வீடு பார்த்துக் குடியேறுதல்
திருமணம் முடிந்து சொந்த ஊரிலிருந்து பணியாற்றும் ஊருக்கு நான் மனைவியுடன் திரும்பிய பின்னர் மீண்டும் அவளைப் பார்க்கச் சென்றேன்.
அவள் எங்கே உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்று கேட்டாள். நான் இல்லை என்று சொன்னதற்கு ஏன் என்று கேட்டாள். பின்னர் ஒரு நாள் அழைத்து வருவதாக கூறினேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.
குழந்தை என்னிடம் வழக்கம் போல் வந்து அமர்ந்து கொண்டது. உங்கள் புது வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்று கேட்டாள். நான் அது போகப் போகத் தான் தெரியும் என்று சொன்னேன். அதற்கு அவள் உடனே என்னைப் பார்த்த இரண்டு மூன்று நாட்களில் என்னிடம் சம்மதம் கேட்டு என் ஒப்புதல் பெற்று காதலிக்க ஆரம்பித்து விட்டீர்கள். ஆனால் திருமணம் செய்து கொண்டு ஓரிரண்டு வாரங்கள் ஆகின்றது இன்னுமா புரிந்து கொள்ளவில்லை என்று கேட்டாள். என்னால் எதுவும் சொல்ல முடியாத நிலை. உடனே அவள் அது பற்றி கேட்டு உங்களை மேலும் துன்புறுத்த மாட்டேன் என்று சொன்னாள்.
அதன் பின்னர் எங்கு தங்கியிருக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு தற்போது அண்ணன் வீட்டில் என்று சொன்னதற்கு அவள் இங்கு கீழே ஒரு வீடு காலியாக இருக்கின்றது. நீங்கள் குடும்பத்துடன் இங்கு குடி வந்து விட்டால் எனக்கு அதை விட சந்தோஷம் எதுவும் இருக்காது என்று சொன்னாள். அதற்கு நான் அவளது தாய் தந்தையர் வீடு பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் எனவே சற்று பொறுத்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். அதற்கு அவள் வேறு யாராவது குடி வந்து விடுவார்கள். எனவே சீக்கிரம் முடிவெடுங்கள் என்று கேட்டுக் கொண்டாள். நான் எதுவும் பேசவில்லை.
எனது மனைவியின் பெற்றோர் ஊரெல்லாம் அலைந்து திரிந்து ஒரு வீடு பிடித்து நமக்கு அந்த வீடு பிடித்து இருக்கின்றது எனவே தாங்கள் எங்கள் மகளுடன் அந்த வீட்டில் குடியேறினால் நாம் அடிக்கடி வந்து பார்ப்பதற்கு தோதாக இருக்கும் என்றார்கள். நான் எதுவும் பேசவில்லை. எந்த இடம் என்ன வாடகை என்று எதுவும் கேட்காமல் போதுமான பணம் கொடுத்து வீட்டிற்கு அடவான்ஸ் கொடுத்து விடுங்கள். நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி குடியேறி விடலாம் என்று சொன்னேன். வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து குடியேறும் நாள் தீர்மானித்து விட்டார்கள்.
அதுவரையில் வீடு எங்கே உள்ளது. யாருடைய வீடு என்ன வாடகை எவ்வளவு அட்வான்ஸ் என்று எந்த விவரத்தையும் கேட்கவில்லை. அவர்களாகவே வீடு பார்த்தார்கள். அட்வான்ஸ் கொடுத்தார்கள். நல்ல நாள் பார்த்தார்கள்.
அந்த நாளுக்கு முன்னதாக வீட்டினை சுத்தம் செய்து வீடு குடி போவதற்கு தேவையான பூஜை பொருட்கள் அனைத்தையும் வாங்கி விட்டார்கள். அதன்படி ஒரு நாள் புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறினோம்.
ஆனால் அவர்கள் எனக்காக வீடு பார்த்து என்னைக் குடியேற்றிய இடம் எனது காதலியின் வீட்டிலிருந்து சுமார் பத்து வீடுகள் தாண்டி போக வேண்டும். நான் குடியேறும் சமயம் அவள் மாடியிலிருந்து எனது மனைவியையும் எனது உறவினர்களையும் பார்த்தாள். எனக்கு மாடியிலிருந்து அவள் முதன் முதலாக கண்ணில் கண்ணீருடன் பார்த்த சம்பவம் நினைவலைகளாக வந்தன. நானும் ஒன்றும் கண்டு கொள்ளாமல் நேராக வீட்டிற்கு சென்று விட்டேன். இறைவன் மீண்டும் நம்மை மிக நெருக்கத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டான் என்பது தான் எனது எண்ணமாக இருந்தது.
புது வீடு குடியேறிய பின்னர் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி வந்து சென்று கொண்டிருந்தார்கள். எனவே நான் உடனே அவளைப் பார்க்கச் செல்ல முடியவில்லை. வழக்கம் போல் சற்று ஓய்வு கிடைத்ததும் நான் அவளது வீட்டிற்குக் சென்றேன்.
அவளுக்கு என்னைப் பார்த்ததில் மிக்க சந்தோஷம். பிரிந்து போன உயிர் திரும்பி வந்தது போல மகிழ்ச்சி.
அவள் பேச ஆரம்பித்தாள். நீங்கள் உங்கள் மனைவியோடு வரும் சமயம் கூட வந்தவர்கள் யார் என்று கேட்டாள். நானும் அந்த விவரங்கள் சொன்னேன். அதன் பின்னர் நல்ல வேளை இங்கேயே எனது வீட்டிற்கு அருகிலேயே வீடு பார்த்து குடி வந்து விட்டீர்கள். நான் இனிமேல் அடிக்கடி உங்களைப் பார்க்கலாம் என்று சந்தோஷப் பட்டாள். அதன் பின்னர் எனது வீட்டிற்கு குடி வரச் சொன்னால் பதில் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டீர்கள். அதற்கு நான் நாமாக முடிவு எடுத்து இருந்தால் பின்னொரு காலத்தில் இது ஒரு பெரிய பிரச்னையாக மாற வாய்ப்புண்டு. எனவே நான் அவர்கள் போக்கில் விட்டு விட்டேன். அவர்களாக பார்த்து தான் இங்கு வந்துள்ளேன் என்று சொன்னவுடன் பரவாயில்லை என்று சொன்னாள்.
அதன் பின்னர் வழக்கம் போல் அவளது கரங்களால் பானம் பெற்று பகிர்ந்து பருகி விட்டு இல்லத்திற்கு புறப்பட்டேன்.
அடுத்த நாள் காலையில் நான் அலுவலகம் புறப்பட்டேன். அவள் தனது குழந்தையுடன் மாடியில் நின்று கொண்டிருந்தாள். குழந்தையிடம் என்னைக் காட்டினாள். குழந்தைக்கு மிக்க சந்தோஷம். பாபா என்று சொல்லிக் கொண்டே என்னை அழைத்தது. அவள் மிக்க சந்தோஷத்துடன் என்னை கையசைத்து வழியனுப்பி வைத்தாள்.
அலுவலகத்திற்குச் சென்ற பின்னர் எனது தோழியர் அனைவரும் புது வீடு எப்படியிருக்கின்றது எங்களுக்கு எப்போது ட்ரீட் என்றார்கள். நானும் விவரங்கள் அனைத்தையும் கூறினேன். நீங்களாக வீடு பார்த்து அந்த வீட்டினை பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் பிரச்னைகள் வரும் ஆனால் வீடு பிடித்ததில் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால் நீங்கள் எவ்விதத்திலும் பயப்படத் தேவையில்லை என்று ஆறுதல் சொன்னார்கள்.
நாட்கள் கடந்தன. எனது உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக எனது வீட்டிற்கு வர ஆரம்பித்தார்கள். எனது அண்ணனும் அண்ணியும் எனது வீட்டிற்கு வந்து பார்த்தவுடன் மனதில் ஒரு சந்தேகம். அண்ணி என்னிடம் எப்படி அவளது வீட்டிற்கு பக்கத்திலேயே வீடு பார்த்தாய் என்று ரகசியமாக கேட்டார்கள். வீடு பார்த்தது பேசி முடித்தது அட்வான்ஸ் கொடுத்தது எல்லாம் அவள் வீட்டார் என்று நான் சொன்ன பின்னர் அவர்கள் மன நிம்மதி அடைந்தார்கள்.
அதன் பின்னர் எனது பெற்றோர் வந்தனர். எனது தாயாருக்கு மீண்டும் எனது காதலியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. என்னிடம் உனது கடந்த கால வாழ்க்கை பற்றி மருமகளுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். நான் இது வரை இல்லை என்று சொன்னேன்.
இன்று மாலையில் எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். நான் எங்கே என்று கேட்டதற்கு புறப்படும் சமயம் சொல்கின்றேன் என்று சொல்லி விட்டார்கள். அதன் படி நான் என் தாயாருடன் மாலையில் வெளியில் புறப்பட்ட சமயம் என் மனைவியை அழைத்ததற்கு இரவுக்கு டிபன் தயாரிக்க வேண்டும் எனவே நீங்கள் மட்டும் சென்று வாருங்கள் என்று சொல்லி விட்டாள்.
நான் என் தாயாருடன் வெளியில் புறப்பட்ட சமயம் எனது முதல் மருமகள் வீடு எங்கே இருக்கின்றது அங்கே என்னை அழைத்துக் கொண்டு போ என்று சொன்னார்கள். நான் சரியென்று சொல்லும் சமயம் அவளும் அவளது குழந்தையும் மாடியிலிருந்து எட்டிப் பார்ததுக் கொண்டிருந்தார்கள்.
நான் உடனே அவள் வீடு இது தான் என்று சொன்னவுடன் இவ்வளவு பக்கத்திலா என்று கேட்டு இருவரும் அவள் வீட்டில் புகுந்தோம். குழந்தை வழக்கம் போல் என்னிடம் பாபா என்று சொல்லிக் கொண்டே வந்தது கண்டு எனது தாயாருக்கு மிக்க மகிழ்ச்சி. சின்னஞ் சிறு குழந்தை கூட உன் மீது பாசம் காட்ட ஆரம்பித்து விட்டது என்று சொன்ன படியே அந்த குழந்தையை எனது தாயார் அழைத்தார்கள். அதற்கு அந்த குழந்தை மறுத்து விட்டது.
உடனே அவள் இவர் வந்து விட்டால் குழந்தை என்னிடம் கூட வராது. இவர் திரும்ப செல்லும் வரையில் இவரிடத்தில் தான் இருக்கும் என்று சொல்லி அவள் அழைத்தாள். குழந்தை அதற்கும் மறுத்து விட்டது.
எனது தாயாருக்கு அவள் குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் மென் மேலும் வளர்ந்திருந்தது. ஆனால் அவளை மருமகளாக அடைய முடியவில்லை என்னும் ஏக்கம் குறையவில்லை.
ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்து தனது மனக் கவலைகள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டு அவள் வீட்டிலேயே அவள் கையால் உணவருந்தி மிக்க மனத் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் எனது தாயார் என்னுடன் திரும்ப எனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். என்னிடம் என்னுடைய எல்லாக் கவலைகளும் தீர்ந்தது போல் இருக்கின்றது என்று சொன்னார்கள். மறு நாள் காலையில் எழுந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் நன்றாக எந்த கவலையும் இல்லாமல் நல்ல தூக்கம் என்பது கேட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி.
எனது தாயாருக்கு கவலை தீர்ந்து விட்டது. ஆனால் எனக்கு மட்டும் கவலை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. காரணம் அவளது பிரிவு மற்றும் அவளது நினைவு.