் செயின் உறவுக்கு அடையாளம் இந்த ஆலிலை கிருஷ்ணன் உருவம் பதித்த அரை பவுன் டாலர். இந்த இரண்டையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
என்னை வேண்டாம் என்று ஒதுக்கியதற்கு காரணம் எனது அந்தஸ்து.
அழகாய் இருக்கின்றேன். அன்பாய் இருக்கின்றேன். ஆனால் வசதியாக இல்லை. ஆனால் உங்கள் மகன் உங்களால் அமைச்சரின் நேர்முக உதவியாளர் என்று இன்று பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு காரணம் அவரது கடின உழைப்பு மற்றும் என்னுடைய கடவுள் நம்பிக்கை. நாங்கள் இருவரும் சேர்ந்து போகாத கோயில் இல்லை. வேண்டாத கடவுள் இல்லை. அதன் பலன் அவருக்கு பணம் பதவி அந்தஸ்து. ஆனால் எனக்கு வாழ்நாள் முழுவதும் மனக் கஷ்டம்.
நாம் இருவரும் சேர்ந்து வழிபட்ட ஹிந்து கடவுள்கள் எங்களின் பிரார்த்தனையினை ஏற்காத போது நாம் ஏன் ஹிந்து கலாசாசாரத்தை பின் பற்ற வேண்டும் என்று உங்கள் மகனுக்கு தற்போது வரை காதலியாகவும் விருப்பமின்றி தாலி கட்டியவருக்கு தாம்பத்ய உறவில் மட்டும் தாரமாகவும் இருக்கின்றேன். உடலுறவு மட்டுமே வாழ்க்கை என்று நினைத்தால் அதனை மீறுவதன் மூலம் நான் வேறு பெயர் எடுக்க வேண்டும். எனக்கு அது தேவையில்லை. பிறவி எடுத்த எல்லோரும் இறப்புக்குப் பின்னர் சொக்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்வார்கள். எனக்கும் உங்கள் மகனுக்கும் சொர்க்கமோ நரகமோ கிடையாது. இருவரும் மறு பிறவிகள் எடுத்துக் கொண்டே தான் இருப்போம். நமது ஆசைகள் நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் பிறப்போம்.
இவை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனது தாயார் அவளிடம் என் மகனை எனக்கு மடிப்பிச்சையாக கேட்கிறேன். எப்படியாவது அவனை என் வீட்டிற்கு வந்து போகச் சொல். உன்னை மறுமகளாக அடையும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் இவனுக்கு ஒரு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்னும் ஆசை இருக்கின்றது. நீ தான் நிறைவேற்ற வேண்டும் என்று கூற அவளும் என்னிடம் நீங்கள் என்னை மணமுடிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்தால் நம் திருமணத்திற்கு ஆதரவாக இருந்த உங்கள் தாயாரை இப்படி ஒதுக்கக் கூடாது என்றும் சொன்னாள். நிச்சயம் உங்கள் குடும்பத்தின் மீது மீண்டும் பாசம் வைப்பேன் என்று சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டாள்.
நான் உள் மனது இடம் கொடுக்காத போதிலும் சரியென்று ஒப்புக் கொண்டேன். எனது தாயாருக்கு மிக்க மகிழ்ச்சி.
உடனே எப்போது வருகின்றாய் என்று கேட்டார்கள். நானும் மாதாமாதம் இரண்டு மூன்று முறை வந்து கொண்டு தான் இருக்கின்றேன். பயணியர் விடுதியில் தங்கி விட்டு ஊர் திரும்பி விடுவேன். இந்த முறை வீட்டிற்கு வருகின்றேன் என்றேன். அப்போது என் தாயார் அப்படியானால் நீ சொந்த ஊருக்கு வந்தும் கூட வீட்டிற்கு வருவதில்லையா என்று கேட்டார்கள். நானும் ஆம் என்று ஒப்புக் கொண்டேன்.
இந்த நேரத்தில் எனது தந்தை திரும்ப வந்து என்ன பேசியாகி விட்டதா? புறப்படலாமா என்று கேட்க என் தாயாரும் சரியெனச் சொன்ன பின்னர் நான் என் பெற்றோர்களுடன் திரும்பிய சமயம் அவள் கண்ணீர் விட்டது என் தாயாருக்கு மீண்டும் வேதனையை கொடுத்து விட்டது.
ஒன்று பட்ட இரண்டு இதயங்களை பிரித்ததனால் ஏற்பட்ட வருத்தத்தில் எனது தாயாரின் உடல் நிலை சற்று பாதிக்கப் பட்டு ஓரிரு வாரங்களில் சீரடைந்தது.
எனது பெற்றோர் ஊருக்குத் திரும்பிய இரண்டொரு நாட்களில் சொந்த ஊர் சென்று அரசு வாகனத்தில் அவசரமாக சென்று பார்த்து வந்தேன். எனது தாயார் அப்போது தான் மிகவும் சந்தோஷமடைந்தார்.
இது தான் பிள்ளைப் பாசம்.