திருமண அழைப்பு
ஒரு முறை அல்ல பல முறை சொந்த ஊருக்கு பெண் பார்க்கச் சென்று கடைசியில் ஒரு வழியாக திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்திற்கான அழைப்பிதழ்கள் என்னிடம் கொடுத்த சமயம் எனது தாயார் என்னிடம் அந்தப் பெண்ணுக்கு உன் அண்ணன் அண்ணியுடன் சென்று கட்டாயம் திருமணப் பத்திரிக்கை கொடுக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அவளை அழைக்காமல் விட்டு விடக் கூடாது என்று அறிவுறை வழங்கினார்.
அதற்காக எனது அண்ணன் அண்ணியுடன் ஒரு நாள் திருமணப் பத்திரிக்கை கொடுத்து அழைக்க வரப் போவதாக முன் கூட்டியே தெரிவித்து விட்டேன். அதன் படி ஒரு விடுமுறை நாளன்று நான் எனது அண்ணன் மற்றும் அண்ணியுடன் அழைப்பு விடுப்பதற்காக புறப்பட்டோம்.
அப்போது எனது அண்ணியார் எங்களுடன் சேர்ந்து யார் யாரை அழைக்கப் போகின்றாய் எனக் கேட்க இந்த ஊரில் உள்ள நமது உறவினர்கள் மற்றும் எனது முக்கியமான நண்பர்கள் என்று கூறினேன். உடன் எனது அண்ணி எனது தாயார் சொன்ன அந்தப் பெண்ணை முதலில் அழைக்க வேண்டும் என்று சொல்ல நான் வேண்டாம். அவளை கடைசியாக அழைப்பது என்றேன். ஏன் என்று கேட்டார்கள். அவள் வீட்டிற்குப் போய் அழைத்தால் நீங்கள் மிகவும் கவலைப் படுவீர்கள். அதன் பின்னர் வேறு யாரையும் அழைக்கத் தோணாது என்று சொன்னேன். சரி அவ்வாறே செய்யலாம் என்று சொன்னார்கள்.
அதன் படி நான் பணியாற்றும் ஊரில் உள்ள அனைத்து உறவினர்களையும் அழைக்கும் அதே சமயத்தில் எனது முக்கியமான பெண் நண்பர்களையும் சேர்த்து அழைத்து வந்தோம்.
அதில் முதலாவதாக எனது கேரளாவைச் சேர்ந்த சிநேகிதி வீட்டிற்குள் நானும் எனது அண்ணியும் சென்றோம். எனது அண்ணன் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று இருந்தார். நான் இரண்டு மூன்று முறை அழைத்தும் வரவில்லை. எனவே எனது அண்ணி அருகில் சென்று அழைத்ததில் அந்தப் பெண் சேலை கட்டாமல் வெறும் பாவாடை ரவிக்கையுடன் இருக்கின்றாள். எனவே உள்ளே வரவில்லை என்று சொன்னதாக சொன்னார்கள். நான் இது கேரளத்து உடை தான் பரவாயில்லை வாருங்கள் எனக் கூற அவர் உள்ளே வர மறுத்து விட்டார்.
எனவே நான் அவளிடம் சென்று காதோடு காதாக விஷயம் சொன்னேன். உடனே அவள் அந்த பீரோவில் உள்ள புடவைகளில் உங்களுக்கு எது பிடிக்கின்றதோ அதனை நீங்களே எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றாள். அவ்வளவு நெருக்கம். அதன்படி நான் பீரோவைத் திறந்து எனக்குப் பிடித்தமான சேலையினை அவளிடம் கொடுத்து அவள் உடுத்திக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் எனது அண்ணன் உள்ளே வந்து திருமணப் பத்திரிக்கை கொடுக்கும் சமயம் நான் உங்களை ஏற்கனவே பார்த்து இருக்கின்றேனே எனக் கேட்க நானும் இவரும் சேர்ந்து உங்களது அலுவலகத்திற்கு வந்தோம். அப்போது தான் பார்த்தீர்கள் என்று சொன்னவுடன் அண்ணனுக்கு ஞாபகம் வந்தது.
அதே போல இன்னொரு பெண் வீட்டிற்கு சென்ற சமயம் தொலைக் காட்சிக்கு நிகழ்ச்சி தயாரிக்க செல்லும் பொருட்டு தயாராகிக் கொண்டிருந்தாள். நானும் எனது அண்ணனும் அண்ணியும் உள்ளே நுழைந்தவுடன் வாருங்கள் என்று வரவேற்று இன்று உனக்குப் பிடித்த சேலையுடன் தொலைக் காட்சி நிலையத்திற்கு செல்லப் போகின்றேன் எனக் கூறினாள்.
அதன்படி எனக்குப் பிடித்தமான ஒரு சேலையைத் தேர்வு செய்து அதனை உடுத்திக் கொண்டு வந்து என்னிடம் மிக மிக அருகில் அமர்ந்து திருமணப் பத்திரிக்கையை பெற்றுக் கொண்டாள்.
நம் இருவருக்கும் பொருத்தம் நன்றாக இருக்கின்றதா என்று எதிரிலே அமர்ந்து இருந்த அண்ணியிடம் கேட்டாள். நீங்கள் மிகவும் அழகாகவும் கலராகவும் இருக்கின்றீர்கள் எனவே மிகவும் நன்றாக இருக்கின்றது என்று என் அண்ணி சொன்னவுடன் இவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் தெரியுமா என்று கேட்டார். அதற்கு என் அண்ணி வீட்டில் விட மாட்டார்கள் என்ற பயம் தான் என்றார்கள் அதனை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் இவருடைய சமூகம் கிடையாது. உங்கள் மொழி எனக்குத் தெரியாது என்று தான் என்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று சொன்னதைக் கேட்ட அண்ணன் அண்ணிக்கு ஒரே ஆச்சர்யம். தொலைக் காட்சியில் வாரா வாரம் மாலை 7.00 மணிக்கு பார்த்த அந்த அழகு முகம் என்னிடம் இவ்வளவு நெருக்கமாக இருப்பது கண்டு.
அது முடிந்தவுடன் முஸ்லீம் பெண் வீட்டிற்கு சென்றோம். எங்களைப் பார்த்தவுடன் அவள் எங்களை அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று பட்டுச் சேலை உடுத்திக் கொண்டு என்னிடம் நன்றாக இருக்கின்றதா என்று கேட்டுக் கொண்டே வந்தமர்ந்தாள். எனது அண்ணி அவளது நிறத்தைப் பார்த்து இவ்வளவு அழகாகவும் சிகப்பாகவும் இருப்பதால் தான் உடல் முழுவதும் மறைத்து ஆடை அணிகின்றார்களா என்று என்னிடம் கேட்டார். நான் உனக்குப் பிடித்திருக்கின்றதா என்றேன்.
அதற்கு உன்னுடைய சிநேகிதிகள் அனைவரும் திரைப்பட நடிகைகளை விட அழகாக இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள். அவளிடம் திருமணப் பத்திரிக்கை கொடுத்தவுடன் அவள் எனது அண்ணியாரிடம் நான் இவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். எனது தந்தை நேரில் வந்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் இவர் ஒப்புக் கொள்ளவில்லை. இவரைத் திருமணம் செய்து கொள்ளும் பாக்கியம் எனக்கும் கிடைக்கவில்லை.
என்னோடு சேர்ந்து முயற்சித்த இன்னொரு பெண்ணுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்று சொன்னது கேட்டு உனக்கு இவ்வளவு போட்டியா என்று கேட்டார்கள். அதன் பின்னர் அவளிடம் திருமணப் பத்திரிக்கை கொடுத்து அழைத்தனர்.
எனக்கு திருமணம் ஆகிவிட்டது ஆனால் என் கணவர் வருடத்தில் 15 அல்லது 30 நாட்கள் தான் இருப்பார் மற்ற நாட்களில் எல்லாம் இவருடன் பொழுது போக்குவது எனக்கு ஜாலியாக இருக்கும் என்று சொல்லி அந்த சுகம் இனி கிடைக்குமா கிடைக்காதா என்பதனை பொறுத்துத் தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அதன் பின்னர் அவளிடமிருந்து விடைபெற்று கடைசியாக எனது காதலி வீட்டிற்குச் சென்றோம்.
குழந்தை நன்கு பேச ஆரம்பித்த படியால் நான் உள்ளே நுழைந்தவுடன் பாபா பாபா என்று பல முறை சொல்லி என்னிடம் ஒட்டிக் கொண்டது. அந்த குழந்தை தன் தாயாரிடம் பாபா வந்துட்டார். சீக்கிரம் வா என்று சொன்னது கண்டு ஒரே சிரிப்பு.
அவளும் நான் எனது பிறந்த நாளன்று அவளுக்கு வாங்கிக் கொடுத்த அந்தப்புடவையை கட்டிக் கொண்டு தயாராக இருந்தாள். எனது அண்ணனும் அண்ணியும் திருமணப் பத்திரிக்கை கொடுத்து அழைத்தார்கள். கூட நானும் சேர்ந்து அழைத்தேன்.
உடனே அவள் எனது அண்ணியை கட்டிப் பிடித்துக் கொண்டு இதுவரை எனக்கு இருந்த ஒரே ஆதரவு இப்போது என்னை விட்டுப் பிரிகின்றது. நான் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. மாதம் ஒரு முறை வந்தாலும் சில நிமிடங்கள் மாத்திரமே இருவரும் பேசிக் கொண்டு இருந்தாலும் என்னுடைய கவலைகளை மறந்து நடைப் பிணமாக உயிருடன் இருந்தேன். நமது பிரிவுக்கு காரணம் என்னுடைய தாயாரும் இவருடைய தந்தையும் தான் என்று சொன்னது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
இப்போது இவருக்கு திருமணம் ஆகி விட்டால் என்னைப் பார்க்க வருவாரா வரமாட்டாரா என்பது தெரியவில்லை. நான் இரண்டு மூன்று மாதங்கள் இவரைப் பார்க்காமல் இருந்தால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும். மேற்கொண்டு இவர் என்னைப் பார்க்காமல் இருந்தால் நான் உயிருடன் இருப்பேனா என்பது தெரியவில்லை என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்.
தாய் அழுவதைப் பார்த்த குழந்தை அம்மா ஏன் அழுற என மழலை மொழியில் கேட்டது. அதற்கு அவள் குழந்தையிடம் உனது பாபாவுக்கு கல்யாணம் என்று சொன்னவுடன் குழந்தை என்னிடம் பாபா நீ அம்மாவை கல்யாணம் பண்ணிக்கோ அம்மா அழ மாட்டா என்று சொன்னது கேட்டு எனது அண்ணன் அண்ணி இருவரும் சோகமாகி விட்டார்கள்.
உடனே எனக்குத் திருமணம் ஆகி விட்டாலும் உன்னைப் பார்க்க வராமல் இருக்க மாட்டேன். கட்டாயம் வந்து பார்ப்பேன். உன்னை விட அழகான தொலைக் காட்சியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் பெண்கள் மற்றும் எனது உடல் நலம் பேணும் பெண்கள் என எத்தனையோ பேர் என்னுடன் பழகிய போது கூட மாதா மாதம் தவறாமல் உன்னை நான் பார்க்க வந்தது போல் திருமணத்திற்குப் பின்னர் கூட நான் உன்னைப் பார்க்க வருவேன் என்று சொல்லி ஆறுதல் கூறினேன்.
அப்போது அந்த குழந்தை என்னிடம் நீ இங்கே இரு போகாத என்று மழலை மொழியில் பேசியது.
அவள் அழுது கொண்டே உள்ளே சென்று காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். எனது அண்ணன் அண்ணி குடித்து விட்டார்கள். நான் வழக்கம் போல் பாதி குடித்து விட்டு மீதியை அவளிடம் கொடுத்தேன். அதனை வாங்கி பருகிய பின்னர் அவள் சற்று சாந்தமடைந்து நம் இருவருக்கிடையே உள்ள உறவு இப்படியே என்னுடைய வாழ்நாள் முடியும் வரை தொடர வேண்டும் என்றாள். நான் சென்ற பின்னர் அழுது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதே என்று அறிவுரை சொன்னேன்.
உடனே எனது அண்ணன் மற்றும் அண்ணி இருவரும் திருமணத்திற்கு எப்போது வருவீர்கள் என்று கேட்டனர்.
அப்போது அவள் என்னுடைய வீட்டில் நடக்கும் விசேஷங்கள் அனைத்தும் இவருடைய ஆலோசனைகளின் படி தான் நடக்கும். இவரைக் கேட்காமல் நான் எதுவும் செய்ய மாட்டேன். இவர் வரவில்லை என்றால் வரும் வரை காத்திருந்து அதன் பின்னர் தான் முடிவு செய்வேன். அதே போல இவருடைய வீட்டில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இருவரும் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டோம். காரணம் இவருடைய திருமண நிகழ்ச்சிக்கு வந்தால் நான் மணப் பெண்ணாக அமர முடியவில்லையே என்று நினைத்து கல்யாணப் பந்தலிலேயே அழுது விடுவேன். அதே போல இனிமேல் நடை பெறப் போகின்ற ஒவ்வொரு சுப காரியங்களிலும் நானும் இவரும் சேர்ந்து செய்ய முடியவில்லை என்னும் ஏக்கம் எனக்கு கட்டாயம் ஏற்படும். அதே போலத் தான் இவருக்கும் ஏற்படும். ஆனால் இவர் என் மீது வைத்துள்ள அன்பும் நான் இவர் மீது வைத்துள்ள அன்பும் நம் இருவரது கடைசி மூச்சு வரை தொடரும். யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது என்று சொன்னாள்.
திருமண நாளன்று திருமண மண்டபம் முழுவதும் சந்தோஷம் நிரம்பி வழிந்து ஆனந்தக் கண்ணீராக இருக்கும். இங்கே நான் மட்டும் தனியாக எனது குழந்தையுடன் கண்ணீரும் கம்பலையுமாக சோகமாக அழுது கொண்டே இருப்பேன். அந்த சோகம் எத்தனை நாள் என்னிடத்தில் இருக்கும் என்பதனை என்னால் இப்போது சொல்ல முடியாது என்று சொன்ன சமயம் வெளியில் போயிருந்த அவளது கணவர் உள்ளே நுழைந்தார்.
அவரிடம் மீண்டும் ஒரு திருமண பத்திரிக்கை கொடுத்து அழைத்து விட்டு சற்று நேரத்தில் இல்லம் திரும்பினோம்.
வீட்டிற்கு வந்து எனது அண்ணி இரவு முழுவதும் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தார்.
மறு நாள் என்னிடம் உன்னுடன் பழகியவர்கள் எல்லோரும் இவ்வளவு அன்பாக இருக்கின்றார்கள். அதனால் தான் உன் தாயாருக்கு அவள் தான் மருமகளாக வரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தும் அது நிறைவேறாத காரணத்தால் அவளது நிலைமை தெரிந்து உடல் நலம் இல்லாமல் போய் விட்டது. அதற்காகத் தான் அவர் உனது கடந்த கால உறவுகளை கட்டாயம் அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை பிறப்பித்து உள்ளார்கள் என்று சொல்லி இது போல வீட்டிற்குச் சென்று அழைக்க வேண்டியவர்கள் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டார். நான் நிறைய என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டேன்.