எதிர் காலத்தைப் பற்றி திட்டமிடல்.
என்னால் உங்களுக்கு மனக் கஷ்டம் வருகின்றது என்றால் உங்களுடைய மனக் கஷ்டம் நீங்க நீங்கள் என்ன முடிவு செய்கின்றீர்களோ அதனை தாராளமாக செய்யுங்கள். அதற்கு நான் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டேன் ஏனெனில் நம் இருவரது சந்தோஷம் நம் இருவருக்கும் முக்கியம் என்று என் காதலி மனமுவந்து ஆலோசனை சொன்ன பின்னர் நானும் அவள் வாழும் ஊரிலிருந்து வெளியூர் செல்வது என முடிவெடுத்து அடுத்த மாதம் வெளியூரில் பணியில் சேர்ந்து கொண்டேன். ஆனால் அவளிடம் மாதம் ஒரு முறைக்குப் பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடம் ஒரு முறை கட்டாயம் வந்து சந்திப்பதாக வாக்குறுதி அளித்து வந்தேன்.
புதிய பணியிடத்தில் வேலையில் சேர்ந்த பின்னர் 10 மாதங்கள் கழித்து மீண்டும் பார்க்கச் சென்ற சமயம் அவள் முதலாவதாகக் கேட்ட கேள்வி உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்பது தான். நான் தற்போது இந்த ஊருக்கு மனைவியுடன் வந்துள்ளேன் ஆனால் உனது இல்லத்திற்கு அழைத்து வரவில்லை என்று சொன்னேன். அதற்கு அவள் உங்கள் மனைவி என்னைப் பார்க்க விரும்பவில்லையா என்று கேட்டாள். நான் அது பற்றி எதுவும் கேட்டு என்னை சங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.
அப்போது சுட்டிக் குழந்தை விஜி என்னைப் பார்த்த சந்தோஷத்தில் பாபா பாபா என்று சொல்லிக் கொண்டே வந்து என் மடியில் அமர்ந்து கொண்டது. நான் என்னுடன் கொண்டு சென்ற இனிப்புகளையும் சாக்லெட்களையும் பெற்றுக் கொண்டு மிக்க சந்தோஷமடைந்தது.
ஆறு மாதத்தில் வருவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் ஆனால் வரவில்லை என்று சொல்லி காரணம் கேட்டாள். அதற்கு நான் ஆறு மாதத்தில் வருவதாக இருந்தது. ஆனால் சொந்த ஊர் செல்ல வேண்டிய கட்டாயம். ஏனெனில் வளைகாப்பு என்றேன். தற்போது எத்தனை மாதம் என்று கேட்டாள். அதற்கு நான் 8 மாதங்கள் என்று சொல்லி விட்டு உனக்கு எத்தனை மாதங்கள் என்று கேட்டேன். அதற்கு அவள் மிக்க சந்தோஷத்துடன் உங்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைப் பார்க்கும் பாக்கியம் ஏற்படப் போகின்றது என்று சொன்னாள். ஏனெனில் அவளும் 8 மாத கர்ப்பம்.
முதலாவது குழந்தைக்கு பெயர் சூட்டியது போல எனது இரண்டாவது குழந்தைக்கும் நீங்கள் தான் பெயர் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
அதற்கு நான் உனக்கு அடுத்து பிறக்கும் குழந்தைக்கு ஒரு கடவுள் பெயரினை வைக்கும் படி அறிவுறை கூறினேன்.
அதற்கு அவள் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வது என்று கேட்டாள். அதற்கு நான் இரண்டாவது குழந்தைக்கு கடவுள் பெயரினையும் அடுத்த குழந்தைக்கு நடிகர் அல்லது நடிகை பெயரினையும் வைக்கலாம் என்று சொன்னேன். அது போலவே எனது வீட்டிலும் பெயர் வைத்து விடுகின்றேன் என்று சொன்னேன். இருவருக்கும் மிக்க சந்தோஷம்.
நான் எனக்குப் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் கடவுள் பெயரினையும் பெண் குழந்தையாக இருந்தால் உனக்கு முதலாவாதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கு வைத்துள்ள பெயரில் பாதியுடன் வேறு பெயர்கள் சேர்த்து ஒரு பெயரினையும் வைக்க உத்தேசித்துள்ளேன் என்று சொன்னேன்.
அதன் பின்னர் உனக்கு உதவி ஒத்தாசைக்கு யாரும் வரவில்லையா என்று கேட்டதற்கு நமது காதலுக்கு தடையாக இருந்த எனது தாயார் காலமாகி விட்டார்கள். எனவே நான் இனிமேல் உறவினர்களைப் பார்க்கும் பொருட்டும் வேறு எந்த காரணங்களுக்காவும் சொந்த ஊர் வர முடியாது. எனவே என்னைப் பார்ப்பதாக இருந்தால் நீங்கள் தான் என்னைத் தேடி இங்கே வர வேண்டும். இனி வருங்காலங்களில் என்ன நடந்தாலும் எல்லாம் இங்கு தான் நடக்கும் என்னுடைய இறுதிப் பயணமும் சேர்த்து என்று சொன்னாள். அது தவிர தூரத்து உறவினர்களையும் அவரது உறவினர்களையும் பார்ப்பதற்கோ அல்லது யாராவது உறவினர் வீட்டு விசேஷங்களுக்குத் தான் இனிமேல் சொந்த ஊர் செல்ல வேண்டியிருக்கும் அது எப்போது என்று முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது என்று மிகுந்த வேதனையுடன் கூறியது கேட்டு நான் வருத்தமடைந்தேன். நான் அவளது தாயார் மறைவுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன்.
உடனே அவள் என் தாயார் மறைவுக்கு நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டாம்.
தீபாவளித் திருநாளன்று தாங்கள் என்னை முறையாகப் பெண் கேட்டு வந்த சமயம் உங்களது கோரிக்கையினை ஏற்காமல் உங்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி இரத்தக் காயம் ஏற்படுத்தி இந்த பாழுங்கிணற்றில் தள்ளிய என்னுடைய தாய் இருந்தாலும் ஒன்று தான் இறந்தாலும் ஒன்று தான் என்னும் முடிவுக்கு நான் எப்போதோ வந்து விட்டேன் என்று சொன்னாள்.
முதலாவது குழந்தை வயிற்றில் சுமந்து கஷ்டப்படும் சமயம் உங்கள் அளவிற்குக் கூட ஆறுதல் சொல்ல வராததாலும் வளைகாப்பு மற்றும் தலைப்பிரசவத்திற்குக் கூட சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லாததாலும் நான் என்னுடைய தாயாரை நான் நினைப்பதே இல்லை என்று வேண்டா வெறுப்புடன் சொன்னது கேட்டு நான் என்ன சொல்வது என்றே தெரியாமல் மௌனமாகவே இருந்தேன்.
என் தாயார் என்னை முன்கூட்டியே இங்கு வந்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தால் இரயிலிலேயே பிரசவ வலி ஏற்பட்டு நடு வழியிலே உள்ள மருத்துவ மனையில் குழந்தை பிறந்திருக்காது. அத்துடன் பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு முன்கூட்டியே அழைத்துச் சென்றிருந்தால் சொந்த ஊரில் பிரசவம் நடந்து குழந்தையைப் பார்க்க வரும் என்னுடைய உறவினர்கள் அனைவரையும் ஒரு முறையாவது மீண்டும் சந்தித்து இருக்க முடியும் உங்களையும் சேர்த்து. ஆனால் நடு வழியிலேயே குழந்தை ஈன்றெடுதத காரணத்தால் ஐந்தாம் நாளே மீண்டும் இந்த சிறைக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எதற்கும் வழி இல்லாமல் என்னை திருமணத்திலிருந்து இங்கேயே சிறையில் அடைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே அழ ஆரம்பித்து விட்டாள்.
நான் உடனே அழவேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நமது பழைய பழக்க வழக்கங்கள் உனக்கு ஞாபகம் இல்லையா எனக் கேட்க அவற்றை நான் எனது இறுதி மூச்சு வரைக்கும் மறக்க மாட்டேன் என்று சொன்னாள்.
பின் எங்கே குடிப்பதற்கு எதுவும் கொடுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவள் குடிப்பதற்கு பானம் கொடுத்து விட்டால் உபசரணை முடிந்து விட்டது என்ற காரணத்தால் நீங்கள் புறப்பட்டு விடுவீர்கள். இன்று நிறைய பேச வேண்டும் போல இருக்கின்றது. அதற்காகத் தான் நான் கொடுக்கவில்லை என்று சொன்னாள்.
அதற்கு நான் வேறு யாராவது வருவதற்கு முன் நானும் நீயும் உன் குழந்தையும் சேர்ந்து சிற்றுண்டியோ அல்லது பானமோ முடித்து விடலாமே என்றேன். அவளும் சரியென ஒப்புக் கொண்டு சிற்றுண்டி முடித்து விட்டு பானம் பருகினோம் வழக்கம் போல. அவளுக்கு மீண்டும் ஒரு சந்தோஷம் புத்துணர்ச்சி.
இதே போன்ற சந்திப்புகள் பல தொடர்ந்து கொண்டே பல வருடங்கள் கடந்தோடின. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவள் என்னைச் சந்திக்கும் நாள் எப்போது வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவாள். நானும் அவளைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று ஏக்கத்தில் இருப்பேன். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவளை தவறாமல் சந்தித்து வந்தேன். இரண்டாவது குழந்தை மற்றும் மூன்றாவது குழந்தைகள் பிறந்தவுடன் நேரில் சென்று பார்த்து பரிசுப் பொருட்கள் வழங்கி மாதம் தவறாமல் அவளைப் பார்த்து வந்து அவளது சந்தோஷம் குறையாமல் பார்த்துக் கொண்டேன்.
நாம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த பின்னர் மனம் விட்டுப் பேசி மகிழ்ந்து வரும் வேளையில் இருவரது குழந்தைகளும் வளர்ந்து விட்டன.
இருவருடைய மகள்களும் பூப்பெய்து திருமண வயதினை அடைந்த போதிலும் கூட நம் இருவருடைய எண்ணங்களும் நினைவுகளும் இன்னும் நாம் ஆரம்ப காலத்தில் இருந்தது போல் இரட்டை சடை பாவாடை தாவணியுடன் தான் இருக்கின்றது. நம் இருவருக்கும் வயதாகி விட்டது வயதுக்கு வந்த குழந்தைகள் நம்மிடத்தில் இருக்கின்றார்கள் என்பதயும் மறந்து நம் இருவருடைய நினைவுகள் எண்ணங்கள் இளமையாகவே இருக்கின்றன. இந்த இளமையான நினைவுகள் எப்போதும் தொடரும் என்பது நம் இருவருடைய மன நிலை.