தேவதைக்கு ஒரு குட்டி தேவதை
அவளுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்த நான் அந்த பெண் குழந்தையை பார்க்கச் செல்ல வேண்டும் என மிக ஆவலாக இருந்தேன்.
ஆனால் அவளின் தாயார் குழந்தை பிறந்த பின்னர் குறைந்தது ஒரு மாத காலம் அவளது வீட்டில் தங்கியிருந்து அவளை கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் தவிர குழந்தை 10 மாதங்கள் பூர்த்தி ஆவதற்கு முன்னமேயே பிறந்து விட்டதால் குறைப் பிரசவம் என்னும் காரணம் காட்டி மேற்கொண்டு சில காலமும் இருக்கலாம். அத்துடன் பிறந்துள்ள குழந்தையை பார்க்க அவர்களின் உறவினர்கள் அனைவரும் மாறி மாறி வந்து கொண்டிருப்பார்கள். எனவே உடனே சென்று குழந்தையை பார்ப்பது சரியல்ல என்று நினைத்து குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கழித்து சென்று பார்ப்பது என்று முடிவு செய்து காத்திருந்தேன்.
அதே போல குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவளையும் குழந்தையையும் பார்க்க அவளது வீட்டிற்குச் சென்றேன்.
எனது தேவதைக்குப் பிறந்துள்ள குட்டி தேவதைக்கு பரிசாக புத்தாடைகள் கொண்டு சென்றேன். எந்த வேளையிலும் மாறி மாறி போட்டுக் கொள்ளக் கூடிய காட்டன் ஆடைகள் 10 கொண்ட பல வித வண்ணங்களிலான செட் ஒன்றும், தேவதைக்குப் பிறந்தது தேவதையாகத் தான் இருக்கும் என்னும் எண்ணத்தில் அந்த குழந்தையை தேவதை போல் அழகு பார்க்க ஏஞ்சல் டிரஸ் ஒன்றும் வாங்கிச் சென்றேன்.
என்னைப் பார்த்தவுடன் என்றைக்கும் இல்லாத இன்முகத்துடன் அவள் வரவேற்றாள். எனக்குக் குழந்தை பிறந்தவுடன் என் மீதான அன்பு குறைந்து விட்டதா என்றும் என்னைப் பார்க்க வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்றும் கேட்டாள்.
சென்ற முறை வந்த சமயம் உனது தாயார் இருந்த படியால் அவர் பேசியது ஒரு மாதிரியாக இருந்தது. அத்துடன் பிறந்துள்ள குழந்தையை பார்க்க அனைத்து உறவினர்களும் வந்து செல்லும் சமயம் நான் நீண்ட நேரம் இருப்பது கஷ்டமாக இருக்கும் என்ற காரணத்தால் மெதுவாக சென்றாலும் மிகச் சந்தோஷமாக உன்னைச் சந்திக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்று கூறினேன்.
அதற்கு அவள் நீங்கள் சொல்வதும் சரிதான் எனது தாயார் நேற்று தான் திரும்பி சென்றார்கள் என்று கூறி மிகவும் சந்தோஷப் பட்டாள்.
அதன் பின்னர் தொட்டிலில் தூங்கியிருந்த குழந்தையை எடுத்து என்னிடத்தில் கொடுக்க வந்தாள். விழித்திருக்கும் போது உங்கள் நினைவாகவும் உறங்கியிருக்கும் போது உங்கள் கனவாகவும் இருந்து பிறந்த குழந்தை என்று கூறிக் கொண்டே என்னிடம் கொடுக்க முன் வந்தாள்.
நானும் குழந்தையை பெறுமுன்னர் என் தேவதைக்குப் பிறந்த குட்டி தேவதையை தேவதையின் ஆடையில் தான் பெற்றுக் கொள்வேன் என்று கூறி கொண்டு சென்றிருந்த புத்தாடைகளை அணிவித்து வருமாறு கூற அவளும் உடனே குழந்தைக்கு புத்தாடை அணிவித்து என்னிடம் கொடுத்தாள்.
அழகு தேவதைக்குப் பிறந்த குட்டி தேவதையை பெற்றுக் கொண்டு அந்த குழந்தையை என் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டேன்.
உடனே அவள் எனக்கு கிடைக்காதது என் குழந்தைக்குக் கிடைக்கின்றது (முத்தம் மற்றும் அரவணைப்பு). என்னால் கொடுக்க முடியாதது என் குழந்தையால் கொடுக்க முடிகின்றது (அரவணைப்பு மற்றும் ஆறுதல் மற்றும் சந்தோஷம்) என்னும் ஏக்கம் என் இதயத்தில் எப்போதும் இருந்து கொண்டு தானிருக்கும் என்று கூறினாள்.
அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண் விழித்தது.
உடனே அவள் இப்போது அழ ஆரம்பித்து விடுவாள் என்று கூறினாள்.
ஆச்சர்யம். என் கைகளில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து புன் முருவல் பூத்தது. அழவில்லை. அவளுக்கும் ஒரே ஆச்சர்யம். பிறந்ததிலிருந்து இது நாள் வரையில் பார்த்துக் கொண்டே மட்டும் இருந்த குழந்தை என்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்து அவளுக்கு ஒரே சந்தோஷம். இது வரை தூக்கத்தில் மாத்திரமே சிரித்துக் கொண்டிருந்த குழந்தை இப்போது தான் விழித்த பின்னர் சிரிக்க ஆரம்பித்து இருக்கின்றது. நீங்கள் வந்தால் நான் நான் சந்தோஷப் படுகின்றேன். குழந்தை கூட நீங்கள் வந்த பின்னர் தான் உங்கள் முகம் பார்த்து சிரிக்க ஆரம்பித்து இருக்கின்றது என்று கூறினாள்.
நீ என்னைப் பார்த்து சந்தோஷப் படுகின்றாய். அது நீ என் மீது வைத்துள்ள காதலின் வெளிப்பாடு. ஆனால் பிறந்த குழந்தை என் நிலையைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றது என்றும் கொள்ளலாமே என்றேன். உடனே அவள் சற்று கண் கலங்கினாள். இத்தனை நாள் கழித்து வந்து இன்று மீண்டும் அவளை கண் கலங்க வைத்து விட்டேனே என்று எனக்கும் கவலையாக இருந்தது.
நீங்களும் நானும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டிருந்தால் சீமந்தம் வளைகாப்பு மற்றும் குழந்தைக்குப் பெயர் சூட்டல் என்ற எந்த விசேஷங்களும் இல்லாமல் போயிருக்கும். ஆனால் எனக்கு என் தாயார் ஊரரிய திருமணம் செய்து வைத்தும் கூட இது போன்ற எந்த ஒரு விசேஷமும் நடை பெறவில்லை என்பதனை நினைக்கும் போது எனக்கு மிகவும் கவலையாக இருக்கின்றது.
எனவே நீங்களும் நானும் சேர்ந்து முடிவெடுத்தபடி குழந்தைக்கு எனது பெயரின் முதல் எழுத்தையும் உங்கள் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து விஜி என நாம் இருவரும் சேர்ந்து குழந்தையின் காதில் மூன்று முறை சொல்லலாமே என்றாள். குழந்தையின் முழுப் பெயர் விஜயலெட்சுமி என்று வைத்துக் கொள்ளலாம் என்றாள்.
அவளது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டு நாம் இருவரும் சேர்ந்து குழந்தையின் இரண்டு காதுகளுக்கும் அருகே சென்று விஜி விஜி விஜி என்று மூன்று முறை உச்சரித்து குழந்தைக்குப் பெயர் வைத்தோம். நாம் இருவரும் குழந்தையின் இரண்டு கன்னங்களில் ஒரே நேரத்தில் முத்தமிட்டோம். நம் இருவருக்கும் மிக்க சந்தோஷம்.
அவள் உடனே இன்று உங்கள் விருப்பம் போல சிற்றுண்டி தயார் செய்ய இருக்கின்றேன். என்ன செய்யலாம் என்றாள். நானும் குழந்தை பெற்ற பின்னர் நீ மிகவும் களைப்பாக இருப்பாய். இன்னும் மூன்று மாதங்கள் கட்டாயம் ஓய்வு தேவை. எனவே வழக்கம் போல் குடிப்பதற்கு ஏதேனும் கொடு போதும் என்றேன். உள்ளே சென்ற அவள் பழச் சாறு கொண்டு வந்தாள்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கின்றாயா என்று கேட்டேன். அதற்கு அவள் ஆமாம் என்றாள். அப்படியானால் எனக்கு சூடான பானம் வேண்டும் என்றேன். ஏன் என்று கேட்டாள். நான் குளிர்ச்சியாக சாப்பிட்டு அதில் பாதியை உனக்குக் கொடுத்து உனக்கு ஏதேனும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் தாய்ப்பால் குடிக்கும் என் குட்டி தேவதை கஷ்டப்படும் எனவே சூடான பானங்கள் தான் எனக்கு கொடுக்க வேண்டும் என் குட்டி தேவதை தாய்ப்பால் குடிக்கும் வரை என்று கூறினேன்.
உடனே அவள் என் மீதுள்ள காதல் குறைந்து குழந்தை மீது அன்பு அதிகரிக்கின்றது தானே என்று கேட்டாள். அதற்கு நான் இது வரை நான் உனக்காக மட்டும் தான் வருத்தப் பட்டேன் இனிமேல் குழந்தைக்கும் சேர்த்து வருத்தப் பட வேண்டும் அல்லவா என்றேன். அதுவும் சரி தான் என்றாள்.
அப்போது குழந்தையின் ஆடைகள் மற்றும் எனது ஆடைகள் ஈரமாகி விட்டன. உடனே அவள் குழந்தையை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு வேறு ஆடைகள் போட்டுக் கொடுக்கின்றேன் என்றாள். அந்த ஆடைகளும் கொண்டு வந்துள்ளேன் என்று கூறியவுடன் அவற்றில் நம் இருவருக்கும் பிடித்தமான இளமஞ்சள் நிற ஆடை ஒன்றை உடுத்தி மீண்டும் என்னிடம் கொடுத்தாள்.
அப்போது சென்ற முறை உங்கள் தாயார் என்னிடம் கேட்டுக் கொண்டபடி நீங்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் பெற்றோர் விருப்பப்படி திருமணம் முடிக்க வேண்டும் என்றாள். தொடர்ந்து நானும் நீங்களும் எப்படி எல்லாம் காதலித்தோமோ எப்படி எல்லாம் தற்போது வரை உடலுறவு என்பது தவிர வேறு அனைத்திலும் இண பிரியாது இருக்கின்றோமோ இதய பூர்வமான அன்புடன் இருக்கின்றோமோ அதுபோல தங்களுக்கோ அல்லது எனக்கோ கட்டாயம் வாழ்க்கைத் துணை அமையாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதே சமயம் என் நினைவாக நீங்கள் திருமணத்தை தவிர்த்தால் நமது புனிதமான இதயபூர்வமானதான காதல் நம்மிடையே குறைய வாய்ப்புண்டு. நம்மிடையே விரிசலையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே கட்டாயம் தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றாள்.
அதற்கு நான் சென்ற முறை வீட்டிற்கு (அதாவது போன மாதம்) சென்ற சமயம் என் பெற்றோர் என்னிடம் கேட்டார்கள் நான் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். இப்போது உன்னுடைய வற்புறுத்தலுக்காக அடுத்த முறை செல்லும் சமயம் எனது திருமணத்திற்கான சம்மதத்தினை தெரிவித்து வந்து விடுகின்றேன் என்று கூறினேன்.
உடனே அவள் உங்களுக்கு திருமணம் நடந்தாலும் கூட நான் உங்கள் மீது செலுத்தும் அன்பு மாறாது அதே போல நான் உங்களை நினைத்து காத்திருக்கும் காதலி என்பதை மறந்து விடக் கூடாது நமது அன்பு குறையக் கூடாது என்று வேண்டினாள்.
இஷ்டப்பட்டோ அல்லது இஷ்டப்படாமலோ பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு உறவினர் சுற்றம் நண்பர்கள் நல்லாசியுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் வீடு புகுந்த வீடு. அதில் மனப்பூர்வமான அன்பு அரவணைப்பு பந்தம் பாசம் முழு அளவில் இருக்கும் அல்லது இருக்காது என்பதனை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரே வீட்டில் வாழ்ந்து ஒரே கட்டிலில் உறங்கினாலும் கூட அவர்களுக்கு இடையே நிலையான அன்பு மற்றும் பாசம் மற்றும் அக்கறை இருக்காது. ஏதோ ஒரு வகையில் பிறரைப் பார்த்து அவர்கள் போல நம்மால் அன்பு செலுத்தி ஒற்றுமையாக இருக்க முடியவில்லையே என்னும் ஏக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும்
உறவினர், சுற்றம், நண்பர்கள் நல்லாசி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. பெற்றோர்களின் சம்மதம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. உண்மையான அன்பு மற்றும் உண்மையான காதல் இரு இதயங்களுக்கிடையே ஏற்பட்டு விட்டால் அவை திருமணம் என்னும் உறவில் நிறைவடையாவிட்டாலும் கூட அந்த இரண்டு இதயங்கள் கொண்ட நபர்களின் நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கும். அவ்வாறான அன்பு காதல், பந்தம், பாசம், உரிமை இல்லாவிட்டாலும் கூட கடைசி மூச்சு இருக்கும் வரை மனப்பூர்வமாக காதலித்த இருவர் உள்ளத்திலும் உளப்பூர்வமானதாக இருக்கும். அது தான் புகுந்த இதயம். அவ்வாறான அன்பு ஒவ்வொருவருக்கும் தமது வாழ்வில் எவ்வளவு ஏற்றங்கள் வந்தாலும் இறக்கங்கள் வந்தாலும் எவ்வளவு வசதிகள் வந்தாலும் இழப்புகள் வந்தாலும் எத்தனை உறவுகள் வந்தாலும் எத்தனை உறவுகள் பிரிந்தாலும் அவற்றை எல்லாம் மீறி ஒவ்வொருவர் இதயத்தையும் வருடிக் கொண்டே தான் இருக்கும். அது தான் உண்மைக் காதல்.
அவ்வாறான உண்மைக் காதல் நம் இருவருக்கும் இடையே இருக்கின்ற காரணத்தால் அவளுக்கு குழந்தை பிறந்த பின்னரும் கூட நம் இருவருக்கிடையே இருக்கின்ற உளப்பூர்வமான நெருக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.