முதலாவது பரிசு
சிறிது நேரத்தில் அவள் அவளது வீட்டைவிட்டு என்னிடத்தில் பேச ஆவலுடன் வந்தாள்.
நானாகவே பேச்சினை ஆரம்பித்தேன்.
என்ன சொந்தக் காரர்கள் வீட்டில் ஏதாவது விசேஷமா? சர்வ அலங்காரத்துடன் திருஷ்டி படும் அளவில் அலங்கரித்துச் சென்று வந்ததை பார்த்து வியந்து போனேன்.
சொந்தக் காரர்கள் வீட்டில் விசேஷம் ஒன்றும் இல்லை. எனக்காகத் தான் வெளியில் சென்று வந்தோம்.
புரியவில்லை.
அடுத்த வாரத்தில் எனக்கு பிறந்த நாள் வருகின்றது. அதற்காக என் அம்மா எனக்கு ஏதேனும் நகை வாங்க வேண்டும் என்றார்கள். ஆனால் நான் எனக்கு இப்போதைக்கு எந்த நகையும் வேண்டாம் ஏதேனும் ஆடைகள் வாங்கித் தந்தால் போதும் என்று சொல்லி ரெடிமேட் ஆடைகள் மாத்திரம் வாங்கி வந்தோம்.
சரி நாளை காலையில் நான் உனக்கு ஏதேனும் ஒரு பரிசுப்பொருள் உனது விருப்பத்திற்கேற்ப வாங்கித்தர உன்னை அழைத்துச் செல்ல நினைக்கின்றேன். நாளை காலையில் செல்வோமா அல்லது இன்றைய தினமே மாலையில் செல்வோமா?
இன்று வேண்டாம். நாளை நான் எனது உறவினர்கள் யாராவது வீட்டிற்குச் செல்வதாக கூறி வருகின்றேன் முதலில் நாம் இருவரும் சேர்ந்து சென்று பரிசுப் பொருள் வாங்கிய பின்னர் நான் என் உறவினர் வீட்டிற்குச் செல்கின்றேன். சரிதானே!
மறு நாள் காலை அவள் வீட்டை விட்டு வெளியே புறப்பட்ட சிறிது நேரத்தில் நானும் வெளியே வந்து சிறிது தூரம் கடந்த பின்னர் ஒன்றாகச் சேர்ந்து கடைத்தெருவிற்குள் நுழைந்தோம். அவளது தாயார் நகை வாங்கிக் கொடுப்பேன் என்பதற்கு மறுப்புக்கூறியதால் என்னிடம் என்ன சொல்வாளோ என்ற எண்ணத்தில் நானும் சற்று தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்தேன்.
இந்த நகைக் கடையில் டிசைன்கள் அழகாக இருக்கும். அந்த கடையில் டிசைன்கள் புது வரவாக இருக்கும். அந்த கடையில் நகைகளின் தரம் மாற்றுக்குறையாமல் இருக்கும் எங்கு செல்லலாம்.
புன்னகை ஒன்றே போதும் பொன்னகை வேண்டாம். நேற்று என்னுடைய அம்மா எனக்கு நகை வாங்கிக் கொடுக்கின்றேன் என்று கூறிய சமயம் வேண்டாம் என்று சொன்னேன். காரணம் எனக்கு நகை வாங்க ஆரம்பித்தால் உடனே எனது கல்யாணத்திற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்து விடுவார்கள். எனவே தான் அம்மாவிடம் நகை வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் நீங்கள் முதல் முதலாக பிறந்த நாள் பரிசாக ஏதேனும் நகை வாங்கிக் கொடுக்கின்றேன் என்று கூறும் சமயம் நான் மறுத்தால் உங்கள் மனது வேதனைப்படும் எனவே சம்மதம். அத்துடன் ஆடைகள் நான் கேட்டு நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்களேயானால் பிறந்த நாளன்று அணிவதில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்களுக்கா அல்லது எனது அம்மாவுக்கா என்ற பிரச்சினை எனக்கு வரும்.
சரி எங்கு செல்லலாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கும் சமயம் அவள் எந்த உறவினர் வீட்டுக்குச் செல்கின்றேன் எனச் சொல்லி வந்தாளோ அந்த உறவினர்கள் அந்த தெருவில் இருந்தார்கள். இருந்தாலும் அந்த உறவினர்கள் நம் இருவரையும் கவனிக்கவில்லை. அவர்களது கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக உடனே ஒரு நகை கடையில் புகுந்து விட்டோம்.
சரி உனக்கு என்ன வேண்டும் ஒரு மோதிரம் வாங்கித் தரட்டுமா?
இல்லை மோதிரம் வேண்டாம். நம் திருமணத்தின் சமயம் கழுத்திலே தாலியும் கையிலே மோதிரமும் காலிலே மெட்டியும் போடுவதற்கு முன்னர் மோதிரம் வேண்டாம்.
கடையில் நகைகள் காண்பிக்கும் விற்பனையாளர் தாமாக நம்மிடம் பேசினார்.
உங்களது எதிர்காலம் இனிமையானதாக அமைய எனது இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள். உங்களது சொந்த விஷயத்தில் நான் சற்று தலையிடலாமா என்றார்.
அவள் அவரிடம் சரி என்றாள்.
நீங்கள் யார் எந்த ஊர் எதுவும் எனக்குத் தெரியாது இருந்தாலும் உங்களது எதிர்காலத்தைப்பற்றிய எண்ணங்கள் கற்பனைகள் சிந்தனைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
ஒரு பெண்ணுக்கு வளையல் அண்ணன் தான் போட வேண்டும். திருமணத்தின் போது மோதிரம் மெட்டி தாலி ஆகியவற்றை கணவன் தான் அணிவிக்க வேண்டும். எனவே நான் சொல்லும் ஒரு பரிசுப் பொருளை வாங்கித் தாருங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது வயது அனுபவம் எங்களுக்கு முன்பின் தெரியாத அவர் எங்களுக்கு நல்வாழ்த்துக் கூறிய விதம் நமக்குப் பிடித்திருந்ததது என்பதால் அவர் பேச்சினைக் கேட்பது என முடிவு செய்தோம்.
ஒரு டாலர் காண்பித்தார். அந்த டாலரில் கிருஷ்ணன் ஆலிலையில் படுத்துக் கொண்டு தனது வலது காலை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு வலது கால் கட்டை விரலை வாயில் வைத்து சூப்பிக் கொண்டு இருந்தார்.
பரிசுப் பொருள் நம் இருவருக்கும் பிடித்து விட்டது. இருந்தாலும் அவளுக்கு ஒரு சிறு தயக்கம் கடவுள் உருவமாக இருப்பதால் குறிப்பிட்ட நாட்களில் அதனை கழற்றி வைக்க நேரிடுமே என்னும் கவலையை எனது காதில் ரகசியமாக கூறினாள்.
அதற்குள் அந்த கடை விற்பனையாளர் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். பெருமாள் தசாவதாரம் என்னும் பெயரில் ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் பொழுதும் லெட்சுமியைப் பிரிய நேரிடுகின்றது என லெட்சுமி வருத்தப்பட்டதற்கு பெருமாள் நான் அடுத்து எடுக்கப்போவது கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரத்தில் நான் மழலைக் குழந்தையாக இருக்கும் சமயம் லெட்சுமியான நீ எனது வலது கால் கட்டை விரலில் வந்து விட்டால் குழந்தைப் பருவத்தில் நான் எனது வலது கால் கட்டை விரலினை இரண்டு கைகளால் பிடித்து வாயில் வைக்கும் சமயம் நான் லெட்சுமியான உன்னை இரண்டு கைகளால் அணைத்து முத்தமிடுவதாக அமையும். அதுவே கிருஷ்ணாவதாரத்தில் நான் உனக்கு கொடுக்கும் முதல் முத்தமாக இருக்கும் என்று கூறியதாக ஐதீகம். எனவே இந்த டாலரை பரிசாக கொடுப்பீர்களேயானால் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக சோந்து வாழ்வீர்கள் என்று கூறி ஆசீர்வதித்தார்.
அவரது விளக்கம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த டாலருககு பில் போடுமாறு கூறி விட்டு அதற்கான பணத்தினைச் செலுத்தும் சமயம் கடை உரிமையாளர் திருமணத் தடைகள் விலக இந்த டாலர் அதிகம் வாங்கிச் செல்கின்றனர் என்ற அடுத்த உண்மையை கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.
நகைக் கடையில் கிருஷ்ணன் டாலர் வாங்கியவுடன் நாம் இருவரும் திரும்ப வீட்டுக்கே வந்து விட்டோம். அவள் உறவினர் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்ற அந்த உறவினர் வீட்டில் இல்லாததால் திரும்ப வந்து விட்டதாகக் கூறி அவளது தாயாரை சமாதானப்படுத்தினாள்.
கிருஷ்ணன் உருவம் பதித்த அந்த டாலரை நான் வாங்கி நமது சந்திப்பிற்குப் பின்னர் அவளுக்கு வந்த முதல் பிறந்த நாளன்று அந்த டாலரை அவளுக்கு அணிவித்து பிறந்த நாளை கொண்டாடினோம்.
நான் அன்பாக ஆசையாக பரிசளித்த அந்த டாலர் என்னை விட முன்னதாக அவளது நெஞ்சைத் தொட்டுவிட்டது. இரவு பகல் எல்லா நேரங்களிலும் அவளது நெஞ்சத்தில் அந்த டாலர் தவழ்ந்து விளையாடி சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகின்றது. ஆனால் நான் தான் காத்திருக்க வேண்டியிருக்கின்றது.