பெண் பார்க்கும் படலம்
எனது தேவதையின் குட்டி தேவதையைப் பார்த்ததிலிருந்து மீண்டும் அவள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவளைப் பார்க்க வேண்டும். அந்தக் குழந்தையுடன் கொஞ்சி விளையாட வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு மென்மேலும் வளர ஆரம்பித்தது. இருந்த போதிலும் நினைத்த நேரத்தில் நான் சென்று பார்த்து வர முடியாத அன்னிய நபராக அவளை எனது வீட்டார் பிரித்து விட்டார்கள் என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் மன வேதனையாகவும் என் வீட்டார் மீதும் அவளது தாயார் மீதும் கோபமாகவும் இருக்கின்றது. என்னால் எதுவும் சொல்லிக் கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே அவள் கேட்டுக் கொண்டபடி மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று தான் அவளைப் பார்க்க மறுபடியும் செல்ல முடியும். அதற்காக நானும் காத்திருந்து அடுத்த மாதம் அவளைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்றேன். அவள் வீட்டில் இல்லை. கீழே உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவள் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றுள்ளதாக தெரியவந்தது. மிகுந்த ஏமாற்றத்துடன் நான் எனது இருப்பிடம் திரும்பினேன்.
அடுத்த விடுமுறை நாள் வரை காத்திருக்க என்னால் முடியவில்லை. அலுவலகத்தில் அலுவல் நேரம் முடிந்தவுடன் நேரடியாக அவளது வீட்டிற்குச் சென்றேன். அப்போதும் கூட அவளும் அவளது குழந்தையும் மட்டும் தான் இருந்தனர்.
நான் சென்றவுடன் எனது இதயம் அவளை நாடியது. என் கண்கள் அவள் குழந்தையைத் தேடின. உடனே அதனைப் புரிந்து கொண்ட அவள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.
ஞாயிற்றுக் கிழமையன்று வந்து ஏமாற்றத்துடன் திரும்பியது பற்றி கூறியவுடன் கீழே குடியிருப்பவர்கள் தெரிவித்து விட்டதாக கூறினாள். ஞாயிற்றுக் கிழமையன்று கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றனர். மற்றொரு நாள் செல்லலாம் என்பதனை ஏற்க மறுத்த காரணத்தால் அன்றைக்கே செல்ல வேண்டும் என்று சென்று வந்தோம்.
கோயிலுக்குச் சென்ற போதும் கூட உங்கள் நினைப்பு தான். கோயில்களில் உங்களுடன் தரிசனம் செய்த ஞாபகங்கள் என்னை வாட்டி வதைக்கின்றன. கோயில் வாசலிலே நீங்கள் மல்லிகை பூ வாங்கி கொடுப்பீர்கள். நானும் மல்லிகை மொட்டுக்கள் உள்ளனவாக பார்த்து வாங்கிக் கொள்வேன். உடனே நீங்கள் மலர்ந்த பூக்கள் என்ன பாவம் செய்தன என்பீர்கள். திருமணம் ஆகும் வரை நான் கன்னியாக இருப்பதினால் மலர் மொட்டுக்களால் தொடுக்கப்பட்ட பூ தான் நம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் வரை வேண்டும் என்று கூறி வாங்கிக் கொள்வேன். அவர் பூ கூட வாங்கிக் கொடுக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் குழந்தையை நான் மட்டுமே என் வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து மறுபடியம் வீடு திரும்பும் வரை எனது கரங்களில் ஏந்தி சென்று வர வேண்டியிருந்தது. அவர் குழந்தையை கையால் கூட தொடவில்லை.
நான் உங்களை திருமணம் செய்திருந்தால் நிச்சயம் நமது குழந்தையை தாங்கள் தான் தோளில் வைத்து வந்திருப்பீர்கள். நானும் உங்கள் கரம் பிடித்து கோயிலில் சந்தோஷமாக வலம் வந்திருப்பேன். கோயில் குளக்கரையில் குழந்தை ஒரு தோளில் சாய்ந்திருக்க நானும் மறு தோளில் சாய்ந்து மூவரும் சந்தோஷமாக இருந்திருப்போம் என்பதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு ஏன் இந்த போலி வாழ்க்கை என்று வெறுப்பு தோன்றுகின்றது என்றாள்.
என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகளிலும் நான் உங்களுடன் பழகிய அந்த இனிமையான நாட்கள் வந்து என்னை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. நானும் நீங்களும் இனிமையாகப் பழகிய அந்த நாட்கள் எனது ஞாபகத்தில் வந்து சுகமான சோகங்களைத் தந்து வாட்டிக் கொண்டே இருக்கின்றன. என்னால் அவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை மறக்கவும் முடியாது என்று மிகவும் வருத்தப்பட்டாள்.
வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்க வேண்டும் என்று மனக் கோட்டை கட்டியிருந்த நம் இருவரையும் மாதத்தில் ஒரு நாள் அதுவும் மிகவும் குறைந்த காலம் சந்திக்கக் கூடிய அவல நிலைக்கு தள்ளி விட்டதற்கு நம் இருவரது பெற்றோர் தான் காரணம் என்பதனை நினைத்து நாம் இருவரும் வேதனைப் பட்டோம்.
அவளாகவே கேட்க ஆரம்பித்தாள். சொந்த ஊர் சென்று வந்தீர்களா. பெண் பார்க்கும் படலம் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது. விரைவில் திருமணப் பத்திரிக்கை கொடுத்து விடுவீர்களா என்று கேட்டாள்.
அதற்கு நான் எனக்கு திருமணம் நடைபெறுவது சற்று கஷ்டமாக இருக்கும் போலிருக்கின்றது என்றேன். காரணம் கேட்டாள்.
நீயும் நானும் சேர்ந்து வலம் வராத தெருக்களே இல்லை. வழிபடாத கோயில்களே இல்லை. நம் இருவரைப் பற்றியும் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் பற்றியும் நமது ஊரில் உள்ள பாதி நபர்களுக்கு தெரிந்து இருக்கின்றது. அதுவும் தவிர எனது தந்தையின் எதிர்பார்ப்பின்படி எனக்கு திருமணப் பெண் அமைவது சற்று சிரமம் தான் என்றேன். என்ன காரணம் என்றாள்.
எனது பெற்றோர் எனக்கு வரப் போகும் பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை சுருக்கமாகச் சொல்கின்றேன்.
இருவருடைய ஜாதகங்களிலும் குறைந்தது எட்டுக்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருக்க வேண்டும்.
வீட்டிற்கு வரப் போகும் பெண்ணின் ஜாதகப்படி வேறு எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது. அதே போல யாருடைய உடல் நிலையும் பாதிக்கப்படக் கூடாது.
வருகின்ற மணப்பெண் குடும்பத்தார் வசதியானவர்களாக இருக்க வேண்டும். அந்தஸ்து உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
நகைகள் நிறைய போட்டுக் கொண்டு சீர் வரிசைகள் நிறைய கொண்டு வர வேண்டும்.
இவ்வளவையும் எதிர் பார்க்கும் என் வீட்டார் பெண் உன் அளவிற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதனையோ ஓரளவிற்காவது படித்திருக்க வேண்டும் என்பதனையோ எதிர்பார்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனது விருப்பம் என்ன என்பதனை இதுவரை கேட்கவில்லை.
எல்லாம் சரி. அத்தை என்னிடம் பேசி விட்டுச் சென்று ஏறக்குறைய ஒரு வருடம் ஆகப் போகின்றது. இது வரைக்கும் ஏதாவது ஒரு பெண்ணையாவது கொண்டு போய்க் காட்டினார்களா என்று கேட்டாள். எனது தாயார் உன்னிடம் பேசிச் சென்று ஒரு வருட காலம் ஆன போதிலும் நான் பெண் பார்க்க ஆரம்பிக்கலாம் என்று சொல்லி ஒரு மாதம் தான் ஆகின்றது. இந்த ஒரு மாத காலத்தில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் காண்பித்தார்கள்.
பெண் பிடித்திருக்கின்றதா என்று கேட்டாள்.
உன்னுடன் பல வருடங்கள் பழகிய எனக்கு உன்னைப் போன்றே அழகான இனிமையான தோற்றம் கொண்ட என்னைக் கவரக் கூடிய அளவில் பெண் எனக்கு கிடைக்க வேண்டும் என்னும் ஆசை நிறைய இருக்கும். வரப் போகும் பெண்ணின் குணநலன்கள் மற்றவை எல்லாம் திருமணத்திற்குப் பிறகு தான் தெரியவரும். எனவே உன் அளவிற்கு அழகான பெண் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உன்னையும் என்னையும் சேர்த்துப் பார்த்த எனது நண்பர்கள் மற்றும் எனது உறவினர்கள் என்னை கேலி செய்யும் அளவிற்கு வரப் போகும் பெண் இருக்கக் கூடாது என்பது தான் எனது எதிர்பார்ப்பு என்றேன்.
சரி ஒரு பெண்ணைக் கூட பார்க்கவில்லையா என்று மீண்டும் கேட்டாள்.
சென்ற வாரம் சொந்த ஊர் சென்ற சமயம் ஒரே ஒரு பெண்ணை மாத்திரம் காண்பித்தார்கள். அந்த பெண் வீட்டாரும் எனது வீட்டாரும் நான் மழலையாக தவளும் காலத்தில் நீயும் நானும் இருந்தது போல ஒரே காம்பவுண்டில் குடியிருந்தவர்களாம். எனவே பெண்ணின் தாயார் என்னைப் பார்த்ததும் என்னை பெயர் சொல்லி அழைத்து குழந்தைப் பருவத்திலேயே என் மகளைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னவன் இப்போது வேண்டாம் என்று சொல்லவா போகின்றான் என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்டது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும் நெருக்கமாகவும் இருந்தது. அந்தப் பெண்ணின் கண்களின் நிறம் கருமை நிறத்திலிருந்து வித்தியாசமானவை.
உன்னைப் போலவே எனக்கு பெண் வேண்டும் என்று சொல்லி காலம் கடத்தி கடைசியில் ஏமாற்றம் அடைவதைக் காட்டிலும் பெண் வீட்டாருடைய ஆசை மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்த பெண்ணை முடிவு செய்து விடுமாறு என் பெற்றோரிடத்தில் கூறினேன். எனது பெற்றோர் உடனடியாக என்னிடம் எந்த பதிலும் சொல்லவில்லை.
மாலையில் என்னைப் பார்க்க பெண் வீட்டார் வந்து சென்றனர்.
நானும் விரைவில் திருமணம் நடந்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நகைகள் அதிகம் போட வேண்டும் என்றும் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் மூன்று மாத காலம் தான் வித்தியாசம் இருக்கின்றது என்று கூறி அந்தப் பெண்ணை நிராகரித்து விட்டார்கள். அதனால் தான் உன்னிடம் அது பற்றி பேச சங்கடமாக இருந்தது என்றேன்.
என் கவனத்தை திசை திருப்ப நான் கர்ப்பமாக இருக்கம் சமயம் உங்கள் பெற்றோர் வாங்கி குடியேறியுள்ள புது வீடு பற்றிக் கேட்டேன். குழந்தை பிறந்த பின்னர் சொல்கின்றேன் என்று சொல்லி விட்டீர்கள். அப்போதிலிருந்து அது பற்றி அறிய வேண்டும் என்று எனக்கு ஆர்வம் அடுத்த முறை வரும் சமயம் நான் மறந்தாலும் நீங்கள் கட்டாயம் ஞாபகப்படுத்திச் சொல்ல வேண்டும் என்று கூறினாள். நானும் சரியென்று சொன்னேன்
அந்த சமயம் கீழே இருந்த வீட்டில் குடியிருப்போரைப் பார்க்க வந்த எனது நண்பர் மேலே நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார். அவள் என்னிடம் இருந்த குழந்தையை பெற்றுக் கொண்டாள்.
அவளது வீட்டில் நான் இருந்தது எப்படி என்பது அவனுக்குத் தெரியாது. நீங்கள் இருவரும் இணை பிரியாத காதலர்களாக இருந்தது நம் நண்பர்கள் பட்டாளத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஆனால் நண்பர்கள் யாருக்கும் தெரியாமல் இப்படி திருமணம் செய்து கொண்டது எனக்கு வியப்பாக இருக்கின்றது என்றான். உடனே நமது வாழ்வில் ஏற்பட்ட காதல் தோல்வியினைப் பற்றி சுறுக்கமாகச் சொல்லி மேற்கொண்டு விவரங்களை அடுத்த முறை நேரில் பார்க்கும் போது சொல்வதாகவும் கூறி அனுப்பி வைத்தேன். அதன் மூலம் எங்கள் வாழ்வின் இரகசியம் கீழே குடியிருப்பவர்களுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு என பயந்தோம்.
இருந்தாலும் கீழே குடியிருந்தவர்கள் நம் கடந்த காலத்தைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. காரணம் எனது நண்பன் தன் உறவினர்களிடம் இந்த விஷயத்தை பெருந்தன்மையாக மறைத்தும் இருக்கலாம்.