எந்த ஒரு விசேஷங்களிலும் கலந்து கொள்ளாமை
சொந்த ஊர் சென்று என் பெற்றோர் வீட்டிற்குச் சென்று திரும்பிய அடுத்த மாதம் வழக்கம் போல் அவளைப் பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றேன். அப்போது அவளது கணவர் வீட்டில் இருந்தார்.
நான் சென்றவுடன் என்னை யார் என்ன உறவு என்று விசாரிக்காமல் உன்னைத் தேடி உனக்குத் தெரிந்தவர் வந்திருக்கின்றார் என்று கூறிய படியே திரும்பவும் படுத்துக் கொண்டார்.
மறு அறையிலிருந்து வந்த அவள் என்னைப் பார்த்ததும் வாங்க. என்ன போன மாதம் உங்க வீட்டுக்குச் சென்று வந்தீர்களா என்று கேட்டாள். நானும் ஆமாம் என்றேன். யார் யார் இருந்தார்கள்.
நான் போன சமயம் என்னுடைய தாயார் மட்டும் இருந்தார்கள். அத்தையைத் தவிர வேறு யாரும் இல்லையா எனக் கேட்க நானும் ஆம் என்று சொன்னேன். எவ்வளவு நேரம் இருந்தீர்கள் என்று கேட்டாள். மிகவும் கொஞ்ச நேரம் தான். அரசாங்க வாகனத்தில் சென்ற காரணத்தால் டிரைவரைக் காக்க வைக்க வேண்டியிருக்கும் என்பதனால் காலை சிற்றுண்டி முடித்தவுடன் மொத்தத்தில் சுமார் 15 நிமிடங்களில் திரும்பி விட்டேன் என்று சொன்னேன். மாலையில் செல்லவில்லையா எனக் கேட்க மாலையில் ஊருக்கு கிழம்பி விட்டேன் என்று சொன்னேன்.
அதற்குப் பின்னர் உனது பெற்றோர் வாங்கியுள்ள சொந்த வீடு எப்படி இருக்கின்றது எனக் கேட்டாள்.
அந்த வீட்டின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருக்கின்றது. அந்த சம்பவம் உன்னைப் பார்ப்பதற்கு முன்னர் நடந்தது. நீயும் நானும் சேர்ந்து வாழ முடியாத அந்த வீட்டைப் பற்றி நீ கருவினைச் சுமக்கும் சமயம் சொல்ல மாட்டேன். கட்டாயம் பிரசவத்திற்குப் பின்னர் நானாகவே சொல்கின்றேன. இப்போது வேண்டாம் எனக் கூறினேன். நான் எது சொன்னாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் என்பதனை நன்றாக அறிந்து வைத்திருக்கும் அவள் சரி என்று ஒப்புக் கொண்டாள். அது பற்றி மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
அதே சமயம் அவளது கணவரைப் பற்றி சைகையாக விசாரித்தமைக்கு அவர் குடித்து வைத்திருந்த பாட்டிலைக் காண்பித்தாள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
அதற்கு ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்டாள். இதற்கு மேல் இங்கு இருந்து நாம் இருவரும் பேசினால் அவருக்கு உன் மீது கோபம் வந்து விடும் எனவே இன்னொரு நாள் வருகின்றேன் என்று சொல்லி திரும்பி விட்டேன்.
அதற்கு அடுத்த மாதம் மீண்டும் அவளைப் பார்க்கச் சென்ற சமயம் அவளது கணவர் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவளிடம் உன்னைப் பார்க்க உனக்கு வேண்டியவர் வந்திருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டே வெளியே போய் விட்டார்.
முதல் முறை பார்த்த சமயம் யாரோ ஒருவர் வந்திருக்கின்றார் எனக்கூறி அவளை சங்கடத்தில் ஆழ்த்தினார். இரண்டாம் முறை பார்த்த சமயம் உனக்கு தெரிந்தவர் வந்திருக்கின்றார் என்று சொன்னார். இப்போது மூன்றாவது முறை அவளைப் பார்க்க அவளது கணவர் இருக்கும் போது செல்கையில் உன்னைப் பார்க்க உனக்கு வேண்டியவர் வந்திருக்கின்றார் என்று சொல்லிச் செல்கின்றாரே என்று எனக்கு சிறிய சந்தேகம் ஏற்பட்டது.
அவர் வெளியே சென்றவுடன் அவளிடம் இதுபற்றி கேட்டேன். எனது தாயார் வந்து சென்றார். வேறு விவரம் எதுவும் எனக்குத் தெரியாது என்று பதில் வந்தது. நான், நமது நெருக்கம் பற்றி உனது தாயார் அவரிடம் ஏதேனும் கூறியிருப்பாரோ என்று கேட்டேன். அந்த அளவிற்கு தைரியம் எனது தாயாருக்கு இல்லை. ஏனெனில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் வாழாவெட்டியாக நான் திரும்பினால் எனக்கும் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கும் சோறு போடக்கூடிய வசதி என் தாயிடம் இல்லை என்று கூறினாள்.
அப்போது அவளுக்கு ஐந்து மாதம் என்பதனால் கர்ப்பிணிகளுக்கு தேவையான ருசியான உணவுப் பொருட்களை கொண்டு சென்றேன். அந்த சீசனில் மாங்காய் கிடைக்காத படியால் வெயிலில் காயவைக்கப்பட்ட வடு மாங்காய் கொண்டு சென்றேன். அவளுக்கு மிகவும் சந்தோஷம்.
வளை காப்பு ஐந்தாம் மாதம் வைக்க வேண்டுமே எப்போது என்றேன்.
அவருக்கு அதில் விரும்பம் இல்லை. ஏனெனில் பணம் காசு செலவாகி விடும். எனது தாயாரிடம் அந்த அளவிற்கு வசதி இல்லை.
இது வரை பிரசவ தேதி எப்போது என்பதனைக் கூட எனக்கு தாலி கட்டியவரும் கேட்கவில்லை. எனது தாயாரும் கண்டு கொள்ளவில்லை. நானே எல்லா வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்து களைப்படைய வேண்டியிருக்கின்றது. நீங்கள் வரும் சமயம் மாத்திரம் எனக்கு சந்தோஷம். மற்ற நேரங்களில் ஒரே சோகம் தான் என்று சொன்னாள்.
சரி வளைகாப்பு எப்போது என்று எனக்கு போன் செய்து சொல்கின்றாயா என்று கேட்டேன்.
எனது வீட்டில் நடக்கும் அனைத்து சுப காரியங்களுக்கும் உங்களுடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுப்பேன். அழைப்பிதழ்களையும் கொடுப்பேன். ஆனால் விசேஷ நாளன்று உங்களை நான் எதிர் பார்க்க மாட்டேன் என்று சொன்னாள்.
அதற்கு அவள் சொன்ன காரணம்.
நான் எனது மகளது பெயர் சூட்டு விழாவிற்கோ, காது குத்து வைபவத்திற்கோ அல்லது திருமணத்திற்கோ அழைத்து நீங்கள் வந்திருந்தால் என் மகளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் கன்னிகாதானம் செய்வதற்கும் தங்கள் அருகில் அமர முடியவில்லையே என்ற ஏக்கத்தினால் நான் கவலைப்படுவேன். அதே போல உங்கள் வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு வந்து நான் கலந்து கொள்ளும் சமயம் நானும் நீங்களும் ஹோமத்தில் உட்கார்ந்து செய்ய வேண்டியவை என்னால் செய்ய முடியவில்லை என்று கவலைப் படுவேன். உங்களுக்கும் அது போன்ற எண்ணங்கள் கட்டாயம் வரும். எனவே உங்கள் ஆலோசனைகள் இல்லாமல் எனது வீட்டில் எந்த ஒரு சுப காரியங்களும் நடக்காது. அதே போல உங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்களை கட்டாயம் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் ஆனால் கலந்து கொள்ள மாட்டேன் என்பாள்.
அதன்படி எனது வீட்டில் வருகின்ற எந்த ஒரு விசேஷத்திற்கும் அவள் கலந்து கொள்ள மாட்டாள். அதே போல அவளது வீட்டில் வருகின்ற எந்த ஒரு விசேஷத்திலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். ஆனால் அதற்கு உண்டான ஆலோசனைகள் அனைத்தும் நம் இருவருக்கும் இடையே மட்டும் தான் நடக்கும். முடிவுகளை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் எடுப்போம். அழைப்பிதழ்கள் பரிமாறிக் கொள்வோம். ஆனால் விசேஷத்தில் மாத்திரம் கலந்து கொள்வதில்லை என்னும் ஒரு ஆழமான முடிவு எடுத்தமையால் நமது உறவு முறிந்து விட்டது என அனைவரும் நினைப்பார்கள்.
ஆனால் இரண்டு காந்தங்களின் வட துருவமும் தென் துருவமும் எப்படி ஆகர்ஷண சக்தியால் ஒட்டி விடுகின்றதோ அது போல நாம் இருவரும் ஒற்றுமையாகவே இருப்போம்.