பெற்றோர் சொந்த வீடு
நாம் விரும்பிய ஒரு பொருள் நமக்கு கிடைக்கவில்லை என்றால் நமக்கு அந்தப் பொருளின் மீது ஒரு நாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நாம் விரும்பிய ஒரு எதிர் பாலினம் நம்மை விரும்புமானால் அந்த எதிர் பாலினம் மீது நாம் இறுதிப் பயணம் மேற்கொள்ளும் காலம் வரும் வரை ஈர்ப்புச் சக்தி இருந்து கொண்டே தான் இருக்கும். உறவுகள் பிரிந்தாலும் உள்ளங்கள் பிரியாது. இடைவெளிகள் எவ்வளவு ஏற்பட்டாலும் இதயங்கள் நெருக்கத்தில் தான் இருக்கும். அது தான் காதல்.
அவளுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன போதிலும் நம் இருவருக்கிடையே உள்ள நினைவலைகள் அவளை முதன் முதலாக நானும், என்னை முதன் முதலாக அவளும் பார்த்து எப்போது அறிமுகம் ஆகிக் கொண்டோமோ, நானும் அவளும் எப்போது அன்பு செலுத்த ஆரம்பித்தோமோ அந்த கால கட்டத்திற்கு பின்னோக்கி செல்கின்றது.
நம் இருவருக்குமிடையே ஒன்று சேர முடியாத அளவிற்கு உறவில் விரிசல் ஏற்பட்ட போதிலும் நம் இருவர் இதயங்களிலும் ஒற்றுமை குறையவில்லை. நான் அவளைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று ஏங்குவது போல் நான் அவளைப் பார்க்க வர வேண்டும் (அவளால் என்னைத் தேடி வர முடியாது) என்று அவள் ஏங்குகின்றாள். இருவருக்கும் ஒரே மாதிரியான ஏக்கம்.
அடுத்த முறை அவளை ஏக்கமுடன் பார்க்கச் சென்ற சமயம் அவள் வழி மீது விழி வைத்துக் காத்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் ஒரே சந்தோஷம்.
வீட்டிற்குள் சென்று அமர்ந்தவுடன் அவள் குழந்தையை என்னிடம் கொடுத்தாள். நான் அன்புடன் பெற்றுக் கொண்டு ஆசையாக முத்தமிட்டேன்.
நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டே அவளிடம் கேட்டேன். என்ன குழந்தை பேச ஆரம்பித்து விட்டதா என்று. அதற்கு அவள் எல்லோரையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள். இன்னமும் பேச ஆரம்பிக்கவில்லை என்றாள்.
நானும் உடனே குழந்தையைப் பார்த்து அம்மா என்று சொல்லிக் கொடுத்தேன். நான்கைந்து முறை சொன்ன பின்னர் குழந்தை என்னைப் பார்த்து பாபா என்றது. நான் அவளிடம் அம்மா என்று சொல்லிக் கொடுத்தால் பாபா என்கின்றதே பார்த்தாயா என்றேன். இதுவரை நான் பல முறை முயற்சித்துப் பார்த்தேன். முகம் பார்த்து சிரிக்குமே தவிர எதுவும் பேசியது இல்லை. இன்று நீங்கள் வந்தவுடன் உங்களைப் பார்த்து பாபா என்று சொல்கின்றது. பாபா என்றால் அப்பா என்று சொல்வார்கள்.
எனது குழந்தை கூட தங்களை அப்பா என்று தான் நினைக்கின்றது. அப்போது என் நிலை எம்மாத்திரம் என்றாள். பிஞ்சுக் குழந்தையின் மழலை மொழியில் முதலாவாதாக பாபா என்று சொன்னதை கேட்ட பின்னர் எனது இதயம் மிகவும் சந்தோஷப் பட்டது.
முதலாவது புன்முறுவல் நீங்கள் வந்தவுடன். முதலாவது பேச்சும் கூட நீங்கள் வந்தவுடன் என்பதனை நினைக்கும் போது நான் ஏன் இந்த வீட்டில் இருக்க வேண்டும் உங்களுடனேயே என் குழந்தையுடன் வந்து விடலாம் என்று தோன்றுகின்றது. எல்லாம் நான் செய்த பாவம் என்று கூறி அழ ஆரம்பித்து விட்டாள்.
உடனே குழந்தை முதன் முதலாக பேசுவது கண்டு சந்தோஷப்பட வேண்டுமே தவிர இப்படி அழக்கூடாது என்று அறிவுறை கூறினேன். அதற்கு அவள் என்னால் அப்படி இருக்க முடியவில்லை என்று சொன்னதைக் கேட்டு என் இதயம் துடித்தது.
குழந்தைக்கு ஓசை எழுப்பக்கூடிய பொம்மைகளை வாங்கிச் சென்று இருந்தேன். அவைகளை அவளிடம் கொடுத்தேன். இதுவரை நீங்கள் எனக்கு பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து நான் அவற்றை நினைத்து நினைத்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றேன். இப்போது என் குழந்தைக்கு. அது என்ன பாடு படப் போகின்றதோ என்று புலம்பினாள்.
சற்று நேரம் கழித்து சகஜ நிலைக்கு வந்த பின்னர் பெண் பார்க்கும் நிலை பற்றி கேட்டாள். உடனே நான் அது பற்றி கேட்டு நீயும் வருத்தப்பட வேண்டாம், என் சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டாம் என்றேன். அவளும் சரியென ஒப்புக் கொண்டாள்.
உங்களது பெற்றோர் வாங்கியுள்ள புது வீடு பற்றி சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று இருக்கின்றது. அது பற்றி குழந்தை பிறந்த பின்னர் சொல்கின்றேன் என்று சொன்னது ஞாபகம் வந்து விட்டது. அது பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டாள். நானும் அது பற்றி சொல்ல ஆரம்பித்தேன். இடையிலேயே வழக்கம் போல் காப்பி அருந்தினோம்.
நான் உன்னைச் சந்திப்பதற்கு மூன்று வருடங்கள் முன்னதாக வகுப்பறையில் இருக்கும் போது எனது நண்பன் உடனடியாக வெளியே செல்ல வேண்டும் என்றான். நானும் யார் யார் செல்கின்றோம் என்று கேட்டதற்கு நீயும் நானும் மட்டும் தான். வேறு யாரும் இல்லை என்று சொன்னான். வழக்கம் போல் வகுப்பை கட் அடித்துவிட்டு சினிமாவுக்குத் தானே என்று கேட்க எனது தங்கை உன்னை அவசரமாக பார்க்க வேண்டும் என்று கூறினாள். அவளைப் பார்க்கத்தான் செல்கின்றோம் என்றான். அதற்காக ஏன் வகுப்பை கட் அடிக்க வேண்டும் மாலையில் வருகின்றேனே என்றதும் இல்லை உடனே புறப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
அவன் கேட்டுக் கொண்ட படி நானும் அவனும் மதிய வகுப்பினை கட் அடித்து விட்டு வெளியே வந்தோம். அவன் வீட்டுப் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் செல்ல முயற்சித்தான். உடனே ஏன் இந்தப் பக்கம் என்று கேட்டதற்கு ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வா என்னுடைய தங்கையிடம் தான் நாம் போகின்றோம் என்று சொன்னான்.
நானும் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவன் மருத்துவ மனைக்குச் சென்றான். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள அவன் தங்கையைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்தார்கள். அப்போது அவனது தங்கை எல்லோரும் வெளியே போங்கள். நான் இவனிடம் தனியாகப் பேச வேண்டும் என்றாள். என் நண்பன் நான் கூட இருக்கலாமா அல்லது நானும் போக வேண்டுமா என்று கேட்டான். உடனே அவள் நீ கூட இருக்கலாம் என்று கூற நானும் எனது நண்பனும் அங்கு நின்றோம்.
அப்போது அவனது தங்கை என்னிடம் அருகில் அமருமாறு கூறினாள். எனக்கு சற்று பயம். ஏனெனில் உடம்பு முழுக்க தீக்காயங்கள். இது எப்படி நிகழ்ந்தது என்று கேட்டதற்கு எனது நண்பன் சென்ற வாரம் கெரசின் ஸ்டவ் வெடித்து விட்டதால் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாள் எனக் கூறினான்.
அருகில் அமர்ந்தவுடன் எனது நண்பனின் தங்கை என்னிடம் பேச ஆரம்பித்தாள். நான் இன்றிரவு இறந்து விடுவேன். நீ எனது எல்லைக்கு வர வேண்டிய காலம் வரும். அப்போது நான் உன்னையும் உனது குடும்பத்தாரையும் நன்றாக பாது காப்பேன். உனது குடும்பத்தார் என்பது நீயும் உனது மனைவியும் குழந்தைகளும் மாத்திரம் என்று சொன்னாள். உடனே எனது நண்பன் ஆயிரக் கணக்கான பணம் செலவழித்து உன்னை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நீ இன்று இறந்து விடுவேன் என்று இவனிடம் கூறக் காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு அவள் உன்னுடைய நண்பர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவன் இவன் தான் என்றும் வேறு விதமான உறவுகளை கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்றும் கூறினாள். இதனைக் கேட்ட எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்களில் நீர் வடிய அன்பினால் அல்ல பயத்தினால் நான் வெளியே வந்தேன்.
அப்போது எனது நண்பனிடம் அவனது உறவினர்கள் என்ன சொன்னாள் என்று கேட்க அவன் உள்ளே அவள் பேசியதை அப்படியே சொன்னான்.
நாங்கள் ஆயிரக்கணக்கான பணம் செலவழித்து அவளைக் காப்பாற்ற நினைக்கின்றோம். எங்களிடம் எதுவும் கூறாமல் உன் நண்பனை வரவழைத்து அவனிடம் மட்டும் இன்றிரவு இறந்து விடுவேன் என்று சொல்ல என்ன காரணம் என்று கேட்டனர். அதற்கு அவன் என் நண்பர்களிலேயே மிகவும் பிடித்தமானவன் என்றும் வேறு உறவுகளைக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்றும் அவளே சொன்னதாகக் கூறினான். எல்லோருக்கும் ஏதோ ஒரு சந்தேகம். இருந்த போதிலும் அவனது உறவினர் யாரும் சமாதானம் அடையவில்லை.
அதே போல அன்றிரவே அவள் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனாள். அவள் சொன்னபடி அன்றிரவே மரணம் அடைந்தது என்கு ஒரே ஆச்சர்யம். நானும் இரண்டு நாட்கள் இருந்து அவளது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வந்தேன்.
எந்த பெண் தீக்காயங்களுடன் என்னிடத்தில் இன்றிரவு மரணம் அடைந்து விடுவேன் என்று முன்னமேயே சொல்லி விட்டு இறந்தாளோ அந்த வீட்டிற்கு நேர் பின்புறம் உள்ள வீட்டைத் தான் என் பெற்றோர் வாங்கியிருக்கின்றார்கள். முன்னமே தெரிந்திருந்தால் என்னால் தடுத்து இருக்க முடியும். ஆனால் முடியவில்லை என்று சொன்னேன்.
அதற்கு அவள் உங்களது உறவினர் என் மடியில் உயிர்விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே என் தோளில் சாய்ந்து உயிர் விட்டார்கள். அவரை முன் பின் ஒரு முறை கூட நான் பார்த்தது கிடையாது. இருந்தாலும் அவர் சாகும் சமயம் என்னையும் உங்களையும் ஆசீர்வதித்து தான் என் தோளில் அவர் உயிர் பிரிந்தது. ஆனால் ஆசீர்வாதம் மட்டும் பலிக்கவில்லை.
இதன் மூலம் நம் இருவருக்கும் ஏதோ ஒரு சக்தி நம் இருவரையும் சேர்த்து வைக்க துடித்தது என்பது மட்டும் எனக்குத் தெரிகின்றது.
திருமணம் என்பது ஆயிரங் காலத்து பயிர். திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதெல்லாம் பொய்.
திருமணங்கள் வரதட்சினையாலும் வசதி அந்தஸ்துகளாலும் தான் நிச்சயிக்கப்படுகின்றன என்பது மட்டும் உண்மை என்று சொல்லி மீண்டும் நம் இருவர் பிரிவு தொடர்பான நினைவலைகளுக்கு அவள் வந்து கவலைப்பட ஆரம்பித்தாள்.
என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. வழக்கம் போல் இன்பத்துடன் சென்று துன்பத்துடன் திரும்பினேன்.