சந்தோஷமான சந்திப்பு
காண்பதற்காகக் காத்திருப்பதில் ஏற்படுகின்ற ஏக்கம் கண்டவுடன் காணாமல் போய் விடுகின்றது.
என் வருகையை எதிர்பார்த்து அவள் மாடியிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் அவளைப் பார்க்கச் சென்ற சமயம் குழந்தை அழுது கொண்டு இருந்தது. என்னவென்று கேட்டமைக்கு தடுப்பூசி போட்டு வந்ததனால் காய்ச்சல் என்று கூறினாள். குழந்தையைப் பெற்றுக் கொண்டு சமாதானம் செய்து பார்த்தேன். முடியவில்லை. சிறிது நேரத்தில் குழந்தை என் மடியில் உறங்கி விட்டது.
இடையில் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். வழக்கம் போல தேநீர் குடித்தோம்.
அவள் முதல் முறையாக எனது அலுவலகம் பற்றி கேட்க ஆரம்பித்தாள். நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டாள். அலுவலகத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்து விட்டார்கள் என்றேன். உடனே அவள் அவர்களில் பெண்கள் எத்தனை பேர் என்று கேட்டாள். நானும் நிறைய பேர் என்று கூறினேன். உங்களுடைய பெண் நண்பர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள.
என்னுடைய ஆண் நண்பர்களைப் பற்றிக் கேட்காமல் பெண் நண்பர்கள் பற்றி மட்டும் கேட்பது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டேன். ஆண் நண்பர்களுடன் எவ்வளவு நெருக்கமாக நீங்கள் பழகினாலும் உங்களை பல சமயங்களில் அண்ட விட மாட்டார்கள். காரணம் நீங்கள் எனக்குச் செய்து கொடுத்த சத்தியம். அதாவது எனது ஆள் காட்டி விரலை தொட்ட ஒரே காரணத்தால் நீங்கள் வெற்றிலை பாக்கு பீடா சிகரட் மது ஆகிய எதனையும் தொடுவதில்லை. எனவே உங்களை ஒரு கறிவேப்பிலையாக தான் அவர்கள் சேர்த்துக் கொள்வார்கள். முக்கியமான நேரங்களில் கழற்றி விட்டு விடுவார்கள்.
ஆனால் பெண் நண்பர்களிடம் இது போன்ற பழக்க வழக்கங்கள் கட்டாயம் இருக்காது. எனவே அவர்கள் தான் உங்களிடம் உயிருக்கு உயிராக உண்மையாக மனம் திறந்து பழகுவார்கள். எந்த நேரத்திலும் என்னைப் போன்றே திறந்த மனதுடன் அன்பு செலுத்துவார்கள். அவ்வாறு அன்பு செலுத்துவதில் எந்த விதமாத ஒளிவு மறைவும் இருக்காது என்றாள்.
நான் வேலையில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. நான் பணியாற்றும் அலுவலகத்தில் அனைத்து மதத்தினரும் அனைத்து ஜாதியினரும் அனைத்து மாநிலத்தவரும் அனைத்து மொழியினரும் ஒன்றாக வேலை செய்கின்றார்கள். நீண்ட நாட்கள் பணி புரிந்தவர்கள் மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழை சரளமாக பேசுவார்கள். நிறைய பேருக்கு தமிழ் சரளமாக பேச வராது.
வேலைக்குச் சேர்ந்த சமயம் நான் ஆரம்பத்தில் சந்தோஷமாகவும் பின்னர் சற்று சோகமாகவும் காணப்பட்டதை கவனித்த ஒரு கேரளத்துப் பெண் மலையாளம் கலந்த தமிழில் என்னிடம் துருவித் துருவி கேட்க ஆரம்பித்தாள்.
நான் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் வீடு பார்த்துக் கொண்டு வந்த சமயம் உன்னைப் பார்த்ததையும் அதன் பின்னர் நடந்த சம்பவங்களையும் நமது உறவு நிலை பற்றியும் அவளிடம் தெரிவித்தேன். அவள் மிகவும் வருத்தப் பட்டாள். நீ சொன்னது போல நானும் உயிர் வாழ விரும்பவில்லை என்று அவளிடம் சொன்னேன். அதனைக் கேட்ட அவள் எனக்கு ஆலோசனை வழங்கினாள். உன்னைப் பிரிந்து ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு வாழும் சமயம் நீங்கள் தவறான முடிவு எடுப்பது சரியல்ல என்றாள். அதே போல திருமணத்திற்குப் பின்னர் நீயும் தவறான முடிவு எடுப்பது நல்லதல்ல என்றும் கூறி நம் இருவர் வாழ்விலும் ஏற்படப் போகும் கஷ்ட நஷ்டங்களை என்னிடம் எடுத்துக் கூறி நல்வழி காட்டினாள்.
உனக்குத் திருமணம் நடந்த பின்னரும் நீ என் மீது செலுத்தும் அன்பும் காதலும் நான் உன் மீது செலுத்தும் அன்பும் காதலும் குறையவில்லை என்பதனை அறிந்து அவளும் என் மீது அன்பு செலுத்த ஆரம்பித்தாள். உன்னைக் காதலிப்பதற்கு முன் அவள் என்னைச் சந்திக்க முடியாமல் போய் விட்டது என்றும் வருத்தப் பட்டாள்.
மிகக் குறுகிய காலத்தில் அவள் பதவி உயர்வு பெற்று மாற்றலாகி சென்று விட்ட பின்னர் வேறு ஒரு கர்நாடகாவைச் சேர்ந்த பெண் அந்த இடத்தில் பணியில் சேர்ந்தாள். அவள் தமிழ் நாட்டில் உள்ள கல்லூரியில் படித்தவள். அவளும் அப்படித்தான். ஆனால் அவள் அதை விட ரொம்ப நெருக்கம்.
அலுவலகத்தில் எல்லோரும் அவளிடம் பேச பயப் படுவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். பத்து ஆண்கள் ஒரு பெண்ணுக்குச் சமம். பத்து பெண்கள் அவளுக்குச் சமம். அந்த அளவிற்கு வாயாடி. ஆனால் அவள் என்னருகில் அமர்ந்திருக்கும் போது எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கும். அவ்வளவு அமைதியாகவும் அடக்கமாகவும் அமர்ந்து இருப்பாள்.
அவள் எல்லோரிடத்திலும் வாயாடி என்று பெயர் எடுத்திருந்தாலும் என்னிடம் அவள் கிசு கிசு என்று காதருகே வந்து வேறு யாருக்கும் கேட்காதபடி பேசுவது கண்டு அனைவரும் பொறாமைப் படுவார்கள். அந்த அளவிற்கு நம்மில் ஒற்றுமை இருக்கும். அவள் நடந்து சென்றால் அவளைப் பார்க்காத கண்களே இருக்காது. அவ்வளவு அழகு. சுத்த சைவம்.
நான் பணியாற்றும் அலுவலகத்தில் அவளைப் பார்க்கவே ஆண்கள் கூட்டம் அலை மோதும். ஆனால் அவள் யாரையும் பார்க்க மாட்டாள். பணியாற்றும் பெண்கள் கூட்டத்திற்கு முக்கியமான நபர் அவள் தான். அவளை விட்டு விட்டு யாரும் தேநீர் அருந்துவதற்கு கூட செல்ல மாட்டார்கள். அனைவரும் ஒன்று கூடி தேநீர் அருந்த செல்லும் சமயம் நானும் கட்டாயம் செல்ல வேண்டும். இல்லையெனில் அவள் கோபித்துக் கொண்டு இரண்டு மணி நேரம் என்னுடன் பேசாமல் இருந்து விடுவாள். அதற்கு மேல் அவளால் என்னிடம் பேசாமல் இருக்க முடியாது.
அவ்வாறு நான் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் எனக்கு உங்களது பெண் சிநேகிதியைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றது என்றாள். நான் எதற்கு என்றதற்கு நீங்கள் இதுவரை நான் தான் அழகு என்று சொல்லி வந்தீர்கள். இப்போது அவள் அழகு என்று சொல்கின்றீர்கள். எனவே அவளைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன் என்றாள்.
கவலைப் படாதே. இன்று இரவு 7.00 மணிக்கு தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் தொகுப்பாளினியாக வருவாள். வாரா வாரம் நீ அவளைப் பார்க்கலாம் என்றேன். தொலைக் காட்சியில் தொகுத்து வழங்குபவர்கள் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழை நன்றாக உச்சரிப்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே இன்று முதல் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கட்டாயம் பார்த்துவிட்டு அதுபற்றி அடுத்த முறை பேசலாம் என்றாள்.
முப்பது முதல் நாற்பதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒன்றாக தேநீர் அருந்த செல்லும் சமயம் நானும் இன்னுமொரு நண்பரும் தான் ஆண்களாக இருப்போம். அனைவரும் மிகவும் நெருக்கம். அந்த கூட்டத்தின் ஒற்றுமைக்கு காரணம் யாரும் யாருக்கும் மதிப்பு கொடுக்க மாட்டோம். மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவும் மாட்டோம். யாருக்காகவும் யாரையும் விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரும். எப்படி சமாதானம் ஆனோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் அனைவரையும் வாடி போடி என்று சொல்ல வேண்டும். கூட்டமாக இருக்கும் போது குறிப்பிட்ட நபரை அழைக்க மட்டும் பெயர் பயன்படுத்த வேண்டும். அதே போல அவர்கள் யாரும் வாங்க போங்க என்று சொல்ல மாட்டார்கள். வாடி போடி வாடா போடா என்னும் வார்த்தைகள் சரளமாக வரும். அதனால் எங்களுக்குள் மிக மிக அந்யோன்யமான நெருக்கம். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. என்னவெனில் முக்கால் வாசிப் பேருக்கு சுத்தத் தமிழ் வராது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. பேச மட்டும் தெரியும் எனவே இலக்கணம் எதிர் பார்க்க முடியாது. அனைவரது வயதும் 30-க்குள் தான் இருக்கும். அதில் திருமணம் ஆனவர் யார் திருமணம் ஆகாதவர் யார் என்பதனை கண்டு பிடிக்க முடியாது. சிலர் தாலி கட்டியிருப்பார்கள். சிலர் மோதிரம் போட்டு இருப்பார்கள். கண்களுக்கு மாத்திரம் இடைவெளி விட்டு பர்தா அணிந்த பெண்களும் உண்டு. சிலருக்கு திருமணம் ஆகியிருக்காது.
நான் இரண்டு முறை தும்மி விட்டால் போதும் உடனடியாக அவள் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வாள். டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பித்து அவர் கொடுக்கும் மாத்திரைகளில் ஒரு செட்டினை அவள் முதலில் சாப்பிட்டு விட்டு பின்னர் எனக்குக் கொடுப்பாள். எனக்கு உடல் நிலை சரியில்லை என்று டாக்டர் மாத்திரை கொடுத்து இருக்கின்றார். நீ ஏன் சாப்பிடுகின்றாய் என்று கேட்டால் இந்த மாத்திரைகள் சாப்பிட்டு உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது. அதனால் தான் என்பாள்.
வயிற்றில் புண் ஆகி கஷ்டப்பட்ட சமயம் அவள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவாள். அவளது தாய்க்கும் தெரியும்.
அதே சமயம் இன்னொரு முஸ்லீம் பெண் எனக்காக அசைவ உணவு கொண்டு வருவாள்.
இதனால் இரண்டு பேருக்கும் சண்டை நடக்கும். எனக்காக இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ளும் சமயம் நான் யாருக்காவது ஆதரவாக பேசி விட்டால் இருவரும் சமாதானம் ஆகிவிட்டு என்னுடன் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். எனவே நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருப்பேன்.
அலுவலகத்தில் இவ்வளவு நெருக்கமான தோழிகள் கிடைத்தும் என்னை மறவாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டாள்.
அதற்கு நான் சொன்ன பதில். முதலாவது காதல். முதலாவது ஸ்பரிசம். முதலாவது சத்தியம்.
மிகவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்த சமயம் அவளது உறவினர் ஒருவர் வந்த காரணத்தால் வந்தவர்களை உபசரிக்க வேண்டும். அத்துடன் குழந்தையை அவர்களிடத்தில் கொடுக்க வேண்டிய கட்டாயம். சரளமாகப் பேச முடியாத நிலை.
உடனே அவள் இதன் தொடர்ச்சியை அடுத்த முறை வரும் சமயம் மறக்காமல் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
மாதத்தில் ஒரு நாள் மனப் விட்டுப் பேசி சந்தோஷமாக இருப்பதைக்கூட பொறுக்க முடியாமல் உறவினர்கள் வந்து பேச விடாமல் கெடுத்து விட்டார்களே என்று மெதுவாக சொல்லிக் கொண்டே என்னுடன் தொடர்ந்து வாசல் படி வரை வந்து உள் மனத்தில் கவலையுடனும் உதட்டில் புன்சிரிப்புடனும் விடை கொடுத்தாள் என் தேவதை.
அவளது திருமணத்திற்குப் பின்னர் பழையனவற்றை நினைத்து வருத்தப்பட வைக்காமல் முதன் முறையாக மிக்க சந்தோஷத்துடன் அவளைக் காணச் சென்று அப்படியே திரும்பி வந்தேன்.