என் தேவதையின் பாராட்டுதல்கள்.
ஏமாற்றங்கள் இல்லாத எதிர்பார்ப்பு எப்போதும் சந்தோஷத்தைத் தரும்.
சென்ற மாதம் வரை என்னை எதிர்பார்த்து அவள் மட்டும் காத்து இருந்தாள். இப்போது என்னை எதிர்பார்த்து அவளுடன் அவளுடைய குழந்தையும் காத்துக் கொண்டிருக்கின்றது.
நான் வீட்டில் நுழைந்தவுடன் மலர்ந்த புன்னகையுடன் அவள் வரவேற்க அவளது சின்னஞ்சிறு குழந்தை இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி தன்னை தூக்கிக் கொள்ளுமாறு சைகை காட்டி என்னை வரவேற்றது.
சிரித்த முகத்துடன் என்னை வரவேற்ற அந்த குழந்தையை நான் இரண்டு கரங்களாலும் எடுத்துக் கொண்டு தோளில் சாய்த்துக் கொள்வதற்கு முன்னர் ஆரத் தழுவி முத்தமிட்டேன். பின்னர் இருக்கையில் நான் அமர்ந்ததும் குழந்தை என்னைப் பார்த்து மீண்டும் சிரித்தது.
சென்ற முறை வந்த சமயம் உடல் நலமின்றி என் மடியில் படுத்துக் கொண்ட காரணத்தால் இப்போது சிரித்துக் காட்டுகின்றதா என்று கேட்டேன். அவள் எதுவும் தெரியவில்லை. உங்களிடம் மட்டும் தான் இப்படி நடந்து கொள்கின்றது என்று சொன்னாள். அடுத்த வார்த்தைகள் என்ன பேசுகின்றது என்று கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்றாள். நான் மறுபடியும் அப்பா அம்மா என்று கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். குழந்தை மீண்டும் பாபா பாபா என்று சொல்ல ஆரம்பித்தது. எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். ஆனால் அவளுக்கு கொஞ்சம் வருத்தம் காரணம். அவள் கற்றுக் கொடுத்தால் சிரித்து மட்டும் காட்டுகின்றது என்று சொன்னாள்.
அதற்குப் பின்னர் சென்ற மாதம் நீங்கள் வந்து சென்ற பின்னர் நான் தொலைக் காட்சியைப் பார்த்தேன். உங்கள் அலுவலக பெண் சிநேகிதி மாலை 7.00 மணிக்கு தொகுப்பாளினியாக வந்தது கண்டு நான் வியந்து போனேன். அவ்வளவு அழகு. நீங்கள் சொன்னது சரி தான் என்றாள். அதற்கு நான் அது பற்றியும் அவள் பற்றியும் பேசி நாம் நமது நேரத்தை வீணடிக்க வேண்டுமா என்று கேட்க அவள் என்னை விட அழகாகத் தான் இருக்கிறாள் என்று சொல்ல வந்தேன் என்று கூறினாள்.
அதன் பின்னர் அவள் சமையலறைக்குள் சென்று இரண்டு டம்ளர்களில் ஏதோ ஒரு பானம் கொண்டு வந்தாள். என்ன இரண்டு டம்ளர் என்று கேட்டேன். உங்கள் சிநேகிதி தொலைக் காட்சியில் கற்றுக் கொடுத்தபடி சூடான கோக்கோ காப்பி போட்டு இருக்கின்றேன். எனக்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது என்றாள். ரொம்ப பிடித்து இருப்பதால் நான் முழுவதையும் குடித்து விட மாட்டேன். வழக்கம் போல் நீங்கள் பாதி குடித்துவிட்டு என்னிடம் கொடுக்க வேண்டும். நானும் பாதி குடித்து விட்டு உங்களிடம் கொடுப்பேன் என்றாள். நான் அவளைச் சந்தித்ததிலிருந்து முதன் முறையாக தனக்குப் பிடித்திருக்கின்றது என்று உணவுப் பொருளை சொன்னது அன்று தான். பொதுவாக பெண்களுக்கு வேறு பெண்களைப் பாராட்டுவது பிடிக்காது. ஆனால் என் காதலி அப்படி அல்ல. உள்ளதை உள்ளபடி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி விடுவாள்.
அடுத்து மீண்டும் அந்த முஸ்லீம் பெண் பற்றி சொல்லவில்லையே என்று சொன்னாள். நான் அவளிடம் தினம் தினம் அவர்களுடன் தான் நான் இருந்து கொண்டு இருக்கின்றேன். உன்னிடம் வந்த போது கூடவா அவர்களைப் பற்றி பேச வேண்டும் என்று கேட்டேன்.
அதற்கு அவள் நான் உங்களை கவனித்துக் கொள்ள முடியாதபடி நமது பெற்றோர் பிரித்து விட்டார்கள். அந்த பாக்கியம் தற்போதைக்கு அவர்களுக்காவது கிடைத்து இருக்கின்றதே என்பதனை நினைக்கும் போது அவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் நான் மட்டும் ஏன் கொடுத்து வைக்கவில்லை என்று தோன்றுகின்றது. யார் யாரோ உங்களுக்கு உணவு சமைத்துப் பரிமாறுகின்றார்கள். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று மிகவும் ஏங்கினாள்.
இன்று ஒரு நாள் மட்டும் நம்மைப் பற்றிப் பேசாமல் உங்கள் நண்பர்களைப் பற்றி பேசலாம் என்று கேட்டுக் கொண்டே அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் என்று சொன்னீர்கள் எதனால் என்று மீண்டும் ஆரம்பித்தாள். நான் வேண்டாம் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதால் வேறு வழியின்றி அவர்கள் பற்றியே பேசினேன்.
அவள் சுத்த சைவம். ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பதில் தவற மாட்டாள். அமாவாசை, பௌர்ணமி, பண்டிகை நாட்கள், தமிழ் மாதப்பிறப்பு அனைத்து நோன்புகள் வரும் நாட்கள் எல்லாம் அவள் வீட்டில் பூஜைகளுடன் சிறப்பு உணவு தயாராகும். அவற்றில் எனக்காக தனியே ஒரு டப்பாவில் கொண்டு வருவாள். அதனை நான் கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும். சைவ உணவுகள் தான் என்றாலும் மிகுவும் ருசியானதாகவும் சுவையானதாகவும் (Taste and Delicious) இருக்கும். அதே போன்று நோன்புக் கயிறுகள் கொண்டு வந்து தன் கையால் எனது வலது கையில் மணிக் கட்டில் கட்டிவிடுவாள்.
அதற்கு நேர் மாறானவள் இன்னொருத்தி. எல்லா நாட்களிலும் மட்டன், சிக்கன், மீன் உணவுகள் இருக்கும். எனக்கென்று தனியாக டப்பா இல்லாவிட்டாலும் அவளுக்கென்று உள்ள கேரியரில் நிறைய கொண்டு வருவாள். ஏனெனில் தனியாக கொண்டு வந்தால் நான் யாருக்காவது கொடுத்து விடுவேன் என்ற எண்ணம். அவளும் நானும் அருகருகே அமர்ந்து தான் உண்ண வேண்டும். நான் சாப்பிட்டு முடித்தவுடன் எனது தட்டினைக் கூட அவள் எடுத்துச் சென்று சுத்தம் செய்து கொண்டு வந்து திரும்ப வைத்து விடுவாள்.
இதனால் ஏன் அவர்களுக்குள் சண்டை வரும் என்று கேட்டாள்.
ஒருத்தி நோன்புக் கயிறு கையில் கட்டியிருக்கும் சமயம் குறைந்தது மூன்று நாட்கள் அசைவம் தொடக் கூடாது என்பாள். அதற்கு அவள் நோன்புக் கயிற்றை கட்டி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது. எனவே இன்று உண்ணலாம் என்று சொல்வாள்.
அதனையும் மீறி நான் சாப்பிட்டு விட்டால் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக அவளுக்கு சாதகமாக செயல்பட்டு பரிந்து பேசுகின்றீர்கள் என்று ஒருத்தி கூற மற்றொருத்தி இரண்டு வேளை ஓட்டல் சாப்பாடு ஒரு வேளை மட்டும் தான் வீட்டுச் சாப்பாடு அதனை சத்தானதாக சாப்பிடட்டுமே என்பாள். இப்படியே சாப்பாட்டுச் சண்டை அடிக்கடி நடக்கும்.
நீங்கள் சொல்வது சுவாரஸ்யமாக இருக்கின்றது. இருந்தாலும் எனக்கு ஒரு ஏக்கம் அவர்களைப் போல நான் உங்களைக் கவனிக்க கொடுத்து வைக்கவில்லை என்பது தான் என் கவலை என்றாள்.
எது எப்படி இருந்தாலும் எனக்குப் பதிலாக உங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வாய்க்கு ருசியாக சமைத்து உணவு பரிமாறும் உங்கள் அனைத்து தோழியருக்கும் மனமார்ந்த எனது பாராட்டுதல்கள் என்று சொன்னாள்.
இப்படி நாங்கள் இருவரும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் குழந்தை அவளைப் பார்த்து கைகளை விரித்துக் காட்டியது.
அதனைக் கண்ட அவள் நீ மட்டும் அவர் அருகில் இருந்து கொண்டு என்னைப் பார்த்து சந்தோஷமாக கையசைத்துக் காட்டுகின்றாய். ஆனால் என்னால் அந்த மாதிரியான சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் போய் விட்டது என்று வருத்தப்பட ஆரம்பித்தாள்.
பின்னர் குழந்தையினை அவளிடம் கொடுத்து இருவரும் சந்தோஷமாகச் சிரித்துக் காட்டிய பின்னர் நான் இருப்பிடம் திரும்பினேன்.
மறுநாள் நான் என்னுடைய அலுவலக சிநேகிதியிடம் அவளைப் பற்றியும் அவள் தயாரித்த கோக்கோ காப்பி பற்றியும் எடுத்துச் சொன்னேன். அதனைக் கேட்ட அவள் மிகவும் சந்தோஷப்பட்டதுடன் இதுநாள் வரையில் தொகுப்பாளினியாக தொகுத்துக் கொடுத்த நிகழ்ச்சிகள் மற்றும் அடுத்து 6 வாரங்களுக்கு ஒளிபரப்பாகவிருக்கின்ற ஒலி ஒளி வடிவ வீடியோ காசட்டுகளை என்னிடம் கொடுத்து அவளிடம் அன்புப் பரிசாக கொடுக்கச் சொன்னாள் மன மகிழ்ச்சியுடன்.