அளவுக்கு அதிகமான சந்தோஷம் மற்றும் சோகம்.
நமக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருள் தொலைந்து போய் விட்டது. அது போன்ற பொருள் எங்கு தேடினாலும் கிடைக்காது. புதிதாக வாங்கவும் முடியாது. அந்த நிலையில் அதே பொருள் நமக்குத் திரும்பக் கிடைக்குமானால் அப்போது ஏற்படுகின்ற சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. சொர்க்கமே நம்மைத் தேடி வந்தது போல் இருக்கும். அப்படியானதொரு சந்தோஷம் நான் அவள் வீட்டிற்குப் பக்கத்தில் குடியேறியதில் அவளுக்கு ஏற்பட்டது.
நான் மறு முறை அவளது வீட்டிற்குச் சென்ற சமயம் தனது குழந்தையை தோளில் வைத்து பழைய கவலைகள் அனைத்தையும் துறந்து ஆடிப் பாடி மகிழ்ச்சியுடன் இருந்தாள்.
நான் உள்ளே நுழைந்ததும் அவளது சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நானும் அவளும் ஆரம்ப காலத்தில் கோயில் குளங்களுக்குச் சென்ற சமயம் எவ்வளவு சந்தோஷத்துடன் காணப் பட்டாளோ அதனை விட அதிகமான சந்தோஷத்துடன. காணப் பட்டாள். காரணம் நான் அவள் வீட்டிற்கு மிக அருகாமையில் குடியேறியது. குழந்தை அதனை விட மேலான சந்தோஷத்துடன் என்னிடம் வந்து என்னை அணைத்துக் கொண்டது.
அவள் என்னெதிரே அமர்ந்து கொண்டாள். நான் நேற்று நீங்கள் புதிதாக குடிவந்திருக்கும் உங்கள் வீட்டிற்கு வந்து பார்த்தேன். உங்களது வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் அவரது உறவினர் ஒருவர் இருக்கின்றார். இதுவரை நான் அந்தப் பக்கம் சென்றதே இல்லை. நேற்று தான் முதன் முறையாக அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். அவர்களுக்கு இதுவரை வராத நான் வந்திருக்கின்றேன் என்பதில் ரொம்ப சந்தோஷம். ஆனால் நான் உங்களது வீட்டைப் பார்க்க வந்திருக்கின்றேன் என்பது அவர்களுக்குத் தெரியாது. எதிர் வீடு காலியாக இருக்கின்றதா என்று கேட்டேன். நீண்ட நாட்கள் காலியாக இருந்தது சென்ற மாதம் உங்கள் ஊர் காரர்கள் வந்திருப்தாக தெரிவித்தார்கள்.
நீங்கள் அலுவலகம் சென்று இருப்பீர்கள். உங்கள் மனைவி இருப்பார்கள் என்று பார்த்தேன். ஆனால் வீடு பூட்டி இருந்தது என்று சொன்னாள்.
அவள் தாய் வீடு சென்றிருக்கின்றாள் என்று சொன்னேன். எப்போது வருவாள் என்று கேட்டாள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.
அதன் பின்னர் திருமண வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்று கேட்டாள். அதற்கு நான் உன்னிடம் நான் கொண்டுள்ள நெருக்கம் இதுவரை அவளிடத்தில் ஏற்படவில்லை.
அவளுக்கு அவளது குடும்பத்தார் மேல் பாசம் அதிக அளவில் இருக்கின்றது. எனவே அவள் அவளது வீட்டிலேயே இருக்கப் பிரியப் படுகின்றாள். ஒன்று நான் அவளது வீட்டில் இருக்க வேண்டும். அல்லது அலுவலக வேலையாக வெளியூரில் இருக்க வேண்டும் என்ற நிலையில் இங்கு குடிவந்த பின்னர் சரியாக இங்கு இருக்க முடியவில்லை. அதனால் அலுவலகம் செல்லும் போது தினந்தோறும் உன்னைப் பார்க்க முடியும் என்னும் என்னுடைய ஆசை நிராசையாகி விட்டது.
அதற்கு அவள் ஆரம்ப காலத்தில் அப்படித் தான் இருக்கும். போகப் போக சரியாகி விடும் என்று சொன்னாள். என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எத்தனை நாள் தான் நான் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருப்பது. என்னிடம் முன்னதாக ஒரு வார்த்தை சொல்லி விட்டு சென்றால் நான் இங்கு வரை வந்து பின்னர் மீண்டும் அவளை அவளது வீட்டிலிலுந்து அழைத்துவர செல்ல வேண்டியதில்லை. நான் அலுவலகம் சென்ற பின்னர் திடீரென அவளது பெற்றோர் வந்து அழைத்துச் சென்று விடுகின்றார்கள் என்று சொன்னேன்.
அதற்கு அவள் உங்களுக்கு உங்கள் மனைவி மேல் அன்பு அதிகமாக்கி கொண்டு இருப்பதால் தான் இப்படி எண்ணத் தோன்றுகின்றது என்றாள். இல்லை. நான் அலுவலகத்தில் அலைந்து திரிந்து இங்கு வரும் சமயம் இங்கிருந்து மறுபடியும் சென்று வருவதனால் எனக்கு வெறுப்பு தான் அதிகமாகின்றது என்று சொன்னேன். அப்படியானால் நீங்கள் அவளது பெற்றோரிடம் சொல்லி சரி செய்ய வேண்டுமே தவிர கோபம் கொள்ளக் கூடாது என்று அறிவுறை வழங்கினாள். என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நான் இதுவரை அவளது வீட்டிற்குச் சென்ற சமயம் அவள் சொல்லும் குறைகளை கேட்டு வந்தேன். இப்போது நான் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து விட்டேன்.
அப்போது ஒருமுறை அவர்களை என்னுடைய வீட்டிற்கு அழைத்து வாருங்கள் அவர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றது என்று சொன்னாள். நானும் சரியென்று சொன்னேன். எனது பதிலைக் கேட்ட அவள் உங்கள் நிலைமை எனக்குத் தெரிகின்றது இத்தனை நாள் நாம் இருவரும் வெகு நெருக்கமாக பழகி விட்டு இப்போது அந்தப் பழக்கத்தின் நெருக்கம் குறைகின்றதா என்பதனை கண்டறிவதற்கு நான் அழைத்து வாருங்கள் என்று சொல்லவில்லை என்று சொன்னாள்.
அதன் பின்னர் வழக்கம் போல் காப்பி குடித்து விட்டு அவளது இல்லத்திலிருந்து மனமில்லாமல் புறப்பட்டேன். இத்தனை நாட்கள் நான் செல்லும் போது பிரிகின்றோம் என்று அவள் கவலைப் படுவாள். இப்போது நான் பிரிந்து செல்ல நேரிடுகின்றதே என்று எனக்குக் கவலை வர ஆரம்பித்து விட்டது. அது தான் உண்மையான காதலின் அடையாளம்.
நாட்கள் கடந்தன. நம் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் யார் மூலமோ தெரிந்து கொண்டு என் மனைவி உங்களது பழைய காதலியை பார்க்க வேண்டும். என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டாள்.
நான் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் வந்தே தீர வேண்டும் அவளைப் பார்த்தே தீருவேன் என்று கூறிய காரணத்தால் அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.
வழக்கம் போல் அவளது குழந்தை பாபா என்று சொல்லிக் கொண்டே என்னை கட்டியணைத்துக் கொண்டது.
அவள் எத்தனை நாட்களாக அழைத்து வருமாறு சொல்லி இன்று தான் உங்களுக்கு வழி தெரிந்ததா என்று கேட்டு உபசரித்தாள். பின்னர் சற்று நேரம் இருந்து விட்டு வீடு திரும்பினோம்.
நாம் அங்கு சென்றிருந்த சமயம் அவளும் அவளது குழந்தையும் என்னிடத்தில் பழகிய முறை மற்றும் நடந்து கொண்ட விதம் கண்டு என் மனைவிக்கு சற்று கோபம். அவளை ஏமாற்றி விட்டு என்னை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னிடம் சொல்லி வந்தாள். நான் எவ்வளவோ பழைய காலத்தில் நடந்தவற்றையும் என் மீதோ அவள் மீதோ எந்த தவறும் இல்லை என்றும் பெற்றோர் மறுத்த காரணத்தால் தான் நாம் பிரிய நேரிட்டது என்று எடுத்துக் கூறியும் கேட்க மறுத்து நான் தான் அவளை கை விட்டு விட்டதாக நினைத்து வந்தாள். இதனால் எனக்கு மன உளைச்சல் தான் அதிகமானது.
இந்நிலையில் எனக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெற்ற காரணத்தால் வெளியூர் சென்று விடுவது என்று தீர்மானித்தேன். எனது வீட்டில் உள்ள நிலைமையினை என்னுடைய காதலியிடம் எடுத்துச் சொல்லி நான் வெளியூர் சென்று பணியாற்றப் போவதாக சொன்னேன்.
அதற்கு அவள் என்னால் உங்களுக்கு மனக் கஷ்டம் வருகின்றது என்றால் உங்களுடைய மனக் கஷ்டம் நீங்க நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ அதனை தாராளமாக செய்யுங்கள். அதற்கு நான் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டேன். ஏனெனில் நம் இருவரது சந்தோஷம் நம் இருவருக்கும் முக்கியம் என்று சொன்னாள். ஆனால் நீங்கள் வெளியூர் சென்ற பின்னர் இப்போது போல மாதம் ஒரு முறை என்று இல்லாது 6 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை கட்டாயம் வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
பதவி உயர்வு கிடைத்தது நானும் அங்கிருந்து மனமில்லாது வெளியூர் செல்வது என தீர்மானித்தேன்.
இதனால் எனது குடும்பத்தில் அமைதி வருகின்றதோ இல்லையோ அவளுக்கு மிகப் பெரிய கவலை வந்து விட்டது. அவளது மனக்கவலை என்னையும் வாட்டத் தொடங்கியது.